மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம் மழைநீர் சேமிப்போம்

குழிதோண்டி புதைத்தேன், நீ
குலம்காக்கப் பிறந்தாய்
மண்கொண்டு மறைத்தேன், நீ
மழைநீரால் வளர்ந்தாய்

பொழுதுகள் புரண்டோட, நீ
பூவாகச் சிரித்தாய்
கையேந்தி வருவோர்க்கு, நீ
காயாக வந்தாய்

கல்கொண்டு அடித்தும் , நீ
கனியாக விழுந்தாய்
நெருப்பாகும் வெயிலில் நீ
நிழலாக நின்றாய்

சுமைதாங்கி என்னை , நீ
சுகமாக்கிப் பார்த்தாய்
சுவாசிக்கும் மூச்சை ,நீ
சுலபமாய்த் தந்தாய்

உடல்பொருள் உலகிற்கு , நீ
உபயமாய்க் கொடுத்தாய்
உனக்கேது மில்லாமல் , நீ
உயிர்தியாகம் செய்தாய்

விழுந்தாலும் மண்ணில் , நீ
விதையாக விழுந்தாய்
கண்ணீரில் அழுவோர்க்காய் நீ
கடைசிவரை எரிந்தாய்..

சித்திரமாய் உன்வாழ்க்கை அது
சிதைந்தாலும் அழகாகும்
பத்திரமாய் வைத்தாலும் அது
பலகாலம் பேர்சொல்லும்

உனையின்றி உலகத்தில் ஒரு
வீடு இங்கில்லை
ஓரறிவு உன்னைப்போல்
ஆறறிவு வாழ்வதில்லை
அறம்காக்கும் உன்வாழ்க்கை
அழிக்கின்ற சிந்தைக்குள் –உனை
உருவாக்கு மொருஎண்ணம்
வாராமல் போவதேனோ..?

சிந்திப்போம்..!
மரம் காப்போம்..!
மழைநீர் சேமிப்போம்..!

எழுதியவர் : ராக்கிங் ஜாக் (1-Jul-15, 6:39 pm)
பார்வை : 528

மேலே