வேலைவாய்ப்பு கனவு

மழைக்கு அடுத்து மக்களின்
மிகப்பெரிய எதிர்பார்ப்பு
வேலைவாய்ப்பே.!

கானல் நீர் தானோ
இளைஞர் கண்ணில்
வேலை.!

பரிதவிப்பு தானோ
பெற்றோர் நெஞ்சில்
இந்த வேலை.!

இளைஞர்கள் ஒரு கையில்
ஏந்தி நிற்பது சான்றிதழ்
என்றால் மறுகையில் சாவே.!

கண்ணாடியின் பிம்பத்தில்
சான்றிதழ்களின் பிரதிபலிப்பு
திருவோடே.!

சான்றிதழ்கள் ஓர்
செல்லா நோட்டோ.!

இங்கே
பழைய காகித
கடையில் கூட
சான்றிதழ்களின்
மதிப்பு குறைவே.!

படித்த பட்டம் காற்றில்
பறக்க விட்டு ரசிக்கவே.!

கைரேகை அழிந்ததே
மிச்சம் வேலைவாய்ப்பு
கதவுகளை தட்டி.!

இங்கே.!

அரசாங்க வேலைவாய்ப்பு
ஓர் குதிரைக்கொம்பு.!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு
ஓர் பகல் கனவு.!

வேலைவாய்ப்பு முகாம்கள்
ஓர் கண்துடைப்பு.!

அரசு அலுவலகத்தில்
வேலைக்கு பதிவது
ஓர் வரலாற்று சுவடு.!

வாய்ப்புத்தேடி அலைவது
செருப்புகள் தேயவே.!

வீடுதேடி வரும்
வேலைவாய்ப்போ
வாசல் கதவை
உடைத்துக்கொண்டு
வரும் ஸ்ரீதேவியை போல.!

ஆனால்
எல்லா கதவுகளும்
உடைவதில்லையே.!!

நூறு சதவீத
வேலைவாய்ப்பு
கல்லூரிகளின்
அறிக்கையில் மட்டுமே.!

தானாக வந்து வேலை
கொடுப்பதோ அடிமைக்கு
ஆள்சேர்ப்பே.!

வேலைக்கு
சொல்லி வைப்பதோ
செவிடன் காதில் ஊதிய சங்கே.!

வாய்ப்பிற்கு வரிசையில்
நிற்பதும் அனுமார் வாலின்
நீளம் காண்பதும் ஒன்றே.!

ஒரு காலியிடத்திற்கு
ஓராயிரம் விண்ணப்பங்கள்.!

வேலைவாய்ப்பிற்கான
விண்ணப்பங்கள் நாம்
பூர்த்தி செய்து பழகேவ.!

வேலைவாய்ப்பிற்கான
போராட்டங்கள் எல்லாம்
காலவிரயமே.!

நேர்முக தேர்வுகள்
ஓர் பொழுதுபோக்கு
விளையாட்டே.!

அங்கு உன் புறஅழகே
உனக்கு புதைகுழியாகுமே.!

மதிப்பெண்கள் எல்லாம்
மரியாதை இழக்குமே.!

சிபாரிசுகள் போலி
அடையாளங்களே.!

இங்கு
சில்லறைகள் மட்டுமே
சிறப்பு விருந்தினர்கள்.!

வேலையில்லாதவனுக்கு
சமுதாய பரிசு சாடைபேசும்
சவுக்கடியே.!

வேலைக்கு காத்திருந்தால்
சோம்பேறி.!

வேறு வேலை செய்தால்
துப்பில்லாதவன்.!

காதல் நினைவில் கண்கள்
கண்ணீர் குளமானால்.!

வேலை கனவில் கண்கள்
கண்ணீர் கடலாகுமே.!

வேலைவாய்ப்பிற்கு
ஏங்கும் நெஞ்சம்
காதல் வலியையே மிஞ்சுமே.!

இந்தியாவின் தூண்கள்
தாங்கள் நிற்கவே
தடுமாறுகின்றனவே.!

இதற்கெல்லாம் சட்டம்
வழக்கம் போல் தன்
கடமையை செய்யுமோ.!

ஆம் வேடிக்கை பார்க்கும்.!

இவர்கள் வாய்ப்புத்தேடும்
போராட்டத்திற்கு இவர்கள்
சான்றிதழ்களே போர்க்கொடி.!

இவர்கள் கொடி பறக்க
காற்று என்று வீசுமோ.???

-பார்த்திபன்

எழுதியவர் : பார்த்திப மணி (2-Jul-15, 9:34 pm)
பார்வை : 459

மேலே