பயணிக்கப் பழகி விட்டோம்

உரமிட்டு விளைச்சல் கூட்டி
****உணவாக நஞ்சை உண்டோம் !
தரமான பொருளை விட்டு
****தள்ளுபடி பொருளைக் கேட்டோம் !
மரங்களெல்லாம் வெட்டிச் சாய்த்து
****மழைவரவே தவமும் செய்தோம் !
இரக்கமின்றி சிதைத்து விட்ட
****இயற்கையதன் சீற்றம் கண்டோம் ....!!!

விளைநிலத்தை வளைத்து வாங்கி
****விவசாயம் நலியச் செய்தோம் !
துளையிட்டு மண்ணுள் நீரை
****துப்புரவாய் உறிஞ்சி விட்டோம் !
இளைஞர்க்கு உறவின் மேன்மை
****எடுத்தியம்ப மறந்து விட்டோம் !
உளைந்திட்ட முதியோர் பேண
****உள்ளமின்றி ஒதுங்கி நின்றோம் ...!!!

ஆலைகளின் கழிவை ஆற்றில்
****அப்படியேக் கலக்கக் கண்டோம் !
மூலைமுடுக் கெங்கும் கட்சி
****விளம்பரங்கள் கண்ணில் கண்டோம் !
வேலையில்லா ஆளைக் கண்டால்
****விமர்சித்து வாட வைப்போம் !
பாலைவன வாழ்வில் நாமும்
****பயணிக்கப் பழகி விட்டோம் ...!!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (2-Jul-15, 10:24 pm)
பார்வை : 52

மேலே