தெய்வம் சான்ற திறல் -4
தெய்வம் சான்ற திறல்-4.
மிக ஏழையாய் இருந்த ஒருவன் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தான். ஆயினும், அவன் தெய்வ பக்தியில் சிறந்து விளங்கினான். அன்றாடம் அவன் கடவுளிடம்,:ஆண்டவா, எனக்கு ஏதாவது ஒரு லாட்டரியில் ஒரு கோடி விழவேண்டும்’” என தவறாமல் ஜெபித்து வந்தான். அவனுக்கு 60 வயது ஆன போது அவன் ஒரு நாள் இரவு மனம் நொந்தவனாக கடவுளிடம் முறையிட்டான். ”உன்னை மறவாத என்னை, என் கூக்குரலை நீ கேட்க மாடாயா” எனக் கேட்டு விட்டு படுத்து விட்டான். அன்று இரவு ஒரு வான தூதர் அவனிடம் வந்து நீ கடவுளிடம் என்ன கேட்டாய்?” எனக் கேட்டது. அவனும் தனக்கு லாட்டரியில் ஒரு கோடி பரிசு பெற வேண்டும் என்ற தனது விருப்பத்தைத் தெரிவித்தான். அதற்கு அந்த வான தூதர், “அப்படியானால் நீ முதலில் ஒரு லாட்டரி சீட்டு வாங்கு” எனக் கூறி மறைந்து விட்டார்.
இப்படித்தான் நாம், தகுதி இல்லாமல் பலவற்றிற்கும் ஆசைப்பட்டுக் கடவுளைக் கேட்டு கடைசியில் கடவுள் ஏமாற்றி விட்டார் என நொந்து கொள்கிறோம். உண்மையில், வாழ்வில் நன்மையும் தீமையும் மனிதர்க்கு விளைவது உறுதி. வாழ்வில் சோதனை வருவது மிக நிச்சயமான ஒன்று என்பதாலேயே இறைவனைப் பார்த்து வேண்டும் பொழுது, “சோதனையில் எங்களை விழ விடாதேயும், தீமையில் இருந்து எங்களை காத்தருளும்” என வேண்டுமாறு தன்னுடன் இருந்தவர்கட்கு இயேசு கிறிஸ்து கூறினார்.
நல்லவராகிய கடவுள், எல்லாம் வல்ல கடவுள், தம்மை வணங்கும் அடியார்க்கு தீமையை ஏன் அனுப்ப வேண்டும். அது அநீதி அல்லவா என்ற கேள்வி மனதுள் எழுகிறது. இறைவன் நம்மோடு இருக்கிறார் என்றால் உலகில் அநீதி தழைத்தோங்குவதையும், திருடர்களும் கொள்ளைக்காரர்களும் நம் கண் முன்னே சுகமாக வாழ்வதையும் நாம் காணும்போது, கடவுள் எங்கே இருக்கிறார் என விரக்தியில் கேட்டும் விடுகிறோம். இது குறித்து வேதாந்தத்தில் அத்துவீதியம் எனும் பிரிவில் பிரம்ம சூத்திரங்கட்கு விளக்கம் அளிக்க முற்பட்ட ஆதி சங்கரர் இதற்கான பதிலை விளக்கமாக எடுத்து உரைத்து உள்ளார்.
“இறைவன் பிற காரணிகளைக் கருத்தில் கொள்வதால், சார்பு நிலையோ கொடூரத்தன்மையோ கடவுளுக்கு இருப்பதாகக் கொள்ள இயலாது எனும் பிரம்ம சூத்திரம் 2.1.34 க்கு விளக்கம் அளிக்க முற்படுகையில் இவ்வாறு விளக்குகிறார். ஏனெனில் ஒரு தனிநபர் செய்யும் நன்மை தீமைகளைக் கருத்தில் கொள்வதால், ஒரு நபர் வாழ்வில் இன்பமோ துன்பமோ துய்க்கிறார் எனில் அது அவர் முப்பிபிறவியில் செய்த நன்மை தீமை எனும் கருமப் பயனைப் பொறுத்து அமையும். இந்த கூற்றின் அடிப்படையில் நாம் சற்று சிந்தித்தோமெனில் முற்பிறவியில் மட்டும் அல்லாமல் இந்த பிறவியிலும், கணியன் பூங்குன்றனாரின்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
எனும் கூற்றினை நமது வாழ்வில் நடந்த நிகழ்வுகளை ஒப்பிட்டு பார்த்தோமெனில் துன்ப நீக்கமும் இன்ப ஆக்கமும் நமது கைகளில்தான் உள்ளது என்பது புரியும். “நான் யார்க்கு என்ன கெடுதல் செய்தேன், எனக்கு ஏன் இந்த துன்பம்” என அரற்றுவது நம்மை நாமே ’நல்லவர்’ என எண்ணிக் கொள்ளும் பொய்யை உண்மையென நம்பும் மாயை என்பதை உணர்வதற்கு, அதாவது தன்னிலை அறிவதற்கும் கடவுளின் அருள் வேண்டும்.
அப்படி ஆயின், சங்கரரின் கூற்றுப்படி ஆதியில் எவருமே இல்லாத நிலையில், கருமப் பயனை கருத்தில் கொள்ள இயலாதே என வாதம் செய்வோம் எனில், ஒரு செயலின் பலனை, நன்மை தீமை என வேறுபடுத்தப்படாத நிலையில், இந்த பிறவிகளோ, அதனக் கடந்து செல்லும் நிலைகளுக்கோ துவக்கம் என்பது கிடையாது எனும் பிரம்ம சூத்திரம் 2.1.35ன் விளக்கமக அவர் கூறுவது பின் வருமாறு ஆகும்.
படைப்புகளின் ஆரம்ப கட்டத்தில் முற்பிறவி என எதுவும் கிடையாதே என்பதால் கருமப்பயன் என்றும் இருந்திட இயலாதே என ஒருவர் வாதிடுவர் ஆயின், அது அவ்வாறில்லை என்றும், பல எண்ணிக்கையுள்ள படைப்புச் சுற்றுகட்கு ஆரம்பம் என்பதே கிடையாது என்றும் கூறுவர்.
மேலும், இதுவே அளவை இயலின்படி சரியானதும் வேத ஆகமங்களின்படி பொருத்தமாயும் உள்ளது எனும் பிரம்ம சூத்திரம் 2.1.36 க்கு தனி ஒரு விளக்கத்தை இவ்வாறு அளித்துள்ளார்.
ரிக் வேதம் 10.190.3 இன்படி, நிர்வகிப்பவர் முந்தைய படைப்புச் சுற்றினைப் போலவே, சூரிய சந்திரனைப் படைத்தார். இது படைப்புச் சுற்றுகளில் தொடக்கச் சுற்றுகளைச் சுட்டிக் காட்டுகிறது என்பதால் எண்ணற்ற படைப்புச் சுற்றுகட்கு ஆரம்பமென்பதில்லை”
இவ்வாறு விளக்குவதன் மூலம் ’தீமை இவ்வுலகில் இருப்பதற்கு காரணம் ஒரு தோற்றமே.. ஏனெனில், ஒருவர் முற்பிறவியில் செய்த நன்மை தீமையின் கருமப் பயனையே இப்பிறவியில் அறுக்கிறார் என்பதால் அது இறைவனின் சரியான நீதிக்கும், அனைத்து மயத்திற்கும் எல்லாம் வல்லமைக்கும் சாலப் பொருந்துவதாய் உள்ளது’.
விவிலியக் கூற்றுகளின்படி, இறைவார்த்தைகள்,”ஏழு தலைமுறைக்கும் உன் பாவம் உன்னைப் பின் தொடரும்” என்பதும், எளியோர் தாழ்ந்து வலியோர் வாழ்வது சரியோ என்பதற்கு “உன்னுடைய நியாயம் என்னுடைய நியாயம் அல்ல” என்பதும் இதனையே பிரதிபலிக்கின்றன.
இறைவனின் அருள் பெற்ற வாழ்வில், உயர்மட்ட அளவில், நன்மை தீமை என்றெல்லாம் இருக்காது. ஏனெனில், இவை உலக வாழ்வில் ஒரு நபரின் செயல்களைப் பொறுத்து அமைவது. எனவேதான், ஒரு ஞானி, இந்த உண்மை இயல்பினை நன்கு உணர்ந்தவர் நன்மை, தீமை எனும் இந்த இருமைக்கும் அப்பாற்பட்டவராய் இருக்கிறார்.. ’கடவுள் இருக்கிறார்’ என்பதை வலியுறுத்தவே சங்கரர் இவ்வாறு வாதாடுகிறார். அவரது வாதப்படி, ஒரு நபரின் உண்மையான கரும—செயல்பாடுகள் எப்போதோ உள்ள ஒரு எதிர்காலத்தில் தக்க விளைவுகளைக் கொணர இயலாது. அதைப் போலவே உணர்ச்சிகட்கும் உண்மைக்கும் அப்பாற்பட்ட, அறிவுபூர்வமல்லாத அதிர்ஷ்டம் போன்ற அம்சங்களையும் நாம் கட்புலனாகாதவை என்பதுடன் அது செயல் மற்றும் விளைவு என்பதன் தத்துவார்த்த இணைப்பாகக் கொள்ளாமல், பலன்கள் ஈஸ்வரன் எனும் பரம்பொருளால் மட்டுமே நமக்கு நிர்வகித்து வழங்கப்படுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
மற்றொரு கோணத்தில், பார்க்கும்போது தீமை என்பது இருக்கிறது, ஆயினும் இல்லை. ஏனெனில், ஆன்மாக்கள் நிரந்தரம் ஆனவை என்பதால் அவை இறைவனால் வெறுமையினின்று படைக்கப்படவில்லை. ஆன்மாக்கள் ஆரம்பமற்ற அறியாமைக்கு கட்டுப்பட்டுள்ளன.. இந்த அறியாமையே இயற்கையின் விளைபொருட்களாகிய, உடல், பொருள், சக்தி ஆகியவற்றை தவறாக அடையாளம் கண்டு துன்பத்தில் வீழ்கிறது. இதன்படி, அறியாமையே தீமைக்குக் காரணம் என்பதுடன் இந்த அறியாமைக்கு காரணம் என எதுவும் இல்லை. ஏனெனில் இயற்கையான காரணங்களால் துன்பப்படுவது முற்பிறவியில் செய்த இயற்கையான கருமச் செயல்களின் பலன்களே.
இந்த அறியாமையின் ஆட்சியில், நன்மையும் தீமையும் ஒரு நபரின் செயல்பாடுகள் என்றால், இவற்றின் பலனை இறைவனே ஒருவருக்கு அனுபவிக்க அளிப்பதுடன் இந்த துன்பத்தை குறைக்கும் ஆற்றலும் அவருக்கு உள்ளது. அத்துவீதிய மறைபொருள் கூறுவது என்னவெனில், ஒவ்வொரு வேறுபட்ட நபரும் உண்மையில், ஒரு நினைவு, ஒரு கனவு, அல்லது ஒரு இறை அனுபவம் பெற்றிட அவரை இறைவன் தம்மை நினைக்கும்படி படைக்கிறார். எனவே இறைவனே, ஒவ்வொரு படைப்புப் பொருளாக மாறுவதுடன், அதனுடன் அனுபவித்து, கால வெளியில் ஒரு குறிப்பிட்ட அளவு வேண்டுமென்றே அந்த படைப்புப் பொருளுக்கு ஒரு வாழ்க்கை அனுபவத்தை அருளிச் செய்கிறார். அத்துவீதியமாக கூறும்போது ஒவ்வொரு துன்பத்தையும் வலியையும் இறைவனே அனுபவிக்கிறார்; மதிப்பிழந்து போவதும், ஒவ்வொரு மரணமும், தனி நபர் எனும் தோற்றத்தையும் அனுபவிப்பதும் அவரே.
நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை,
நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாயை மாயையோ?
அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
எனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாற தெங்ஙனே.
எனும் சிவ வாக்கியரின் சிவவாக்கியம் இதனையே வலியுறுத்துகிறது.
ஒரு தனி மனிதனின் கருமச் செயல்களினால் நன்மை மற்றும் தீமைகள் விளைகின்றன. கோடரி ஒன்று தானாக இயங்காமல் அதனை ஒருவர் எடுத்து வீசும்போது இயங்குவது போல உணர்வற்ற பொருட்கள் தாமே இயங்குவது கிடையாது. ஏனெனில், கர்மாவின் சட்டப்படி அது ஒரு அறிவற்ற உணர்ச்சியற்ற சட்டம் என்பதால் சங்கரர், உணர்வுபூர்ணமான பரம்பொருள் என ஒருவர் இருந்தால்தான் ஒரு மனிதரின் கருமப் பலனாகிய நன்மை தீமைகளைப் பற்றி நங்கு உணர்ந்து உரிய பலன்களை அம்மனிதன் அறுப்பதற்கு காரண கர்த்தாவாக இருக்கிறார் என்கிறார்.
இவ்வாறு இறைவன் மனிதரின் சூழலைப் பாதிப்பதுடன், அணுக் கூறு முதலாக மற்றும் எந்தெந்த ஆன்மாக்கள் மறு பிறவி அடைகின்றனவோ அதற்குத் தேவையான தக்க உடலைத் தயாரித்து சரியான ஒரு ஒழுங்கு முறையில் அம்மனிதர்கள் கர்மப் பலன்களை தக்கவாறு அனுபவிக்க வைக்கிறார். இவ்வாறு, ஒரு இறைப் பண்புள்ள நிர்வாகி, கர்மாவுக்கான கண்காணிப்பாளர், அதாவது கடவுள் இருந்தாக வேண்டும்.
இந்து வேதாந்தம் பயிற்றுவிக்கும் ஆறு பாரம்பரிய பிரிவுகளில் நியாயப் பிரிவு, கடவுள் இருக்கிறார் என்பதற்கு ஒரு வகை சாட்சியே கர்மா எனக் கூறுகிறது. இவ்வுலகில் சிலர் மகிழ்ச்சியுடனும், சிலர் துன்பப் படுவதையும் காண்கிறோம். சிலர் பணக்காரர்களாகவும் சிலர் ஏழைகளாகவும், உள்ளனர். நியாயவாதிகள், இதற்கான காரணம் கர்மா என்றும் மறு ஜென்மம் என்னும் கருத்துக்களில் அடங்கி உள்ளது என்பர். ஒரு மனிதனின் செயல்பாடுகளின் விளைவு அம்மனிதனின் கைக்குள் எப்போதும் அடங்கியதாக இல்லை, ஏனெனில், அம்மனிதர் அதனை இயக்கும் முகவர் மட்டுமே. எனவே செயல்பாடுகளின் பலன்களை பகிர்ந்தளிப்பவர் ஒருவர் இருக்க வேண்டும், அந்த ஒருவரே பரம்பொருளாகிய இறைவன்.
உளதுஇலது என்றலின் எனதுடல் என்றலின்
ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின் கண்படின்
உண்டிவினை இன்மையின் உணர்த்த உணர்தலின்
மாயா இயந்திரத் தனுவினுள் ஆன்மா
--சிவவாக்கியம்.
எனும் சிவவாக்கியம் இறைவனுக்கும் ஆன்மாவுக்கும் உள்ள தொடர்பினை விளக்குவதால் அது குறித்து பின் வரும் தொடரின் ஆய்வோம்.

