தூண்டில் மீன்கள்
“உன்னோட பைக் சவுண்ட கேட்டாலே யேங் உயிரே ஏங்கிட்ட திரும்பி வந்த மாதிரியிருக்குடா… நீயில்லாம என்னால வாழவே முடியாது போலிருக்குடா… எப்பவும் உங்கூடவே இருக்கனும் போல இருக்கு நீ என்னோட இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு எவ்வளவு முக்கியம் தெரியுமா? அந்த நேரத்துல வீணா வேறெதுவும் பேசி நேரத்த வேஸ்ட் பண்ணாதே கடைசி வரைக்கும் ஏங்கூட இப்படியெ இருப்பில்ல… உனக்கு ஏம்மேல பாசம் இல்லாட்டிக் கூட பரவாயில்ல சும்மா பாசமா இருக்குற மாதிரி நடிக்கவாவது செய் ஏன்னா? உன்ன விட்டா எனக்கு வேற யாருமே இல்லடா நான் உனக்கு அக்கா மாதிரி… ஃப்ரெண்ட் மாதிரி… ஏங் உன்னோட வெல்விஷ்ஷரா எப்பவுமே சாவுர வரைக்கும் இருப்பேன்டா… என்ன மட்டும் மறந்திடாதே ப்ளீஸ்…டா செரின்னு சொல்லேங்…யேங் செல்லம்ல்ல…யேங் பப்லுல்ல…” என சுஜாவின் மயக்கும் ஜால வார்த்தைகள் எல்லாம் பொய்யாகிவிட அவை திரும்ப திரும்ப அவனது காதுகளில் கேட்டு கொண்டே இருந்தன. பேருந்துகள், கணரக வாகனங்கள், மோட்டார் வண்டிகள் என சாலையில் இரைந்தும் மனம் எங்கோ, பாதை எங்கோவென தடுமாறிட அவளின் குரல் மட்டும் அவனை ஹெட் போனென தொடர்ந்து ஒலித்தது. ஹெல்மட்டுக்குள் வாய்விட்டு கதறிய அழுகை கண்ணீர் கோர்வையாக தாடையில் வழிந்தது. மனம் நூராய் நொருங்கிட வார்த்தையேதும் இல்லாதவனாய். தனக்கென்று இவ்வுலகில் ஏதும் இல்லாதவனாய் முச்சந்தி சிக்னலில் எல்லாம் முற்றுப் பெற்றதாய் நிற்க எதையும் துச்சமென்னும் அவனது இதயம் அவளின் பிரிவை மட்டும் ஏனோ? மிச்ச மென கொண்டது.
அன்றொரு நாள் முதன் முதலாக அவளை சந்திததும் இதே போன்றதொரு சிக்னலில் தான். செல்போனில்
“ஹலோ எங்க இருக்கீங்க?”
“சிந்தாமணி சிக்னலுக்கு முன்னாடி சிக்னல்லதான் இருக்கேங் ஃபைவ் செகண்ட்ஸ்ல வந்துடுவேங்”
“சீக்கிரம் வாங்க நாங் சிந்தாமணி சிக்னல்ல தான் நிக்கிரேங்”
“ஓகே…”வென சிகப்பு சிக்னலில் பத்து நொடிகளை காட்ட அதுவரை பொறுத்திடாத அவனது ஆவல் சிக்னலை அத்துமீறியது. முன் பின் தெரியாத ஒருவள் அவனுக்காக காத்திருப்பது இதுவே முதல் முறை. இதயம் நிதானமின்றி துடித்தது. பைக் சிந்தாமணி சிக்னலை தொட ஷோரூம் வாசலில் புடவை கட்டி ஒய்யாரமாய் நிறுத்தியிருந்த பொம்மைகளின் அணித் தலைவியாய் சுஜா நின்றிருந்தாள். அவளை பார்ததும் அவனை அறியாமலேயே அவனுள்ளீருந்த ஹீரோ வண்டியினை வளைத்து நிறுத்தி கூலிங்கிளாசை நெற்றிவரை உயர்த்தி
“எப்டி இருக்கீங்க?”
“ம்ம்ம்…நீங்க…! பப்லுவா…?
“ஆமாங்…”
“எப்டி என்னெ கண்டுபுடிச்சீங்க?”
“சிந்தாமணி சிக்னல்ல நிக்குற ஒரே லேடி நீங்கதான் அதுவும் நம்ம ஊரு தைலா சில்க்ஸ் பேக் வேற…”என அவளின் கைப் பையை பார்க்க
“ஓ…”வென சுஜாவின் முத்துப் பற்கள் ஜொலித்தன. ஷோரூம் பொம்மைகள் ‘ஹீம்’ என வெறுப்பாய் தங்கள் முகங்களை திருப்பிக் கொண்டன. அடுத்து என்ன? எங்கே? என்பதறியாது அவனிருக்க அவளின் கருவிழிகள் இரண்டும் குறுகுறுவென்றன.
“என்ன சொல்லுங்க?”
“ஒண்ணுமில்ல… டி.நகர் வரை போகனும் ஒரு முக்கியமான வேல ஒண்ணு இங்கெ யாரையும் எனக்கு தெரியாது நீங்க ரொம்ப நம்பிக்கையான ஆளுன்னு வினோத்து தான் உங்க காண்டாக்ட் நம்பரை கொடுத்தாரு…”
“ம்ம்… தெரியும் ஏங்கிட்டயும் சொன்னாரு… ம்ம்… நீங்க இப்ப டி.நகர் தானே போகனும் வண்டில ஏறுங்க” என மறுநொடி அவள் பின்புறம் ஏறி இருக்க.
(பச்சை சிக்னல் போட்டும் பழைய நினைவுகளில் மூழ்கியவனாய் அவன் நிற்க. வாகன ஓட்டிகள் ஹாரன் சவுண்டில் அவசரப்படுத்த சுதாரித்தவனாய் சிக்னலை கடந்தான்)
காற்று இதமாய் தழுவிட மீண்டும் அந்த பழைய நினைவுகள் அவனை விடாது துரத்தி தொற்றிக் கொண்டன. இதுவரை எந்த பெண்ணையும் சுமக்காத அவனது பைக் பச்சை சிக்னலில் அவளை சுமந்து செல்ல அவளைப் பற்றி போனில் வினோத் சொன்னவை யாவும் அவனது நினைவலையில் வந்து பேசின.
“அவள்ட்ட உங்கள பத்தி ரொம்பவே எடுத்து சொல்லியிருக்கேங்”
“என்னான்னு?”
“அதாங்… பப்லு ரொம்ப நல்லவரு… வல்லவரு பக்கா ஜென்டில் மேன்னு உனக்கு பியூட்டி டிப்ஸ்ஸெல்லாம் கூட அவரு சொல்வாரு, ரொம்ப ரசனைக்காரரு, சென்னையில உனக்கெங்காவது எதாவது வாங்கனும்… போகனும்னா அவருக்கிட்ட சொல்லு கூட வந்து ஹெல்ப் பண்ணுவாருன்னு”
“அய்யய்யோ...! ஏங்க பியூட்டி டிப்ஸீ கொடுப்பேன்னா சொன்னீங்க?
“ஆமாம்மா…அத சொன்ன பிறகுதானே அவ ஓகேன்னா”
“ஏங்க இப்படியெல்லாம் என்னெ மாட்டி விடுறீங்க”
“பப்லு உங்களுக்காக இல்ல இன்னும் ரெண்டு நாள்ல நாங் அங்கெ வர்ரெங் உங்க வீட்ல தான் அவக்கூட வந்து ஸ்டே பண்ணப்போறேங் முன்ன பின்ன பழக்கமில்லாதவங்க வீட்ல தங்கமாட்டேன்னுட்டா அதனால தாங் இந்த ஏற்பாடெல்லாம் நீங்க நாங் வர்றதுக்குள்ள கொஞ்சம் அவக்கூட நல்லா மிங்கிள் ஆயிடுங்க என்ன?”
“ம்ம்…வினோத்… நாங் எப்டி…?”
“இந்த காலத்துலயும் ஏங்க இப்டியிருக்கீங்க நாங் சொல்றத கேளுங்க அவ கூப்ட இடத்துக்கு மட்டும் போங்க அவளே நல்லா வாயளப்பா நீங்க போன போதும் செரியா?
“ம்ம்…செரி…பாக்குறேங்…”
“பாக்குறேங் கீக்குறேங் இல்ல கண்டிப்ப்ப்பா போறீங்க…”
வினோத்தின் கட்டளைகள் அவனை வலம் வர போக்குவரத்து சாலையை அடைத்துக் கொண்டு வழித்தேடி முழித்தன.
“என்னாச்சு?” என்றாள்
“ட்ராபிக் ஜாம்”
“உக்கும்… சென்னைய்ல எங்க போனாலும் இந்த ட்ராபிக் தொல்ல வேறெ எப்டித்தான் நீங்கெல்லாம் இங்க இருக்கீங்களோ என்னெ இருந்தாலும் நம்ம ஊரு மாதிரி வருமா… ச்சே…”என சலித்துக் கொண்டாள். ஊர்வாசிகளுக்கு சகித்து கொள்ள முடியாத சூழ்நிலைகள் இது. நகரத்திற்கு வந்த ஆரம்பத்தில் அவனுக்கும் ஏற்பட்ட அதே சலிப்பை எண்ணி பப்லு தனக்குள் சிரித்துக் கொண்டான். பொறுமையிழந்தவளாக
“இதோ இந்த ரோடு எங்க போகுது?”என அதிகம் போக்குவரத்தே இல்லாத இன்னொரு சாலையை பார்த்து கேட்டாள்.
“இது… பீச்சுக்கு”
“ஐ…! பீச்சுக்கா…”என வாயை பெரிதாய் பிளந்தாள். அதை அவன் வண்டியின் சைடு மிர்ரரில் ரசித்திருக்க. சிறு மௌனம் யோசித்தாள். மிர்ரரில் நோட்டமிடுபவனை பார்த்து
“நாம பீச்சுக்கே போயிறலாமே அப்புறங் வேணா ஒரு நாள் டி நகர் போயிக்கலாம்” என ஆவலில் அதிர சொன்னாள். அவளின் ஆசைக்கு வண்டியை திருப்பினான். முக்கியமான வேலைகளையெல்லாம் காற்றில் முந்தாணையோடு பறக்கவிட்டு ஒரு குழந்தையாய் அமர்ந்திருந்தாள். சிறிதில், சில்லென்ற காற்று தழுவிட கடல் அலைகள் ஒன்றை ஒன்று ஓயாமல் துரத்தி பிடிக்க, ஒரு குழியிலிருந்து மறு குழிக்கு நண்டுகள் ஓடி விளையாடின. வானம் மாடர்ன் ஆர்ட் வரைந்திருக்க, பட்சிகள் கால்களை நீரில் உரசிப்பறந்தன. மணல் பரப்பெங்கும் மகிழ்வான பாதச் சுவடுகள் பதிந்திருக்க. அதில் இவர்களது சுவடும் ஒன்று கலந்தது. கரையின் நிசப்தத்தில் இருவரும் அமர்ந்திருக்க அலைகள் சப்தமாய் பேசிச் சிரித்தன. வானமும், கடலும் ஒன்று சேரும் அந்த மைய அழகை ரசித்தவனாய் அவளை பார்த்தான். ஒவ்வொரு அலையின் வேகத்தையும், உயரத்தையும் அளந்து அதிசயித்தவளாய் இருந்தாள். காற்று ஏகந்தமாய் மணல் பரப்பினை ஊதிச் செல்வதும், சில வேளைகளில் அவளது புடவையை சீண்டி விளையாடுவதுமாகவே இருக்க. அவளின் வெண்ணிற மேடுகள் கண்களை மட்டுமல்ல மனதையும் கூசியது.
“கடலை… வேர் கடலை…” என கூவி வந்தவனை பார்ததும் பப்லு பர்ஸை எடுக்க அதற்குள் வேண்டாமென செய்கையில் அந்த கடலை விற்பவனை அப்புறப்படுத்தினாள். சிறு நாழியில்
“சுண்டல்… சுண்டல்…சூடான கேரட் மாங்காய் சுண்டல்…”வர அவனது பர்ஸ் போனியாகமல் பாக்கெட்டுக்கே திரும்பியது.
“பீச்சுக்குன்னு வந்தா இவுங்க தொல்லை வேற ச்சே…”வென பல நாள் வாடிக்கையை போல் வெடித்தாள். ஃப்.எம் ரேடியோவாய் இடைவிடாது பேசிய அவளது கீச்சுக் குறலும், முத்தான பல் வரிசையும் அவனை கிறங்கடித்தன. அதற்குள் காற்று அவளது அழகை மீண்டும் ஒரு முறை சீண்டியது. இம்முறை புடவையை திருத்த சோம்பலுற்று இருந்தாள். அவனது ரத்தம் சூடானது. கண்கள் வேறெங்கும் விலக மறுத்தன இறைவனது படைப்பின் உன்னதத்தை அக்கணம் அவனால் முழுதாய் உணர முடிந்தது.
“அக்கா சுண்டல் வாங்கிகங்க…மாங்காய் சுண்டல்”என பொடியன் நெற்றி விபூதியில் தீர்க்கமாயிருக்க, கையில் சுண்டல் வாளியை சுமந்து பரிதாபமாய் நின்றான். புடவையை திருத்தியவளாய் பொடியனை ஊற்று நோக்கி இருந்தாள் எப்படியும் வாங்க போவதில்லை என பப்லு ஆர்வம் இல்லாமல் வேடிக்கையில் ஆழ்ந்திருக்க. பொடியனிடம் அவள்
“நீ ஸ்கூலுக்கெல்லாங் போறதில்லையா?”
“போயிட்டு வந்துதாங்க்கா இங்க வர்ரேங்…”
“வீட்ல உங்க அம்மா அப்பாவெல்லாம் என்னடா பண்றாங்க?
“அம்மா தான் சுண்டல் விக்க அனுப்பறதே…”
சுண்டல் பையன் கிண்டலாய் சொல்ல
“அப்போ…அப்பா?”
“அப்பா எங்களை வுட்டுட்டு போயிட்டாருக்கா…”என்றான். தொட்டாச் சிணுங்கியாய் அவளின் முகம் துவண்டது. சிறு அமைதி. ஓயாத அலைகளைப் போல அவனும் ஓயாது
“அக்கா சுண்டல்…”என சுண்டலை தலையில் கட்டுவதிலேயே கண்ணாய் இருந்தான்.
“செரி… கொடுறா”என்றாள்
சூடான சுண்டல் பொட்டலங்கள் பப்லு பர்ஸை சுட
“உங்க அப்பா எங்கடா போனாரு?”என்றாள்
“ஏங் மூணாவது தங்கச்சி பொறந்ததும் எல்லாம் பொம்பள புள்ளயாவே பெத்து ட்ட இனி ஊங்கூட இருந்தா தரித்ரம்னு எங்கம்மாவ வுட்டுட்டு வேற கலியாணம் பண்ணிகின்னு போயிட்டாருக்கா…”
“என்ன! வேற கல்யாணமா…” என கண்களில் நீர் தெரிக்க சிரித்தாள்.
“செரி…வர்ரேங்க்கா…”என சுண்டல் பையன் அடுத்த ஜோடிகளிடம் சுண்டல் கடையை விரித்தான். இருவரும் சிரிக்க. அலைகளும் சேர்ந்து சிரிக்க சத்தம் பேரொலியானது. காற்று அவளை திரும்ப கலைக்காதா என அவன் கண்கள் காத்து கிடக்க ஏனோ! இம்முறை அவளை பூவென மென்மையாய் வருடி அவனுக்கு வன்மையை செய்தது.
“மல்லி… ஜாதிமல்லி… ரோஜாப் பூ…பூ வாங்கிக்க கண்ணு ஜாதிமல்லி இருக்கு ரோஜா இருக்கு“என வெற்றிலையில் வாய் சிவந்து நின்றிருந்தாள் பூக்காரி. சுஜா சிரிப்பை கட்டுப்படுத்தியவளாக பூக்காரியிடம் வேண்டாமென செய்கை காட்டினாள்.
“பூவ வேண்டான்னு சொல்லாத கண்ணு நாளுங்கிழமையுமா வச்சுக்க கண்ணு”என வற்புறுத்தி ஒரு முழப்பூவை அளந்தாள் பூக்காரி. சுஜா
“வேண்டாங்குறேங்ல…”என மறுத்தும் அந்த பூக்காரி பூவை கட்டாயப் படுத்தி தலையில் வைத்தும் விட வேண்டா வெறுப்புடன் உட்கார்ந்திருந்தவள். பூக்காரி நகர்ந்த மறு கணமே தலையில் வைத்து விட்ட பூவை எடுத்து கடலில் வீசினாள்.
“வேண்டாங் வேண்டாங்குறேங் வெச்சுட்டு போறா”என கோபமாய் திட்டி தீர்த்தாள். பப்லுவுக்கு ஒன்றும் புரியாது முழித்தான் அதற்காக பூவை ஏன்? எறிந்தாள் அவளின் முகம் சிவந்திருக்க காரணம்? கேட்க தயக்கமாய் இருந்தது. அவன் ஒன்றும் பேசாதிருக்க அவள்
“போவோமா…” என்றாள்
“ம்…”என புறப்பட அவள் வீசி எறிந்த பூவை அலைகள் கரை சேர்த்திருந்தன. மணற் பரப்பெங்கும் ஆரவாரமான சுவடுகளிருக்க இரு மௌன சுவடுகள் மட்டும் நடந்திருந்தன. இரவு அவனை கொன்றது பூவை ஏன்?வீசினாள் அவளுக்கு பூக்கள் மீது என்ன வெறுப்பு? பூவென்றால் பிடிக்காதா? பெண்களை பூக்களுக்கு இணையாக வைப்பார்களே ஏன்? அப்படி செய்தாள்? இல்லை வேறெதுவும் காரணம், இருக்குமா?”என அவனுள் பல கேள்விகள் கேட்டுத் துளைத்தன. கண்கள் அயர்ந்திட. வீட்டு அழைப்பு மணி டிங்…டாங் என்றது. தூக்கத்தில் அவன் ஆழ்ந்திருக்க டிங்…டாங்…டிங்…டாங்… என அழைப்பு மணி தூங்க விடாது தொல்லை கொடுத்தது. கதவை திறக்க வினோத்
“என்ன பப்லு நல்ல தூக்கமா?”
“ஆமாங்”
“ப்ப்பெ…”என பின்னாலிருந்து பப்லுவை பயமுறுத்தியதாக பெரிதாய் சிரித்தாள் சுஜா. கலகலவென அவளது கம்மல்களும், தலையில் சூடியிருந்த மல்லிகைப்பூ மொட்டுக்களும் கைகொட்டி சிரித்தன. ஆம், அவைகள் பரிகாசப் பார்வையில் ‘நேத்து உன்னை ஏமாத்திட்டோங்ல்ல…’என பப்லுவை கேலிப் பார்வை பார்த்தன.
“என்ன பப்லு நீங்க இங்க தனியாவா தங்கியிருக்கீங்க?” என்றாள்
“ஆமாங்”
“நீங்க ஃபேமிலியாவுல்ல தங்கியிருக்கீங்கன்னு நெனைச்சேங்!”
அதற்குள் வினோத் உடைகளை கலைந்து இடுப்பில் டவலுடுடன் டாய்லெட்டுக்குள் அவசரமாய் புகுந்தான்.
“பப்லு டாய்லெட் சுவிட்ச் எங்கெருக்கு?”உள்ளீருந்து கத்தினான்.
வெளியிலிருந்து சுவிட்சை பப்லு தட்ட உள்ளீருந்து
“தாங்க்ஸ்” என சத்தம் வந்தது
டிரஸ்ஸிங் டேபிள் கண்ணாடியில் சுஜா அவள் அழகை மேலிருந்து கீழாக ரசித்து கொண்டிருந்தாள். கண்ணாடியின் ஒரு ஓரத்தில் பப்லு அரை நிர்வாணமாய் தெரிய ஓடிச்சென்று டிசர்ட்டிக்குள் புகுந்து கொண்டான். வெளிக்கதவில் தொங்கி கொண்டிருந்த பால் பாக்கெட்டை எடுத்து வந்தவன் கண்ணாடியில் லயித்திருந்தவளிடம்
“உங்களுக்கு டீயா…? காஃபியா…?”
“காஃபி”என்றாள்
ஸ்டவ்வை பற்ற வைத்தான். ஒரு பேச்சுலர் வீட்ல காஃபியா! சுவரஸ்யமாகிட கிச்சனில் ஒரு இருக்கையை தேடி அவள் கண்கள் அலைந்தன. கிச்சன் மேடையில் அமர முயன்றாள் உயரம் எட்டவில்லை மிக அருகில் அவள் அமரப் போவதை கணித்த அவனுள்ளீருந்த ஹீரோ பதட்டமானான் சட்டென கீழே கிடந்த முக்காலியை காலால் நகர்த்தி
“இதுல ஏறி உக்காருங்க”என
“ஓ…தாங்க்ஸ்” என அவள் அதில் காலை ஊணி ஏறி அமர்ந்தாள். அவளது வாசனை மூளையை கிளறியது. அவனுள்ளிருந்த காமுகன் வெளியே எட்டியவனாய் ‘ச்சே நல்ல சான்ஸ் அவளோட இடுப்ப கையால அப்படியே தூக்கி ச்சே… மிஸ் பண்ணிட்டியேடா ஸ்டுபிட்… நான்சென்ஸ்…’என்றது
“ஹலோ…” விரலை சுண்டி “என்ன அப்டியொரு யோசனை?” என்றாள்
“ம்ம்…ஓண்ணுமில்ல…”என இருப்பதாக அவன் தலை கணமாக அசைந்தது
“நீங்களே சமையல் பண்ணுவீங்களா?”
“இல்ல…இல்ல… டீ காஃபி மட்டுந்தான் இங்க, மத்ததெல்லாங் வெளியதாங்”
“ஓ”வென உதட்டை குவித்தாள். டாய்லெட்லிருந்து வெளியே வந்த வினோத்
“மாறுகோ…மாறுகோ…மாறுகையி…
அடி ஜோருகோ…ஜோருகோ…ஜோருகையி…
ஆஹா வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேங்
வாடியேங் கப்பக்கெளங்கே…”என அவளை பார்த்து பாட அதற்கவள்
“என்ன கப்பக்கெளங்க?”என கோவை சரளாவைப் போல் கீச்சிட, நகைச்சுவையில் மூவரும் கலக்க காஃபி கப்பில் கலந்தது.
“சிகரெட் இருக்கா பப்லு?”என வினோத் கேட்க
“இல்ல…வாங்கிட்டு வற்றேன்”என ஜீன்ஸை மாட்டிக் கொண்டு பப்லு வீட்டிலிருந்து வெளியேறினான். சிறிதில், சிகரெட் பாக்கெட்டுடன் வீடு திரும்ப கதவுகள் தாளிடப் படாமல் திறந்து கிடந்தன. ஹாலில் மின் விசிறி மட்டும் அனாதையாய் சுற்றியிருக்க இரண்டு கப் காஃபியிலும் ஆடை படிந்திருந்தது. படுக்கையறை கதவுகள் கப்சுப் என மூடியிருந்தன. கதவை தட்டினான்
“வினோத்… வினோத்…”என பதிலும் இல்லை திறக்கவும் இல்லை மின் விசிறியை நிறுத்தி விட்டு முக்காலியில் உட்கார்ந்தவனாய் சிகரெட்டை பற்ற வைக்க நாழிகள் கடந்தன கதவுகள் திறந்தபாடில்லை. ஏதோ அவனை தனிமை கொன்றது. மீண்டும் ஒரு சிகரெட்டில் கொள்ளியிட்டான் தனிமையில் வியர்வை வழிய தன் சுவாசமே புகையாகி தன்னை அழுத்த கொஞ்சமாய் சுவாசித்த வாசல் கதவுகளை முமூதாய் திறந்தான் படாரென படுக்கையறை கதவுகளும் திறந்தது. உள்ளிருந்து வினோத் முதல் நாள் முதல் ஷோவிற்கு டிக்கெட் எடுத்தவனைப் போல வியர்க்க விறுவிறுக்க வெளியில் வந்தவன் பப்லுவின் கையிலிருந்த சிகரெட்டினை பிடுங்கி தம் கட்டினான். தலைக்கு மேல் ரெயில் வண்டியாய் ஊதிவிட்டு முழு திருப்தியடைந்த களிப்பில் சோம்பல் முறித்தான். மார்பு முடிகளில் சிக்கியிருந்த பூவிதழ்களை தட்டி விட்டபடி நக்கலாய் பப்லுவை பார்த்து சிரித்தான். பெட்ரூமை பார்த்து ‘என்ன?’ என புருவங்களை உயர்த்திட. முன் அனுபவம் இல்லாத பப்லு அரைமனதாய் தலையசைக்க ‘நீயெல்லாம் சுத்த வேஸ்ட்’ என்பதை போல பப்லுவை கீழிறங்க பார்த்தான். அசடு வழிந்து கொண்டிருந்தவனை படுக்கையறைக்குள் அழைத்து சென்றான். தயக்கத்துடன் பப்லு உள்ளே செல்ல டி.வியில் ஊமைப்படம் ஓடிக் கொண்டிருந்தது. அதன் ஒளியளவு படுத்திருந்தவளின் மீது கூடி குறைந்திருக்க பெட்ரூம் விளக்குகளை வினோத் எறியவிட பளீரென ஓளி வெள்ளத்தில் அலங்கோலமாய் கிடந்தவளின் முழு நிர்வாணமும் கண்களை கூசியது. கதவருகில் கிடந்த காலி மது பாட்டில்கள் காலில் இடற, அவள் தூக்கம் கலைந்து கூசிய கண்களுடன்
“லைட்ட ஆஃப் பண்ணுங்க வினோத்…ப்ளீஸ்…”என போதை மயக்கத்தில் உளறினாள். வினோத் வெளிச்சத்தை அணைத்து பப்லுவை உள்ளே தள்ளி கதவை வெளியே தாழிட்டான். அலங்கோலமாய் கிடந்த அவளது அருவறுப்பான உள்ளாடைகள் பப்லுவை வெளியே பிடித்து தள்ள. வினோத் நம்மை கையாளாகாதவன் என நினைத்து விடுவானோ என்கிற ஆண்மை பயத்தில் செய்வதறியாது உள்ளேயே அனைத்தும் உரங்கிக் கிடக்க அவனும், டி.வியும் விழித்திருந்தனர் திடீரென
“ஆ…ஆ…”வென காலை பிடித்தவளாய் தூக்கத்தில் அலறினாள். மெலிதாய் பரவியிருந்த வெளிச்சத்தில் அவளது கால்களை துழாவி பிடித்து கைகளை பாதத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் முட்டியை தொட்டிருந்தான்
“ஹாங்… அங்கதான் ஷ்ஷ்ஷ்…”என தவித்தாள். அவன் கைகளால் மென்மையாய் நீவிட சற்றே நிம்மதியனாள். அந்த வெளிச்சத்தில் அவளின் கைகள், கால்கள் அங்கங்களை மறைத்திருந்தும் மீதங்கள் அவனை உசுப்பேத்தியது. முட்டியிலிருந்த கைகள் அவனை அறியாமலேயே மேலே எறும்புற
“தண்ணீ…வினோத் தண்ணீ…வேணும்”என கைகளை நீட்டினாள். வினோத்தென்று இருப்பவளிடம் அனுமதியின்றி தொட்டிருப்பதை நினைத்து பப்லுவுக்கு பகீரென்றது.
“தண்ணீ… தண்ணீ…”என தாகத்தில் தவித்தாள். காலியான குவாட்டர் பாட்டில்களிடையே ஒரு வாட்டர் பாட்டிலும் இருந்ததாக ஞாபகம் இருட்டில் தேடி எடுத்தான் அதிஷ்டவசமாக அதில் கொஞ்சம் நீர் இருக்க அதை அவள் படுத்தவாறே பிடித்து குடித்தாள் சில நீர்த்துளிகள் அவளது மேடுகளில் வழிந்து மையமாய் தொப்புள் குழிக்குள் உருண்டோடியது. அவனுக்கு அது முதல் காட்சி. அவளது தாகம் தனிய பப்லுவின் உடல் தாகம் எடுத்தது. அவனுள்ளிருந்த காமுகன் எட்டியவனாய் ‘ஏய் இது நல்ல சான்ஸ்டா மிஸ் பண்ணிடாதே’ என தூண்டிட டிசர்ட்டையும், ஜீன்ஸையும் கழற்றி தூர வீசினான். அவளின் மேல் கையை வைத்து கொஞ்சம் கொஞ்சமாய் மேலே முன்னேற அவனது சுவாச சூட்டில் அனல் பறக்க அவனை பிடித்து தூரத் தள்ளினாள். திரும்பவும் அவளை நெருங்க அவனுள்ளீருந்த ஹீரோ எட்டியவனாய் ‘டேய்… வேண்டாங்குற நீ திரும்பவும் போய் அசிங்கபடாதே வேண்டாம் அது டீசண்ட் இல்ல வுட்ரு’எனத் தடுத்தது. உணர்ச்சிகளை அடக்க முடியாமல் தூரமாய் விலகி தரையில் சூடாகிக் கிடந்தான். கைகளில் தட்டுப்பட்ட புடவையை அவளின் மீது எறிய அவளது நிர்வாணத்தை அது போர்த்திக் கொண்டது. டி.வியும் அவனும் மீண்டும் தனிமையில் விழித்திருந்தனர். சிறிதில் பப்லு அயர்ந்திட, மின் விளக்கு வெளிச்சம் கண்களை கூசியது. தலைக்கு மேல் உள்ள முகக் கண்ணாடியில் தலைவாரியபடி ரேடியோ எப்.எம்மில் ஒலித்த பாடல் வரிகளை துரத்தி பிடித்து பாடியிருந்தாள் பாட்டில் ஸ்ருதி விலகி அது மின் விசிறி சத்தத்தில் ஒத்திருந்தது. படுக்கையறை படு சுத்தமாய் மாறியிருக்க டி.வி தூங்கிக் கொண்டிருந்தது. அவள் குளித்து புதிதாய் பூத்திருந்தாள். பூஜை அடுக்கில் ஊதுவர்த்திகள் நறுமணத்தை ஊதிக் கொண்டிருந்தன. வறண்டாவில் வினோத் செல்போன் உரையாடலில் கலவரமடைந்திருந்தான். வியர்வையில் குளித்திருந்தவனின் சிகரெட் கங்கும்; கண்களும் சிவப்பாய் கணத்தது. சுஜாவும் வெளியே எட்டினாள். அவனால் எதையும் யாரிடமும் பகிர முடியாதவனாய் இருக்க
“எல்லாம் சரியாகிடும்”என பப்லு தேற்ற
“எவ்வள பெரிய ஆளு நீங்க இந்த மாதிரி சின்ன விஷயத்துக்கெல்லாம் போயி என்ன வினோத்“என அவன் மேல் வழிந்திருந்த வியர்வை ஓட்டத்தை துண்டினால் ஒத்தினாள் சுஜா. அவனது கண்கள் வெறித்து இருந்தது. வாய்வழியே வந்த சிகரெட் புகை மேக மூட்டமாய் நகர, அவனது நினைவுகளும் பின்னோக்கி நகர்ந்தன.
அது ஒரு பரப்பான காலை நேரம் அவனக்கு சொந்தமான மருந்து கடையில் கூட்டம் நிரம்பி வழிய கடை பையன் அன்றென லீவு எடுத்திருந்தான். கடையில் அவசர உதவிக்கென யாரும் இல்லாதிருக்க தனியாளாய் கிடந்து தவித்தான். இதில் வழக்கத்திற்கு மாறாய் ஒரு புதிய மருந்தினை டாக்டர் எழுதிவிட இல்லை… சுழித்துவிட மருந்து சீட்டிடம் மன்றாடினான். அந்த டாக்டர் உலக மொழிகளிலே யே இல்லாத ஒரு புது மொழியில் சுழித்து சுழித்துதான் எழுதுவார். அதுவும் புதிய மருந்தென்றால் சொல்லவே வேண்டாம் மெடிக்கல் ஷாப்பில் பல மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டால் ‘சீட்ட எடுத்துட்டு வாங்க’ன்னு வெறுப்பேத்துவார். கேட்டு வர கடையில் வேறு ஆளில்லை என்ன செய்வதறியாது
“ம்ஹீம்… இது என்னான்னு புரியலை நீங்க போய் டாக்டருட்ட இது என்ன மருந்துன்னு கேட்டு வாங்க”என மருந்து சீட்டை திருப்பிக் கொடுக்க அது அந்த மூதாட்டியின் கைகளில் நடுக்கமெடுத்தது. அது அவன் மனம் கேட்காது
“செரி நீங்க இப்டி ஒரு ஓரமா உக்காருங்க நாங் போய் கேட்டு வர்ரேங்”என சீட்டை நடுக்கத்திலிருந்து பிடுங்கியவனாய் சென்று டாக்டரின் அறை கதவுகளை தட்டினான். அவை சின்னதாய் திறக்க அதிலிருந்து
“என்ன?”வென மையிட்ட கண்களில் கருவிழிகள் பேச புருவங்களை உயர்த்தி முகத்தை மட்டும் வெளியே எட்டியிருந்தாள் ஒரு நர்ஸ். அவளை பார்ததும் வினோத் எல்லாம் மறந்தான்.
“டாக்டர்…”என்ற வார்த்தையை தவிர அவனுக்கு வேறேதுவும் வரவில்லை. கையிலிருந்த சீட்டை பார்த்தவள்
“ஓ…பழைய பேஷண்ட்டா…?”
“இல்ல… நாங் மெடிக்கல் ஷாப்புலருந்து வர்ரேங் ஒரு சின்ன டவுட் ஒன்ணு கேக்கணும்…”
“இருங்க”என கொஞ்சத்தையும் படக்கென மூடிக் கொண்டாள். ஏனோ மனம் மறுபடியும் அவளைக் காண ஆவலைத் தூண்ட திரும்ப கதவு படாரென சத்தமாய் திறந்தது அதில் மையிட்டவள் இல்லை சீனியர் நர்ஸ் கண்ணம்மா வாய் நிறைய பல்லுடன் சிரித்திருந்தாள் அவனுக்கு கொஞ்சமும் சிரிப்பு முட்டவில்லை போலியாய் சிரித்தான்.
“வினோத்தா…! சீட்ட கொடு இதுல எந்த மருந்துப்பா?”
“ரெண்டாவதா இருக்கே… அதாங்க்கா”
“செரி இரு கேக்குரேங்” கதவுகள் திரும்ப படாரென்றது. அந்த மையிட்டவளின் நினைவில் ஆழ்ந்தான்.
“ஹலோ… சார்…”என அழைக்க அதே மையிட்டவள் மாற்று வழிப் பாதையில் நோயாளியை வீல் சேரில் தள்ளி வர “கொஞ்சம் வழி விடுங்க ப்ளீஸ்…”என அவசரப்படுத்தினாள். அந்த குறுகிய பாதையில் அவன் சுவரொடு சுவராய் ஒட்டியிருக்க அவளது வாசனை நாசியை இழுத்து சென்றது. அவளை ரசிக்க கண்களை அகலமாய் திறந்தான். கதவிலிருந்து படாரென குறுக்கிட்ட கண்ணம்மா
“இந்தா வினோத்து… சாரு பழைய மருந்தையே திரும்ப எழுதிட்டாரு”என மருந்து சீட்டுடன் இலித்தாள்
“தாங்க்ஸீக்கா”என
கண்ணம்மாவிடமிருந்து விலகி திரும்ப அந்த கண்ணழகியை தேடினான் அதற்குள் அவள் தொலைவில் மறைந்தாள். வெளியே காத்திருந்த கடைசி நோயாளியையும் டாக்டர் அறைக்குள் படாரென அடைத்துக் கொள்ள. அவன் மட்டும் ஏனென அறியாது தனிமையில் அவள் சென்ற பாதையை பார்த்து நின்றிருந்தான். கடைக்கு திரும்ப பரபரப்பான சாலையை கடந்தவன் அவள் நினைவில் அனைத்தையும் மறந்தான். படாரென்ற சத்தமும் அவளின் முகமும் அவன் கண் முன்னே வந்து வந்து நின்றது. கவனக்குறைவாக ரோட்டை கடந்தவனை
“யோவ்… இந்நேரம் போய் சேர்ந்திருப்ப“என ஒரு காரோட்டி திட்டித் தீர்த்தான் அது அவன் மனைவி திட்டுவது போலவே இருந்தது. வினோத்தின் மனைவி ஒரு பணக்கார வீட்டுப் பெண் சிந்து. வினோத் ஒரு பகல் நேர குடிகாரனென்றும்; தன்னுடைய நிழலில் வாழ்பவனென்றும்; தன்னை விட அந்தஸ்த்தில் குறைந்தவனென்றும் தரக் குறைவாக பேசுவாள்; நடத்துவாள் அவனிடம் எதையும் அவள் மனம் விட்டு பேசியதும் இல்லை, பகிர்ந்ததும் இல்லை. இருந்தும் இரண்டு பெண் குழந்தைகள். அவளது இறுக்கமான முகம் சண்டை முகமாக அவனுள் பதிந்துவிட எங்காவது, யாரெனும் கோபமாய் வசைந்தாலோ சண்டையிட்டாலோ அது அவனுக்கு சிந்துவாகவே தோன்றும். அவளிருக்கும் அந்த நரகத்திற்கு (வீட்டிற்கு) பல நாட்கள் அவன் போனதே இல்லை அதை அவள் கண்டு கொண்டதும் இல்லை. குழந்தைகள் கூட அவளின் முன் இறுக்கமாகத்தான் இருப்பார்கள். எல்லாத்துக்கும் அவள் சொல்லும் ஒரே ஒரு காரணம் ‘அவன் ஒரு குடிகாரன்’ என்பதே.
அன்றிரவு அவன் ஒயின் ஷாப்பில் பப்லுவிடம் மையிட்டவளை பற்றி மிக அளந்தான். .
“யோவ் செம்ம ஃபிகரு ஒண்ணு ஹாஸ்பிடல்ல நர்ஸ்ஸா வந்து சேந்துருக்கு சொல்லவே இல்ல”
“யாரு…? நம்ம ஹாஸ்பிடல்லயா?”
“ஆமாங்…”
“தெரியலையே…!”
“ஓ… அப்ப உங்களுக்கே தெரியாதா! அதுக்குள்ள நம்ம கண்ணுல பட்ருச்சா… செரி… செரி…”என குதுகளித்து ஒரு கல்ப்பை இழுத்தான். பப்லுவுக்கு குடி பழக்கம் இல்லை. அவன் ஒரு மருந்து கம்பெனியில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தான். அவன் வேலை பார்த்து வந்த கம்பெனி டார்கெட்டின் பற்றாக்குறைக்கு மாதக் கடைசியில் வினோத்திடம் ஆர்டர் கேட்டு வருவான் காலை 9மணிக்கு தள்ளுவண்டி டிபனில் தொடங்கி அரை மணிக்கொரு டீ தம், திரும்ப 2மணிக்கு மெஸ் சாப்பாடு சில நாட்களில் பாய்க்கடை பிரியாணி, அதை தொடர்ந்து அரை மணிக்கொரு டீ தம் என நீண்டு கொண்டே போகும். இரவு 10மணியை தொடும் வேளையிலே ‘அப்பாடி கடைய கட்டுற நேரம் இந்த இம்சைலயிருந்து தப்பிச்சிறலாம் எத்தனை டீ எத்தனை தம்மு கம்பெனி தர்றதுக்கு ஒரு அளவுல்ல ச்சே… இதெல்லாம் ஒரு பொழப்பா இதுக்கு எங்கேயாவது அடிபட்டு சாவலாம்’ என பப்லு உள்ளுக்குள் ஆயிரம் புகைந்திருப்பான். ஒரு வழியாக கடையை இழுத்து ஷட்டர் போட மறுகணமே
“அந்த கார்னர் வரைக்கும் வாங்க பப்லு ப்ளீஸ்”ஸென இழுத்து ஒயின் ஷாப்பில் சரக்கு நெடியேற ஆம்லெட் சைடிஷ்ஷும்; ஒரு கையில் தம்மும்; மறு கையில் பிளாஸ்டிக் கப்பில் சரக்குடன் வினோத் ப்ரெஷ்ஷாக வேதாந்தம் பேசத் தொடங்குவான். அங்கிருக்கும் ஒவ்வொரு மேஜையிலும் ஒவ்வொரு வேதாந்தம் ஏதோ அறிவு ஜீவிகளின் மாநாட்டைப் போல ஒரு கணம் தோன்றும். பிறகு போதையின் உச்சியில் எல்லாம் வெற்றாகத் தோன்ற நிசப்தத்தில் பப்லுவை பற்றி யோசிப்பான்
“என்ன எவ்வளவுக்கு ஆர்டர் போடனும்?”
“ம்ம்…”
“செரி… நீங்களே பாத்து போட்டுகங்க”என அவனது டார்கெட்டை கடைசி கல்பில் முடித்து வைப்பான்.
காலை மாலையென வினோத்தின் கண்கள் அந்த மையிட்டவளையே துரத்தின. அவளது கிறுக்கில் அவனக்கு மறு போதை ஏறியிருக்க. தினமும் ஒரு சாக்கினை சொல்லிக் கொண்டு அவளைக் காண ஹாஸ்பிடலுக்கும் கடைக்குமாய் அலைந்தான். அவளிடம் ஒரு சில வார்த்தைகளும் பேசியுமிருந்தான். அவளது தமிழ் மலையாளத்தில் கொஞ்சியது. அவளின் பின்னே ஜொள்ளுட்டதில் லேடீஸ் ஹாஸ்டலில் அவள் தங்கி இருப்பதையும், சொந்த ஊர் பாலக்காடு என்பதையும் தெறிந்து கொண்டான்.
சீனியர் நர்ஸ் கண்ணம்மா சில மாத்திரை, மருந்துகளை வினோத்திடமிருந்து வாங்கி செல்வது வழக்கம். அப்படியொரு நாள் வாங்கி கொண்டிருந்த பொழுது
“உனக்கொரு சேதி தெரியுமா! வினோத்து”
“என்னக்கா?”
“நம்ம டாக்டரு அவரோட பையங் இருக்குற ஊருக்கே போறாராங்”
“எங்கெ அமெரிக்காவுக்கா…! “
“ஆமாங்”
“அப்ப இங்கெ?”
“இங்க… புதுசா யாராவது வருவாங்க”என பல் இலித்தாள்.
“அய்யய்யோ…அப்ப அவரோட பேஷண்டுங்கெல்லாங்…!”
“அதுக்கென்ன பண்றது வினோத்து… அவரும் எத்தனை நாளைக்கித்தான் ஒரே மகனை விட்டு இங்கயே இருப்பாரு சொல்லு…”
“ம்ம்”
“அவரு போறதால புதுசா வேலைக்கு சேர்ந்தவங்களையும் வேலைய விட்டு நிக்க சொல்லிட்டாங்க பாவம் அதுக”
வினோத்தின் தலையில் இடியை இறக்கினாள்.
“அப்டியா!”
“உலகத்துல எதுதாங் நிரந்தரம் சொல்லு எதுவுமே கிடையாது எல்லாங் அப்டியே மாறிப் போயிடுது என்ன பண்றது எல்லாங் நம்ம கையிலயா இருக்கு… செரி… வர்ரேங் வினோத்து” என கவலையுடன் ரோட்டை கடந்தாள். திரும்ப பதிலேதும் இல்லாது அவனது மனதும் மூளையும் பேசின ‘என்ன செய்யப் போறே? அவ இங்கெருந்து வேலைய விட்டுப் போயிட்டா உன்னால அவள பாக்காம இருக்க முடியுமா?’என இரவும், பகலும் அவளைப் பற்றியே உரையாடிக் கொண்டிருந்தன. ஹாஸ்டலுக்கு திரும்புகையில் கூட அவள் முகம் பொலிவிழந்து இருந்தது. கண்ணம்மா சொன்னவை வேறு திரும்ப திரும்ப அவனது காதில் வந்து பயமுறுத்திச் சென்றன. அவைகள் எங்கு பலித்திடுமோ என கலக்கத்தோடு இருந்தான். அவனால் ஒன்றுமே முடியாதிருக்க டாஸ்மாக்கில் குடித்தான். பக்கத்து டேபிளில் இருந்தவன் சப்ளயரிடம்
“எப்பா குமாரு…இப்டிவா”
“எண்ணாண்ணே…”
“இங்கெ என்ன வேலைக்கா சேந்துருக்க?”
“ஆமாண்ணே... நம்மால இந்த சரக்கு வாசனை இல்லாம இருக்கவே முடியல… அதாங் இங்கயே வந்து செட்டிலாயிட்டேங்”
“டேய் செம யோசனைக் காரன்டா நீ… பாரேங் எனக்குக் கூட இது எட்டாம போச்சு” என பார் அலற கொள்ளென்று சிரித்தார்கள். வினோத் மட்டும் சிரிப்பை மறந்திருந்தான். ஆனால், அவர்கள் பேச்சிலிருந்து ஓர் விடை அவனுக்கு கிடைத்தது. அது ஜிவ்வென்ற போதையிலும் எல்லாம் கைக்கெட்டியதைப் போல மனம் லேசானது. பாரை விட்டு வெளியேறினான் காலை சுற்றி வாலாட்டி நின்ற நாய்களுக்கு ரொட்டிகளை வாங்கி இறைத்தான்.
“சார் ஒரு கட்டிங்கு காசு கம்மியா இருக்கு ஏதாவது ஹெல்ப்… முடியுமா? ப்ளீஸ்…”என ஒயின் ஷாப் வாசலில் ஒரு டீஸண்ட் பிச்சை தலை சொறிய இடுப்பில் வைத்திருந்த ஸ்பேர் சரக்கினை உருவி எடுத்து
“இந்தா ம்ம்ம்..“என மறந்திருந்த சிரிப்பை வாய்விட்டு பெரிதாய் சிரித்தான். அடுத்த நாள் காலை சாலைகளெங்கும் பரபரப்பாய் இயங்க மெடிக்கல் ஷாப்பில் வினோத் வழக்கத்திற்கு மாறாக அவசர அவசரமாக லேண்ட் லைனில் போன் செய்த வண்ணமிருந்தான். கடை திறந்ததும் முதல் வேலையாக கடைக்கு தேவையான மருந்துகளை டீலரிடம் போனில் ஆர்டர் கொடுப்பது கடை பையனின் வழக்கம். அதற்காக அவன் காத்திருக்க வினோத் பலரை தொடர்பு கொண்டிருந்தபடி போனை ஆக்கிரமித்திருந்தான். பிறகு ஓயாது அங்குமிங்குமாய் மதிய உணவைக் கூட மறந்து சிலரிடம் பேசியவாறு இருந்தான். கடை பையன் மணிக்கு அது புரியாததொரு வேற்று மொழி சித்திரமாகவே இருந்தது. மாலை நேர சைக்கிள் டீயும் வந்துவிட கடைக்கு வந்தவன் மீண்டும் லேண்ட் லயனில் நம்பரைத் தட்டினான்.
“ஹலோ… மெடிக்கல்ஸ்லேர்ந்து பேசுரெங்…”
“ம்…சொல்லுங்க சார்”
“நர்ஸ் கண்ணம்மாவ கொஞ்சம் கூப்டுங்களேங்”என சிறு நாழிகை காத்திருந்தான்.
“ஹலோ…”
“ஹலோ…அக்கா நாங் வினோத்து”
“என்ன? சொல்லுப்பா”
“ஓண்ணுங் இல்லக்கா வீட்டுக்கு போறப்ப ஒரு எட்டு கடைக்கி வந்துட்டு போ”
“என்னப்பா எதுவும் முக்யமா...?”
“அதெல்லாங் ஓண்ணுங் இல்லெக்கா நீ வந்துட்டு போயேங்… சொல்ரெங் என்னான்னு”
“செரிப்பா வர்ரேங்”என போனை துண்டித்து டீயை எடுத்து உறிஞ்சினான்.
“மணி…டீ ஆறி போச்சுடா…”
வினோத்தின் இந்த மாற்றத்தை புரிந்து கொள்ள முடியாதவனாய் மனதுக்குள் ‘ஆமா போன்லேயே பேசிட்டிருந்தா டீ ஆறாம பின்னெ சூடாவா கொதிக்கும்’ என முனுமுனுத்தான். வினோத்தின் பார்வை ஹாஸ்பிடல் வாசலிலேயே தவங்கிடந்தது. வழக்கமாய் 9மணிக்கு டியூட்டி முடிந்து வரும் கண்ணம்மா இன்றென 9.15க்கு வெளியே வந்தாள். அவளை பார்த்ததும் வினோத் பரவசமடைந்தான். அவள் ரோட்டை கடந்து வர இவனது கண்கள் வழி சொன்னது. பொறுமையிழந்து இருந்தான்.
“வாக்கா வா…”
“என்ன வினோத்து”
“கிளினிக் போடப் போறேங்க்கா”
“எங்கெ…!”
“கடைக்கு பின்னால இடமிருக்குல்ல அதுலதாங்”
“அதுலயா…டாக்டரு…?”
“சொல்லியிருக்கேங் இன்னும் ரெண்டு நாள்ள தெரிஞ்சுரும்”
“நேத்து வந்தேங் அப்ப ஒண்ணுமே சொல்லல இப்ப திடீர்னு…”
“திடீர்னு தாங்க்கா ஹாஸ்பிடல் டாக்டரு போறாருன்னு நீ சொன்ன பிறவு தான் நாங் இத யோசிக்கவே ஆரம்பிச்சேங்…”
“அப்டியா…!”என ஈறு வரை இலித்தாள். “சந்தோஷம்ப்பா நல்ல யோசனை தாங்…”
“உனக்கு தெரிஞ்ச டாக்டருங்க யாராவது இருந்தா சொல்லுக்கா…”
அவள் இடுப்பில் ஒரு கையும் தாடை வாயில் ஒரு விரலையும் ஊனி பலமாய் யோசித்தபடி
“சொல்றேங் வினோத்”
“அப்டியே நர்ஸுங்க இருந்தாலும் சொல்லுக்கா”என அவனின் உள் நோக்கத்திற்கு வந்தான்.
“அய்யய்யே… நர்ஸுக்கா பஞ்சம் இதோ இப்ப சொல்லி அனுப்புரேங் எல்லாங் வேலைய தேடிட்டுத்தாங் இருக்குங்க”
“அப்டியா…!”
“ஆமாங் அத பத்தி கவலப் படாதே நாங் சொல்லி அனுப்புரேங் இந்த டாக்டரு தாங்…”என இழுத்தாள்
“பரவாயில்லக்கா நர்ஸுக்கு பாத்து சொல்லி அனுப்பு டாக்டருக்கு சொல்லி இருக்கேங்…”
“செரிப்பா … அப்ப நா வரவா…ரொம்ப சந்தோஷம்”என உலகை உள்ளங்கையில் உருட்டி விட்டு சென்றாள். மணிக்கு எல்லாம் தெளிவானது ‘ஓ… இதுதானா கதை அப்ப கடைய ஒட்டி கிளினிக் வருதா! செரி செரி’ என மனதுக்குள் எல்லாம் பேசி முடித்தான்.
அடுத்த நாள் பூஜையுடன் அஸ்திவாரத்தை தோண்டி இருக்க அதற்கு தேவையான கட்டுமானப் பொருட்களை வாங்கி கொடுத்துக் கொண்டு அலைந்திருந்தான் வினோத். மதிய உணவு வேளையில்
“அண்ணேங்… ஹாஸ்பிடல்லேருந்து ரெண்டு நர்ஸுங்க உங்களைத் தேடி வந்திருந்தாங்க “
“எப்படா?
“காலையில”
“யேங்? என்னை கூப்ட றதுதானே”
“நீங்க அப்ப இங்க இல்லண்ணெ வெளியில போயிருந்தீங்க”
“அப்டியா…! செரி அவுங்ககிட்ட என்னான்னு சொன்னெ?
“அண்ணே வெளிய போயிருக்காரு நீங்க வேணும்னா சாயந்தரமா வாங்க கண்டிப்பா இருப்பாருன்னு சொன்னேங்”
“பேரெதும் சொன்னாங்களா?”
“இல்லண்ணே”
“அவுங்க எப்டியிருந்தாங்க?”
“ஒரு நர்ஸு கறுப்பா ஒல்லியா இருந்துச்சு… அப்புறம் இன்னொரு நர்ஸு சுமாரா இருந்துச்சு”
“கண்ணுல மை போட்ருந்துச்சா?
“ம்ம்… ஆமாண்ணே…”
‘அதையே சுமாருங்கிறாங்..!’ என யோசனையில் ஆழ்ந்தான். ‘ச்சே… சரியான நேரத்துல நாங் இல்லாம போயிட்டேனே’ தனக்குள் புலம்பினான். வெளிச்சம் குறைய மாலை மயக்கத்திற்கு ஆயத்தமானது. வாசலை பெருக்கி தண்ணீர் தெளித்திருந்த மணி ரோட்டை கடந்து இரு நர்ஸுகள் கடையை நோக்கி வந்து கொண்டிருப்பதை பார்ததும்
“அண்ணே காலையில வந்தாங்கன்னு சொன்னேங்ல… அவுங்க வர்றாங்க”என வினோத்தை உஷார் படுத்தினான். ஆர்வமாய் அவனும் எட்டிப்பார்க்க. அதில் அவள் இல்லை. ஹாஸ்பிடல் ஸ்டாஃப் நர்ஸுகள். அதிலொருவள் அஞ்சலை அவனுக்கு முன்னமே தெரியும். இதுங்க யேங் வருதுங்க! என தனக்குள் குழம்பி நின்றான்.
“சொல்லுங்க?”
“கண்ணம்மாக்கா சொன்னுச்சு… அதுதாங் வந்தோம்… எப்ப கிளினிக்கு ஓபனாகுது?”
“வர்ற ஒண்ணாந்தேதியிலேருந்து…”
“ஓஹோ…எவ்ளவு சம்பளம் கொடுப்பீங்க?”
“ஆளுக்கேத்த மாதிரி… யாருக்கு உங்களுக்கா?”
“இல்லல்ல எங்களுக்கில்ல” கெக்கெ…பிக்கெ…வென சிரித்தார்கள்
“யேங் தங்கச்சிக்குத்தான்…”
அவர்கள் ஏதெதோ பேசியபடி இருந்தார்கள். அவனுக்கு ஏதும் காதுகளில் எட்டவில்லை. முடிவாய்
“இப்பத்தான் வேலைய தொடங்கிருக்கோம் முடிஞ்சதும் நானே கண்ணம்மாகிட்ட சொல்லி அனுப்புரேங்” என அனுப்பி வைத்தான். ‘அந்த கண்ணழகிக்காக இவ்வளவு பாடுபட்டு கடைசியில யேங் தங்கச்சிக்கித்தான்னு இவ வந்து நிக்குறா ச்சே…’ என தனக்குள் சலித்தான். மண்டை குடைந்தது மாலை வேளை சைக்கிள் டீயும் வந்துவிட குடித்தபடி சிந்தனையில் ஆழ்ந்தான். மையிட்டவள் டியூட்டி முடிந்து ஹாஸ்டலுக்கு திரும்பி கொண்டிருந்தாள்.
“மணி கடைய பாத்துக்க இத வந்துர்ரெங்”என அவளை பின் தொடர்ந்தான். முச்சந்தி பெட்டிக் கடையில் தொங்கிய துண்டு அட்டைகளில் அவளது கண்கள் வேலை வாய்ப்பை தேடி அலைந்தன. கண்ணம்மா இவளிடம் ஏதும் சொல்ல வில்லையென அவனுக்கு அப்போதுதான் தட்டியது. இப்போதே சொல்லிவிட உதடு துடிக்க அவள் தவறாக புரிந்து விடுவாளோ என எதையும் பேசாமல் சிகரெட் வாங்குவது போல் பெட்டிக் கடைக் காரரிடம் மொக்கை போட்டான். திடீரென ஒரு எண்ணம் அவனுள் உருவெடுக்க
“நம்ம கடைக்கு ஆளுங்க தேவைப்படுது ஒரு துண்டு அட்டையில எழுதி இங்க தொங்கவுட்டுக்கவா?”
“என்னாப்பா…இதுக்கெல்லாங் போயி கேக்கணுமா என்ன? தொங்கவுடு”வென சம்மதித்தார். வெள்ளைத் தாளில் ஸ்கெட்சினால் கலர் கலராய் எழுதி அட்டையில் தொங்க விட்டான். இதுவரை அவன் எழுத்தில் வராத ஒர் அழகு அதில் பொதிந்தது. அடுத்த நாள் காலை அவனும்; அட்டை விளம்பரமும் அவளுக்காக காத்திருக்க. சாலையில் அழகாய் அவள் பூத்திருந்தாள். திடீரென பலமான காற்று மெல்லியச் செடியிலிருந்து பூவை பிய்த்து எறிவதைப் போல அவளை அள்ளிச் செல்ல நிலை தடுமாறினாள். தொடர்ந்து மழைத் தூரல்கள் சடசட வென்றது. செய்வதறியாது அவன் பதறி நிற்க. அவள் ஓடிச் சென்று ஒரு தாழ்வாரத்துக்குள் பத்திரமாய் ஒதுங்கினாள். காற்றில் அவளது துப்பட்டா அசைந்து அவனுக்கு ஆறுதல் சொல்ல மழைச்சாரல்களில் அவளது இனிமையான முகம் இதமாய் இனித்தது. அவன் அவளை ரசித்து கொண்டிருப்பதை காணப் பொறுக்காத மேகக் கூட்டங்கள் வேக வேகமாய் கடந்து மழை பொழிவதையே தற்போதைக்கு தள்ளிப்போட்டன. தாழ்வாரங்களில் நீர் வடிய ரப்பர் செருப்புகளும், வாகன டயர்களும் சேற்றை துப்பிக் கடந்து செல்ல அவளும் நடந்து வந்தாள். முச்சந்தி கடையில் அவளது கண்கள் வழக்கமாய் வேலைக்காக தேடி எந்த ஒரு ஆர்வமும் இன்றி திரும்பி சென்றதை பார்த்து முழித்தான். யோசித்தான். எழுதியதில் ஏதேனும் தவறு இருக்கிறதா? என தனது விளம்பர அட்டையை ஒரு முறை நோட்டமிட அது மொத்தமும் மழையில் நனைந்து கலர் கலராய் அழுது வடிந்திருந்தது. மற்ற அட்டைகளும் நனைந்திருந்தன ஆனால் அவைகள் அச்சில் பதிந்தவை ஆதலால் அவைகள் சிரித்தன. அதில் ஒன்று மட்டும் லேமினேட் செய்யப்பட்டு மழைக்கும் வெயிலுக்குமாய் சேர்த்து இன்ஷுரன்ஸ் எடுத்த கர்வத்தில் ஆடிக்கொண்டிருந்தது. அவசரத்தில் சொதப்பி விட்டதை எண்ணி தனது அட்டையை கழற்றி தூர வீசினான்.
‘நர்ஸ் வேலைக்கு அனுகவும்‘- 9380 2222 11 என கம்பியூட்டர் மானிட்டரில் காட்ட டிடீபி சென்டர் பையன்
“என்னாண்ணே…ஓகேவா? பிரிண்ட் கொடுத்துடவா?”
“கொஞ்சம் இருப்பா… அந்த இடத்துல ஆட்கள் தேவைங்கிறதெ சேத்துக்கோ”
“எங்கெ நர்ஸ் வேலைக்கு அப்புறமா…?”
“ஆமா”மென தலையாட்டினான் வினோத்
“எத்தனை தடவண்ணே அத மாத்துவீங்க முடிவா சொல்லுங்க”
“முடிவாத்தாங் சொல்றேங் மாத்து”என ‘நர்ஸ் வேலைக்கு ஆட்கள் தேவை’ அனுகவும் – 9380 2222 11என பிரிண்டர் பேப்பரை வெளியே தள்ள லேமினேட்டர் மிஷினில் பிதுங்கிட அது கம்பீரமாய் பெட்டிக்கடையில் நின்றது.
காலை எட்டு பத்தென அவனது கைக்கடிகாரம் முட்களை துரத்திக் கொண்டிருக்க எட்டு மணிக்கு கட்டிட வேலை ஆட்கள் வந்து விடுவார்களென சிகப்பு சிக்னலில் தவித்திருந்தான். பச்சை சிக்னல் விளக்கெறிய ஆக்ஸிலேட்டரை முறுக்குவதற்க்குள் அவனது செல்போன் கினுங்…கினுங்…கென இசைத்தது. அவன் தடுமாற பின் நின்ற வண்டிகளின் ஹாரன்கள் பீங்…பீங்…என அவகாசமின்றி அவசரப் படுத்தின சிக்னலை கடந்து போனை எடுக்க அது மிஸ்டு கால் என மினுக்கியது. அந்த அழைப்பு ஏன்? அவளுடையதாய் இருக்கக் கூடாது என அவன் மனம் உறுத்த அதே நம்பரை திரும்ப அழைத்தான்.
“ஹலோ…”
“ஹலோ… நா மேஸ்திரி தாமு பேசுரேங்…”என அவனது ஆவல் மொத்தமும் முடங்கியது. பெருமூச்சை இழுத்து விட்டவனாய்
“ம்ம்… சொல்லுங்க…”
“இங்க நாங்க கடைக்கி வந்துட்டோம் !”
“இதோ வந்துட்டேங்”என தொடர்பை துண்டிக்க வெறுப்பில் அவனது வண்டி புகையை கக்கி புர்ர்ர்ர்ரென பறந்தது.
வினோத் கடைக்குள் தூசு தட்டி கண்ணாடி கதவுகளை துடைத்து கொண்டிருந்தான்.
“ஹலோ…சார்”என அழகாய் மையிட்டவள் நின்றிருந்தாள். சற்றும் எதிர்பாராத நேரத்தில் அவள் வந்திருக்க தடுமாற்றமாய்
“ஹாங்…வாங்க”
“இவ்விட கிளினிக்கு…”
“ஆமாங்… யாரு கண்ணம்மா சொன்னாங்களா?”
“ப்ச்சு… அஞ்சலை இவ்விட நர்ஸுக வேண்டிட்டு ஆயாளுக சம்சாரிச்சு கொண்டிருந்ததா…”
“ஓஹோ…! செரி அப்ப நீங்க எப்ப வர்றீங்க…?”
அவளுக்குள் பல கேள்விகள் கேட்டிருக்க கண்கள் அலைய அவள் யோசித்தாள். கடைசியாய் கேட்க வேண்டியதை முதலில் கேட்டு விட்டதை உணர்ந்தவன்
“வேலை நடந்துட்டுதான் இருக்கு எப்படியும் ஒன் வீக்ல கம்பிளீட்டா எல்லா வேலையும் முடிஞ்சிறும் ஒண்ணாந்தேதி கன்ஃபார்மா கிளினிக் ஸ்டார்ட் ஆகிடும்”என பேசிச் சமாளித்தான்
“ஓ…!”
“உங்கள மாதிரி கொஞ்சம் எக்ஸ்பிரியன்ஸ் உள்ள ஆளாத்தாங் தேடிட்டு இருக்கோம்”
“ஓ…!”வென உணர்ச்சி குவியலாய் குவிந்த உதடுகள் மெல்ல மலர்ந்தன. அதை அவன் ரசித்திருக்க
“அப்போ… சேலரியும் கொறைச்சு கூடுங்ல்லே…?”
“கண்டிப்பா நீங்க ஏற்கனவே வாங்கிட்டு இருந்ததை விட பெட்டராவே பண்ணித் தர்ரேங் அதப் பத்தி ஏதும் நீங்க கவலைப் படாதீங்க”என்றதுமே அவளின் முகம் மொத்தமும் மலர்ந்தது. “உங்க நம்பரை கொடுத்துட்டு போங்க நாங் காண்டாக்ட் பண்றேங்”
போனில் அவனது விரல்கள் நம்பர்களைத் தட்ட அவளின் உதடுகள் இலக்கங்களை உச்சரித்தது. போன் ரெஜிஸ்டரில் நேம் ஆப்ஷன் கேட்க அவளிடம்
“உங்க பேரு?”
“மினி” என்றாள்
“என்ன?”
“மி…னி…”
“மினியா?”என்றதும் ஆமாமென கண்களை மூடித்திறந்தாள். அவனது உயிர் அனுக்கள் ஒரு நிமிடம் ஸ்தம்பித்தது. மினி என்ற காண்டாக்ட்டை அவன் அழுத்த அது அவளது போனில் பியுஜியம் வாசித்தது
“அது என்னோட நம்பரு…”
“ம்ம்..?”
“வினோத்துன்னு சேவ் பண்ணிக்கங்க… இந்த வழியா போகும் போது வரும் போது வாங்க”
“எந்தா!”
“இல்ல காண்டாக்ட்லேயே இருங்கன்னு சொன்னேங்…”
“ஓ…”வென புருவங்களை உயர்த்தி புரிந்தவளாக “செர்ரி பின்னே…ஞான் வரெட்ட”என ரோட்டை கடந்து ஹாஸ்பிடலுக்குள் சென்று மறைந்தாள்.
“ஹலோ… இங்க என்ன நடக்குது?”என்றவனாய் பப்லு நிற்க.
“பப்லு…! எங்க போயிருந்தீங்க…!”
“நாங் வந்து ரொம்ப நேரமாவுது… நீங்கதாங் இந்த உலகத்துலயே இல்லயே…?”
“நல்ல வேள வந்தீங்க…”என பப்லுவை ஒயின் ஷாப் வரை மல்லுக்கட்டினான்.
“என்ன வினோத்? பகல்ல போயி…நெறைய்ய வேலை இருக்கு”
“அதெல்லாம்…அப்புறம் பாத்துக்கலாம்… வாங்க”என நடந்தவைகளை ஒன்று விடாமல் அவனிடம் கொட்டினான். பாட்டில் சரக்கும் காலியானது. ஒயின் ஷாப்பிலிருந்து வெளியே சாலையை கடந்தவர்களாய்
“என்னம்மோ… இதெல்லாங் சரிபட்டு வருமான்னே எனக்கு தெரியல செரி… டாக்டருக்கு என்ன பண்ணப் போறீங்க?”என முச்சந்தி பெட்டிக்கடையில் சிகரெட்டை வாங்கி வினோத் வாயில் வைக்க பப்லு தீக்குச்சியின் மிச்சத்தில் அதை நிதானமாய் பற்ற வைத்தான்.
“அதாங் தெரியல பப்லு”என புகைவிட்டபடி பலமாய் யோசித்தவன் அவனது விளம்பரத்தை தொங்கி கொண்டிருந்த அட்டைகளுக்குள் தேடினான். அது காற்றில் முதுகை காட்டி கொண்டிருக்க கோபத்தில் அதை பிடுங்கி எறிந்தான். அதை கவனித்த கடைக்காரர்
“என்னப்பா அதுக்குள்ள ஆளு வந்து சேந்துட்டாங்களா…! பரவாயில்லையே… நம்ம கடை”என தனக்குத்தானே மெச்சிக் கொள்ள
“ஆமாம்மா…”என வினோத் சிரிக்க புரிந்து கொண்ட பப்லு
“என்ன…? கஷ்டபட்டதெல்லாங் வீணா போச்சா”
“ஆமா”மென தலையாட்டி இல்லையென தனக்குள் சிரித்தான்
“ம்ம்…நாம யேங் நியூஸ் பேப்பர்ல விளம்பரம் கொடுக்கக் கூடாது?”
“நியூஸ் பேப்பர்லயா…! ம்ம்…“என யோசித்தான்.
குளுகுளு ஏசியில் டைல்ஸ் தரை சுவர்கள் சில்லிட; சந்தனம் மணக்க; கல்கண்டு இனிக்க கிளினிக் மங்கலகரமாய் துவங்கி இருந்தது. மினி இனிப்புடன் வர வேற்றாள். முதல் ஆளாக வினோத்தின் மனைவி தன் மகள்களுடன் வந்தவள் அனைத்தையும் பார்வையிட்டாள் மினியை ஆழமாய் ஸ்கேனீங் செய்தவளாய்
“இங்கெ டாக்டரு யாரு…?”
இல்லையென மினி
“ச்சு…”கொட்ட சிந்துவிற்கு ஒன்றும் புரியாது குழம்ப
“டோக்டரு இன்னும் கிட்டில்லா”
“அப்பாடா… வாயத் திறந்துட்டா…! என ஆசுவாசமடைந்தவள்” டாக்டரு இல்லையா…அப்ப…சாமி இல்லாத கோயில்ல பூசாரிக்கென்ன வேலை?”
“எந்தா…!”என மினி முழிக்க
“எந்தாவா…! தமிழ் தெரியாதா…!”
“கொறைச்சறியும்”
“கொறைச்சா…! டாக்டரு இல்லாத கிளினிக்கு… தமிழ் தெரியாத நர்ஸு…சரியா போச்சுப் போ இது உருப்புட்ட மாதிரிதாங்… எதைத்தாங் உங்கப்பேங் ஒழுங்கா செஞ்சுருக்காங்…வாங்கடி போகலாம்”மென மகள்களுடன் வந்த சூட்டோடு மங்களம் பாடிவிட்டுச் சென்றாள். அவள் போன வேகத்தில் வினோத் வர அவனிடம்
“அது யாரனு?” என அவள் விசாரிக்க
“என்னோட ஓய்ஃப்”
“ஓ…”வென இரு புருவத்தை தூக்கினாள்
“யேங்…! எதுவும் …?”என அவன் பதறிட
“ச்சு…”இல்லையென அவளது கண்கள் அவனைப் பரிதாபமாய் பார்த்தன. வினோத் தலையை கீழே தொங்கவிட்டிருந்தான். அவனைப் பற்றி அவள் தெரிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பென எண்ணி கொஞ்சம் அவனுள் ஆறுதலடைந்தான். நாட்கள் வாரங்களாயின டாக்டர் இல்லாத கிளினிக் என்பதை விட அவளை சந்திக்கும் சந்தோஷமே அவனிடம் மிகுந்திருந்தது. ஜிம், பார்லர் என தன்னை மெருகேற்றிக் கொள்ள நேரத்தையும், ரூபாய்களையும் செலவழித்தான். அவளை சந்திக்கும் வேளைகளில் சிகரெட்டை தவிர்த்தான். துர்நாற்றத்தை மறைக்க ஜிக்லெட்ஸ், பெர்ஃபியும் என நறுமண பரப்பிகளை உபயோகித்தான். அவளுக்காக எல்லாம் மாறியிருந்தது. சைக்கிள் டீ வந்திருக்க கடைப் பையன் மணி டீயை வேண்டாம் என்று மறுத்தான்
“ஏம்ப்பா… வேணாங்குற?”
“நாங்க டீ சாப்பிடறது இல்ல”
“ஏங்….டீ நல்லா இல்லையா?”
“டீயெல்லாம் நல்லாத்தாங் இருக்கு ஆனா…நாங்க இப்ப பில்டர் காபிக்கு மாறிட்டோங்”என நக்கலாய் பதிலளித்தான்.
“பில்டர் காபியா…! அது…செரி அப்ப டீ வேணாமா?”
“ஹூஹூம்…வேண்டா”மென முடிவாய் சொன்னான். பல நாள் வாடிக்கை திடீரென கைவிட்டு போனதை எண்ணி அவரது உடைந்த சைக்கிளையும், மனதையும் மெதுவாய் தள்ளிச் சென்றார். அவளுக்காக ‘டீ’ கூட உயர்தரமாக மாறி இருந்தது. இருந்தும், வினோத் குடிப்பழக்கத்தை மட்டும் மாற்றிக் கொள்ளவில்லை. கிளினிக் மூடிய மறுகணமே மதுக்கடை வாசல்கள் சொர்க்கமென திறந்து கொள்ளும் அவளின் போதையில் மதுவின் போதை உச்சத்தை தொடாதிருக்க எல்லையை மீறி குடிப்பான் இருபோதையும் சமமாக தொட கண்களுக்கு எல்லாம் அவளாகவே தோன்றும். போதையில் தடுமாறியவ னை கண்டு பதறியவளை பார்த்து ஏளனமாய் சிரித்தான்.
அடுத்த நாள் கிளினிக்கில் வழக்கத்திற்கு மாறாய் அவளிருந்தாள். அவனுக்கு எதையோ பறிகொடுத்த உணர்வு தலைக்குள் தகிடு தத்தம் போட்டது. அன்று முழுவதும் அவள் முகம் பார்த்து ஏதும் பேசவில்லையே என அவனது மனம் கடைக்கும், கிளினிக்குமாக தவித்திட அன்றைய நாள் ஏன்? எதனால்? எதற்காக? என்ற கேள்வி கொக்கிகளில் சிக்கிக் கழிந்தது. கிளினிக் சாவியை ஒப்படைத்தவளாய்
“பத்திரம் கீழே தவற விட்றாதீங்க”என சூசகமாய் சொன்னாள். அவனுள் உணர்வு கதவுகள் படாரென திறக்க. நேற்று போதையில் தடுமாறி போனதை அவள் கண்டதெல்லாம் நிஜமென அது உறுதிபடுத்தி சொன்னது. கேவலமான தனது நடத்தையை எண்ணி இருப்புக் கொள்ளாது அவனது பைக் உருண்டோட அது அவனை அறியாமலே மதுக்கடை வாசலில் நின்றது. விடைத்தேடும் இடமே கேள்வியாய் நிற்க செய்வதறியாது குழம்பினான். இறுதியாய் இன்றோடு குடியை நிறுத்தி விட முடிவெடுத்தான். அதற்கொரு பிரிவு உபச்சாரம் கொடுத்திட சிறிதளவு குடிக்கத் தோன்றியது. கடைக்குள் நுழைந்ததும் அவனுக்கு ஓரே ஆச்சரியம் என்றுமே இல்லாத வரவேற்பு பார் முழுவதும் ஏர் கண்டிஷனில் குளுகுளுவென ஜில்லிட்டது. பெரிய எல்சிடி திரையில் சேனல்கள் மாறிக் கொண்டிருந்தன எல்லாம் மிக சொகுசாக புதுப்பிக்கப்பட்டிருந்தது. டீசண்ட் பிச்சைக்காரன் பாட்டில்கள் பல காலியாகி இருக்க ஒரு டேபிளை முழுவதும் ஆக்கிரமித்திருந்தான். அவனுக்கு முன் ஏழையானவனைப் போல வினோத் கொஞ்சமாய் குடித்தான். பக்கத்து டேபிளில் இருப்பவன் ஆர்டர்களை கொடுத்த வண்ணமாகவே இருக்க சப்ளையர் ஒவ்வொரு முறை கடக்கும் போதும் வினோத்திடம்
“சார் வேற ஏதாவது…?”என கேட்டுக்கொண்டே இருந்தான். அது அவனுடைய பிரிவு உபச்சாரத்தை கேலி செய்தது. இருந்தும், கடைசி கல்ப்பை கவலையோடு விடை கொடுத்தான்.
வினோத் திடீரென அவனை மாற்றிக் கொண்டிருப்பதை நினைத்து பப்லுவுக்கு ஓரே பிரமிப்பு. பிரமச்சாரியான அவனுக்கே வராத எண்ணம் இரண்டு பிள்ளைகளுக்கு அப்பாவான பிறகும் வினோத்துக்கு வந்திருப்பதில் ஒரே ஆச்சரியம். அதே சமயம் ஒரு பாவத்திற்கு துணை போவதாக உள்மனம் உறுத்த அவனை சந்திப்பதைக் கூட தவிர்த்தான். இருந்தும் தொலைப்பேசியில் தொல்லை கொடுப்பான். அந்த மாதிரியான சங்கடங்களில் தொலைப்பேசியை கண்டு பிடித்தவனையும் நொந்து கொள்வான். கஷ்ட காலத்தில் கடவுளை நொந்து கொள்வதைப் போல. இப்போதெல்லாம் வினோத் மல்லுக்கட்டி இழுத்து செல்வது டாஸ்மாக்கிற்கு அல்ல உடற்பயிற்சி கூடத்திற்கு. அங்கு மணிக் கணக்கில் தன் உடலை வறுத்துவான் சினிமா ஹீரோக்களை போல. பியூட்டி பார்லரில் ஒயிட்னிங், ஸ்டெரயிட்னிங் என வெள்ளரி வில்லைகளை கண்களில் பதித்து பூதகரமாய் கிடப்பான். இதையெல்லாம் காண சகிக்காத பப்லு தன் சுயத்தை இழந்திருக்க. டிரெஸ் மேட்சிங்கை பார்த்து கடைக்கு கடை அல்லாட பொறுமையை இழந்து ‘அய்யோ… என்னெ வுட்ருங்க…ப்ளீஸ்’என நடுரோட்டில் கதறி அழ அழுகை தொண்டையை தொடும் வேளையில் ‘கடவுள் இதுக்குத்தாங் நம்மள படைச்சானோ…! என்னம்மோ…! எல்லாம் தலவிதி’யென தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொள்வான்.
நாளிதழ் விளம்பரத்தை பார்த்ததாக ஒரு எம்.பீ.பீ.எஸ் வர கிளினிக் சூடு பிடித்தது. மருந்து, நோயாளி, டாக்டரென மினி சுழன்றாள். மருந்து கடையும் சுறுசுறுப்பாக, வினோத் ஓய்வில்லாது உழைத்தான். பப்லுவுக்கு அதிர்ஷ்டம் வினோத்திடமிருந்து ஆர்டர்களாய் குவிந்தன மாத தொடக்கத்திலேயே டார்கெட் சுலபமாய் முடிய வினோத்தே கதியென கிடந்தான். மினியிடம் தன்னைப் பற்றி பகிர வினோத்திற்கு வாய்ப்புகள் குறைந்தது. காட்டில் எரிந்த நிலவாய்; கடலில் பெய்த மழையாய் தனது முயற்சிகள் யாவும் வீணாகி விட நொந்தான். கல்லா நிறைந்தும்; கண்ட கணா நிறைவேறவில்லையே எனத் தவித்தான். இரவுகள் அவனுக்கு முள் படுக்கையை விரித்தது. ஒரே ஆதரவாக இருந்த டாஸ்மாக்கிற்கும் பிரிவு உபச்சாரம் கொடுத்தாகிவிட்டது. வாழ்க்கை அர்த்தமில்லாதிருக்க, தனக்குத் தானே பேசிப் பேசி தனது உள் மன வார்த்தைகளோடும் அலுத்தான். வீட்டில் சிந்து படு கேவலமாய் திட்டிக் கொண்டிருந்தாள். அவன் குடியை விட்டும் கூட அவள் திட்டுவதை கொஞ்சமும் நிறுத்திக் கொள்ளவில்லை. சகிக்க முடியாதவனாய் தான் எடுத்த முடிவை தளர்த்தினான். திரும்ப அவனது பைக் டாஸ்மாக்கினை நோக்கி பறந்தது. தனது சுக துக்கங்களை பகிர உயிர்த் தோழனை தேடி பறந்தான் குடித்தான்… குடித்தான்… சப்ளேயர் ஓடி ஒழியும் வரை குடித்தான்.
வானத்தில் நட்சத்திரங்கள் மின்னின; தலைக்குமேல் வாகனங்கள் இரைந்தன; பரபரப்பான ஒயின் ஷாப் வாசலில் தான் மட்டும் கிடந்து உறங்குவதை உணர்ந்தவன் எழ எல்லாம் தடுமாறியது. அவனது நிலையை கண்டு விசுவாசமுடன் நாய்கள் பதறின; உதவிக்கு குரைத்தன; அங்குமிங்கும் செய்வதறியாது ஓடின; அருகே டீஸண்ட் பிச்சை ஒருவனிடம் தலையை சொறிந்தபடி நின்றிருந்தான். அவசரமாய் ஒரு ஆட்டோ வந்து நிற்க அது வினோத்தை அள்ளிச் சென்றது.
எதை சகிக்க குடித்தானோ அதே சகிக்க முடியாத சிந்துவின் சத்தம் போதை தெளிய கேட்டது. மின் விசிறியின் கட கட சத்தம் தாலாட்ட, வீட்டு படுக்கையில் படுத்திருப்பதை உணர்ந்தான்.
“செரி…நீ சத்தம் போடாதெ”என மாமனாரின் குரல் கலவரப்படுத்த வினோத்தின் தூக்கம் கலைந்தது.
“நீங்க இதுக்கு இன்னிக்கே ஒரு முடிவ கட்டுங்கப்பா… இனி இந்த ஆளு கூட என்னால வாழ முடியாது…”என சிந்து வழக்கமாய் பஞ்சாயத்தை கூட்டியிருக்க
“மன்னிச்சுடுங்க தப்புத்தாங் இனி இந்த மாதிரி நடக்காது“என வினோத்திடம் வழக்கமாய் பல உறுதிகளை வாங்கிய பிறகு பஞ்சாயத்து கலைந்தது. அவனது பைக்கை வாசலில் தேடினான்
“என்ன மாப்ளெ… பைக்கயா தேடுறீங்க… போய் விட்ட இடத்துல தேடுங்க” என மாமனார் நக்கலடிக்க அங்கிருந்த மொத்தமும் இலித்தது. வழிந்தவனாய் அங்கிருந்து நகர்ந்தான்.
மணி கடை வாசலில் காத்திருக்க. வினோத்தை பார்ததும்
“அண்ணெ உங்க செல்லு என்னாச்சுண்ணே…?”
“ஏண்டா..!”
“மினியக்கா அப்பா சிரியஸாங் உங்ககிட்ட சொல்லிட்டு போகத்தாங் ட்ரை பண்ணா… உங்க போனு சுவிட்ச் ஆஃபுன்னே வருது”
“தொலைச்சிட்டேண்டா…செரி… இப்ப மினி…”
“ரெயில்வே ஸ்டெஷனுக்குத்தாங் போனாங்க”
“உங் செல்லக் கொடு”என மணி செல்லில் நம்பர்களை அழுத்த அதில் ‘நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பாங் ஆனா கைவிட மாட்டாங்… என ரிங் டோன் பஞ்ச் அடிக்க
“ஹலோ…”
“ஹலோ…நாங் வினோத் பேசுறேங்”
“சார்…அச்சணுக்கு சிரீயஸா ஞான் கண்டு…”
“இப்ப நீங்க எங்க இருக்கீங்க?”
“ஞான்… ரெயில்வே ஸ்டெஷன்லயா”
“எங்கெயும் போயிடாதீங்க… ப்ளீஸ் அங்கெயே வெயிட் பண்ணுங்க ஃபைவ் செகண்ட்ஸ்ல நாங் அங்க வந்துர்றேங்…”என தொடர்பை துண்டித்தவனாய் மணியிடம் கடையை திறக்க சொல்லிவிட்டு தனது பைக் ஆக்ஸிலேட்டரை முறுக்கினான். அதில் ஒட்டியிருந்த மண் கீழே கொட்டியது நேற்று டாஸ்மாக்கில் விட்டுச் சென்ற பைக் கேட்பாரற்று மண்ணில் கிடந்ததில் ஒட்டிக் கொண்டது. கைப்பேசியையும் அங்கு தேடிப் பார்த்தான் கிடைக்கவில்லை பைக் மட்டும் திரும்ப கிடைக்க சமாதானம் சொல்லிக் கொண்டவனாய் அவனது மோட்டார் பைக் ரயில் சந்திப்பை அடைய ‘யாத்ரிகள் கிருபயா தியான் தே’என ஒலி பெருக்கிகள் பயணிகளின் கவனத்தை காந்தமாய் ஈர்த்திருந்தன. டிக்கட் கவுன்டரின் அருகில் மினி பரிதாபமாய் காத்திருக்க அவளது கண்கள் வினோத்தை தேடி அலைந்து பிடித்தன. அவனது பர்ஸிலிருந்த ஏ.டி.எம் நோட்டுக்களை எடுத்து அவளிடம்
“இத வெச்சுகங்க” என க் கொடுக்க
“ம்ஹீம்…”என மறுத்தாள்
“வேண்டான்னு சொல்லாதீங்க… இது அப்பாவோட செலவுக்காகும் ப்ளீஸ்…” என அவளது கையில் திணிக்க அதற்கவளது கண்கள் நன்றியை பனித்தன. அவசரமாய் ஸ்டெஷன் ஒலிபெருக்கியில் ‘பயணிகள் கவனத்திற்கு பாலக்காடு வழியாக செல்லும்…‘மென அறிவிக்க
“பின்னெ… ஞான் …”என ஆயத்தமானாள்
“ம்ம்…”மென வார்த்தையளவில் வழியனுப்ப மனமோ அவளை போக விடாமல் தடுத்தது. ரயில் பெட்டியில் ஏறி அமர்ந்தவளிடம் பிரிய மனமில்லாது ஓடிவந்த வினோத் “உங்களுக்கு அங்கெ எதுவா இருந்தாலும்… என்ன தேவைன்னாலும்… கடை லேண்ட் லைனுக்கே போன் பண்ணுங்க”
“ஆங்…செர்ரி…”என அவளும் பாலக்காடு எக்ஸ்பிரஸும் நகர அப்பெட்டி பயணிகளை அதிஷ்டக்காரர்களென அவனது மனம் எண்ணி ஏங்கியது. தினமும் அவளை பார்க்ககூடிய அற்ப சந்தோஷத்தையும் அந்த உணர்வற்ற இரும்பு பெட்டி வேகமாய் எடுத்து போனது. அவனுக்கு முன்னே ஒரு காதல் ஜோடி இறுக கைகோர்த்து நடக்க துர்பாக்கியசாலியான தன்னை தானே வெறுத்தான். ‘சார்…யாருமில்லாத அனாதைங்க…’என ஒரு பிச்சைக்காரி பிளாட் பாரத்தில் பிச்சை கேட்டிருந்தாள். ‘யாருமில்லா அனாதை’ என்கிற அவலக்குரல் மட்டும் தன் மனக் குரலோடு ஒத்து ஒலித்துக் கொண்டேயிருந்தது அந்த முழூ பிளாட்பாரத்தையும் கடக்கும் வரை. பைக் உறுமிய வேகம் டாஸ்மாக்கிற்கென முடிவாக. பாரில் குடித்தான். போதையில் அவனது பைக் சீறியது. சிக்னலில் டிஜிட்டல் சைன் போர்டுகள் ‘Don’t Drunken Drive’ என சிகப்பெழுத்துக்களில் திரும்ப திரும்ப கண்டித்தும். சிகப்பு சிக்னலை அவன் வேகமாய் அத்துமீற
“ஆ…”வென அலறலில் அனைத்தும் நொடியில் கிடுகிடுத்தது. எல்லாம் முடிந்தது போல. எட்டிய கும்பல் முகத்தை சுளிக்க; சூரியன் சுட; பிம்பம் இருள; சுள்ளென ஒரு உணர்வு பரவ; வட்ட வட்டமாய் வெளிச்சம் கண்களை கூச; தூரமாய் அழுகை சத்தம்.
பிறகு, “வினோத்…வினோத்…”என சாந்தமாய் ஒருவர் சிரித்தார்.
பிறகு, “மாப்ள…”என மாமனார், சிடு மூஞ்சியாய் சிந்து, அவன் மகள்கள்.
பிறகு, “ஹலோ…”என கிளினிக் டாக்டரு, பப்லு, பக்கத்துல மணி அழுதான்.
பிறகு, (யோவ் எத்தனை பிறகு முடியல)
இல்ல… இது கடைசி பிறகு, (அப்ப ஓகே…)
“சார்…”என மினி நின்றிருந்தாள். போதையில் அவள் தோன்றுவதை போல இருந்தது. அவனது கண்கள் சுற்றி அனைத்தையும் கிரகித்து விபரீதமென பயந்தன. வாய் வறண்டு திறாணி இல்லாதிருக்க எழ முயன்றான். வலது பக்க காலும், கையும் பெரிதாய் கட்டுகளுடன் கணத்தது. “ம்ஹீம்…வேண்டா…”மென மினி திரும்ப அவனை பழைய நிலையிலேயே படுக்க வைத்தவள் ஓடிச் சென்று டாக்டர், நர்ஸ், பீபி அப்பேரட்டஸ் என சகிதத்தையும் அவசரப்படுத்த, நாடி முதல் கண், வாய் வரை பரிசோதித்து நரம்பு வழியாக வாழ்ந்தவனுக்கு வாய் வழியாக பழச்சாறு கொடுக்க அவனது உயிர் திரும்ப வேகமாய் துடித்தது. முள் கிழிக்கும் வேதனையில் அவன் துடிக்க மினி சுகமாய் வருடியும் அது தொலைவில் தொட்டது. இருண்ட ஆழ் குழிக்குள் தள்ளப்பட்டவனாய் தூக்கத்தில் அலறி எழ ஆதரவாய் இருந்து தேற்றுவாள். கண்களை மூடினால் ஒரே கனவு பயம் அவளின் முந்தாணையை பிடித்து பாலகனாய் தூங்குவான். அதையெல்லாம் ஒரு தாயாய் இருந்து சகிப்பவளை தவறாய் எண்ணிய அவனது இதயத்தில் ஈரம் கசிந்தது.
ஒருநாள் அறைக்கு வெளியே அவள் தொடர்ந்து தொலைபேசியில் தொல்லைக்குட்பட்டிருந்தாள். மொழி புரியாத போதும் ஏதோ பிரச்சனையில் அவள் தவிப்பது மட்டும் அவனுக்கு புரிந்தது. கூப்பிட்டான் அது அவளை எட்டவில்லை. என்னவென்று அறிந்து கொள்ள அவனை வறுத்தி எழுந்தான். சப்தம் கேட்டு அவள் ஓடிவர. கீழே கிடந்தவனை பார்த்து பதறினாள். அவனை சுமந்து படுக்கையில் இட
“போன்ல…? என்ன ஆச்சு…? என பேச்சும், செய்கையுமாக அவளின் பதட்டத்தை விசாரித்தான். தயக்கத்துடன் நின்றிருந்தவள்
“இல்ல…அதொக்க சரியாகிப் போவும் அது ஒண்ணுல்ல”என அவளின் வார்த்தை கள் பொய் பேசின. அதை ஏற்றுக் கொள்ளாத அவனது கண்களில் சிக்கித் தவித்தவளாய் “அது என்டெ அச்சன் சுகா இல்லாது போக கடன் கொடுத்த ஆயாளுக விளிச்சிட்டு வளர பிரஷ்னமானு…”என அவள் கண்களில் நீர் உண்மையை சுமந்திருந்தது.
“மொத்தம் உங்க அப்பா எவ்ள கடன் தரணும்?”
“மொத்தங்கூட்டி…ம்ம்…”மென அவளது மனக் கால்குலேட்டரில் எதையோ கூட்டி முடிவாய் “ஒன்றை லட்ஷம் வெரும்”என்றாள்.
“கடையில…”என உள்ளுக்குள் அவன் முனுமுனுத்தான்.
“அவ்விட சேச்சீயுண்டு”என்றாள்
“யாரு..? சிந்துவா!”என ஆச்சரியத்தில் அவன் கேட்க ஆமாமென அவள் கண்கள் மூடித் திறந்தது. “அப்போ கடைக்கு கொஞ்சம் கால் போடு”என அவள் செல்பேசியில் அது கினீர்…கினீர்…ரென அழைக்க அவனிடம் கொடுத்தாள்.
“ஹலோ”
“ஹலோ… நாங் வினோத்”
“உக்கும்…சொல்லுங்க”என வெறுப்பாய் மறுமுனையில் சிந்து வெட்டினாள்
“ஒண்ணுமில்ல… லாக்கர்ல பணம் வெச்சுருக்கேங்…”
“ஹாஸ்பிடல் பில்லத்தான் தண்டமா கட்றனே…” என சலித்தாள்.
“இல்ல… இது மினிக்கி…”யென இழுத்தான்
“மினிக்கிதான்… சம்பளம் போட்டாச்சே அப்புறங் என்னெத்துக்கு பணம்…?”
“இல்ல…”
“அதெல்லாங் நீங்க ஒண்ணுங் கிழீக்க வேணாங் போனை வைங்க…”என அவள் அதிகாரம் தூள் பறந்தது.
“நாங் சொல்றத கொஞ்சங் கேளேங்…”என பேசிக் கொண்டிருக்கும் போதே போன் விக்கியது அவள் தொடர்பை துண்டித்ததாக, செய்வதறியாது சிந்தித்தான்
“சார் எனக்காக பாவம் நிங்களு…கஷ்டப்பட வேண்டாங்”என மினி அவன் நிலையை எண்ணி வருந்தினாள்
“உங்க கிட்ட பப்லு நம்பர் இருக்கு…?
“யாரானு… ஆயாளு… மெடிக்கல் ரெப்போ…”
“ஆமாங்”
“ஓ…”வென கண்களை மூடி அகலத் திறந்தாள்.
போனில் அழைத்த பப்லு நேரில் ஆஜராகியிருக்க
“எங்க பாஸ்… ஏங்கிட்ட போயி… இன்னும் போன மாச எக்ஸ்பென்ஸெ கம்பெனிலேர்ந்து கைக்கு வராம அங்கெயும் இங்கெயும் அல்லாடிட்டுருக்கேங்… வழக்கமா இதுக்கெல்லாங் உங்ககிட்டத்தான் வந்து நிப்பேங் இப்ப நீங்களே…”என கைகளை பிசைந்தான்
“யேங்… ஜெக் புக்”கென யோசித்தவன் “பப்லு எனக்கொரு ஹெல்ப் பண்றீங்களா?”
“ம்…சொல்லுங்க”
“பேங்குக்கு போயிட்டு அங்கெருந்து எனக்கொரு கால் பண்ணுங்க நாங் பேங்க் மேனேஜருட்ட பேசுறேங்…”என பேசி ஒரு ஜெக் லீஃபுக்கு மட்டும் அனுமதி கிடைக்க கையெழுத்திட பேனாவை அவசரமாய் பிடித்தான் வினோத். அது அந்த பூதகரமான மாவுக்கட்டில் விரல்கள் புதைந்திருக்க பேனா கைக்குள் அகப்படவில்லை. முயன்றான் முட்டாள் தனமாய்; கை விரல்கள் பழைய நிலைக்கு திரும்ப சில மாதங்களாகும் என்கிற சாதாரண விஷயமும் அந்த உணர்வின் வெளிப்பாட்டில் அது அவனை சாமானியன் ஆக்கியது. முயற்சிகள் அனைத்தும் முடங்கிப் போக படுக்கையில் துவண்டான்.
அடுத்த நாள், டாக்டர் பார்வை நேரம், ஆவலாய் காத்திருந்த வினோத். டாக்டரை பார்ததும்
“சார்… இந்த கட்டுலர்ந்து எப்ப என்னை ரிலீஸ் பண்ணுவீங்க”
“ஆஹ்…ஹா…ஏங் கஷ்டமா இருக்கா வினோத்?”என சிரித்தார்
“இல்ல சார் முக்கியமான பேப்பர்ஸ்ல சைன் பண்ண வேண்டியதிருக்கு…” என மினியின் கவலை முகத்தை பார்த்துக் கொண்டே டாக்டரிடம் கேட்டான்.
“எப்டியும் ஒன் வீக் டென் டேஸ்ல… இந்த கட்ட பிரிச்சுடுவோம்” என்றதும் ஆயிரம் வாட்ஸ் ஒளி வெள்ளம் வினோத்தின் முகத்தில் பிரகாசித்தது. அதனை தொடர்ந்து அவர் “பட்… கை பழைய நிலைக்கு…” என கைவிரல்களை மடக்கி திறந்து “இந்த மாதிரி ஆக்ஷன் வர்றதுக்கு மே பீ… ஒன் மன்த் கூட ஆகலாம்” என அவனது ஆயிரம் வாட்ஸையும் அப்போதே ஊதி அணைத்தார். ஏதேதோ அறிவுரைத்தபடி டாக்டர் அங்கிருந்து அடுத்த நோயாளிக்கு நகர்ந்தார்.
கடிகார முட்கள் நகரும் சத்தம் மட்டும் நிசப்தத்தில் கேட்டிருக்க சுவற்று பல்லி அமைதியாய் வேடிக்கை பார்த்திருந்தது. மினியின் செல்போன் பியுஜியம் கினு…கினு…வென அலறிட அது அபாய சங்கினைப் போல் அபஸ்வரமாய் கேட்டது. நம்பரை பார்ததும் அவள் திகைத்தாள். செல்போன் அலறிக் கொண்டே இருந்து பின்பு ஓய்ந்தது. அவள் கொஞ்சம் ஆசுவாசமடைந்தாள். திரும்பவும் அதே போன்றதொரு நம்பர் வந்து அலறிட அதுவும் கடனுக்கானதாக இருக்குமோ என பயந்து எடுக்கத் தயங்கினாள் மினி. அவளது தவிப்பை சுவற்று பல்லிவரை உணர்ந்து ஓடி மறைந்தது. வினோத் எடுத்து பேசச் சொல்லி தைரியமூட்டியவனாய் தலையசைத்தான். அவள் அழைப்பைத் தொடர
“ஹலோ…”
“ஹலோ எந்தாயி?”
“இல்ல… இன்னுங் கொறைய அவகாசம் வேணுங்…”
“எந்தா…ஞான் எத்தறை அவகாசங் கொடுத்து பின்னெ ஞான்…”
“இல்ல…”என வினோத்தை பார்க்க அவன் இடக்கையின் ஒற்றை விரலை உயர்த்தி காட்ட “ஒரூ மாசம்… ஒரூ மாச அவகாசம் கொடுத்தா மதி”என்றாள்.
“ஒரூ மாசமோ … அதெங்கன…”என கடன் கொடுத்தவர் கடிந்துரைக்க கடனுக்கான முழுப் பொறுப்பையும் தானே ஏற்றுக் கொள்வதாக வினோத் அவரிடம் பரிந்துரைக்க முடியாத பட்சத்தில் அவரும் அதற்கு சம்மதித்தார். தன் குடும்பக் கடனுக்கு சற்றும் சம்பந்தமில்லாத வினோத் முழு பொறுப்பேற்றதை நினைத்தவள் மனம் இளகினாள்.
ஒடிந்த எலும்புகள் ஒன்று கூடிவர ஆட்டுக்கால் சூப் அருமருந்தென பாட்டி சொன்ன ஞாபகம். அதை வாங்க வெளியே அழைந்தவள் மருத்துவமனைக்குள் நுழைய மினியை கவனியாதவளாய் சிந்து வெளியேறினாள்.
மினியோ வினோத்தை காண வந்திருப்பதாக எண்ணிட, சிந்துவோ அங்கு வெறும் பில்லுக்கான பணத்தை செலுத்த வந்து போயிருப்பதையும், கேண்டீன் சோறு சிறை கைதிக்கு கொடுப்பதைப் போல வெறும் பசிக்கென அவனுக்கு கொடுக்கப்படுவதையும், பாசமோ, பரிவோ பருக்கையளவில் கூட அவனுக்கு கிடைக்கவில்லை என்பதையும் மினி உணர்ந்தாள். ஆனால், அவனோ மாவுக்கட்டிலிருந்து விடுபடும் தருணத்தையே எதிர் நோக்கி காத்திருக்க டாக்டர், நர்ஸென அனைவரிடமும் அதையே கேட்டு தொல்லை செய்தான். கட்டுகளை குறித்த நாட்களில் பிரிக்கப்படாமலேயே படுக்கையில் கிடந்தான் ஏதோ காரணம் சொல்லி மருத்துவமும் காலத்தை நீட்டிக்க வெறுப்பு அவனது உச்சியை தொட்டது. அவனுக்காக மினி கோயில் படிகளை ஏறி இறங்கினாள். வேண்டுதலை வெள்ளைத் தாளில் எழுதியது போக மீதி அவனது வெண்மையான கட்டுகளிலும் நிரப்பியிருந்தாள். அவனுக்கு இவளுமாக; இவளுக்கு அவனுமாக நலம் விரும்பி போராடினர்.
அவளின் வேண்டுதலை
அக்கட்டுகள் உணர்த்த
அன்பின் அடையாளமாய்
அதை அவன் ஆசையில் அணைக்க
அணைத்த அரை நொடியில்
அதை ஆவலோடு அறுத்தெடுக்க
ஆக்ஸா பிளெடும் கையுமாய்
அருகில் அமர்ந்தான்
அந்த அலோபதி அரக்கண்
கட்டுக்களை பிரிக்க தன் கையின் சுகத்தை விட அந்த அன்பின் அடையாளத்தின் நிலையை கண்டு மனம் பதற அதற்கு ஆறுதலாய் டாக்டர் துணிக்கட்டை போட்டு மணிக்கட்டை கழுத்து பட்டையில் தொங்க விட கை ஊஞ்சலில் ஆடி கொண்டு இருந்தது.
“இப்படியே கைய தொங்க விடுங்க இல்லேண்ணா கை ஸ்டெரெயினாயிடும்” மென
கையிலும், கண்களிலும் சுரணை இல்லாதிருந்த வினோத்திடம்.
“இப்ப அப்டித்தாங் இருக்கும் கொஞ்ச நாளைக்கு அப்புறமா மூவ்மெண்ட் பண்ணிக்கலாம்… கொஞ்சம் ரெகுலர் எக்ஸர்சைஸ் பண்ணா சரியாகிடு”மென டாக்டர் வார்த்தைகளில் வலுகொடுத்தார். கட்டின் பாரம் குறைந்து மனதின் பாரமோ கணத்தது. கடனுக்கான காலக்கெடு முடிவதற்குள் கை திரும்ப பழைய நிலைக்கு வந்துவிடுமா? என்கிற அச்சம் அவனுள் சுள்ளென்றது. ஒரு மாதத்தை மின்னல் வேகத்தில் நாள்காட்டி நாட்களை கிழித்துக் கொண்டிருக்க அதற்குள் மருத்துவமனை டிஸ்சார்ஜ் என்றது. விடை பெறும் நேரம் வேகமாய் கரைய ஊமையாகிப்போன அவர்களது மனம் உள்ளுக்குள் ஓயாமல் பேசியது. அதையும் பொறுத்து கொள்ளாத வினோத்தின் சுற்றம் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அவசர அவசரமாய் கையொன்று காலோன்றுமாய் காரில் கிடத்தியது. அவள் கண்களில் நீரையும், இதயத்தில் அன்பையும், கையில் ரிப்போர்டுக்களையும் சுமந்து ஓடி வர எனக்கென்ன என அலட்சியமாய் ஆக்ஸிலேட்டரை விடுவதற்குள் அவள் கொண்ட பற்றில் காரை பற்றி நிறுத்தினாள். கையிலிருந்தவைகளை ஒப்படைத்தவளாய் ஹாஸ்பிடல் வாசலில் அமர்ந்திருக்கும் விநாயகரின் விபூதியை வினோத்தின் நெற்றியில் இட அவளை பிரிந்து அந்த நாலு சக்கர பருந்து சாலையில் பறந்தது. அவளின் அரவணைப்பு, அவள் காட்டிய கரிசனம், எல்லாம் கடுகென கரைந்து காணாமல் போனதை அவனது உள்மனம் உணர்ந்து தவித்தது. அவள் கடைசியாய் ஒப்படைத்து சென்ற அந்த மெடிக்கல் ரிப்போர்டுக்களும், மருந்துப்பையும் அறையில் ஆதரவற்று மின் விசிறிக் காற்றில் சலசலத்து கொண்டிருந்தன. சலசலப்பு அவனை நெருடியது. பொறுமை இழந்தவனாய் மேஜையிலிருந்தவைகளை வெறுப்பில் கீழே பிடித்து தள்ளினான். அதிலிருந்து அவனுடைய பர்ஸ் விழ ஏடிஎம் கார்டுகள், டூவீலர் லைசன்ஸ், பில் ரெசிப்டுகள் என சகிதமும் சிதறியது. உயிரில் மீதி திரும்ப வந்த சந்தோஷம். கடனுக்கான வாக்குறுதியை காப்பாற்றி விடலாம் என்கிற ஆவலில் கைத்தடி உதவியுடன் மெல்ல மெல்ல நகர்ந்து அவனது நினைவு ரெஜிஸ்டரில் பதிவாகியிருந்த மினியின் நம்பருக்கு ஹாலில் இருந்த லேண்ட் லைனில் டயல் பண்ணினான். அது செயலற்றதை உயிரின்றி உணர்த்தியது என்ன செய்வதென யோசித்தான் கிச்சனில் தடால் புடாலென ஓலிக்க
“வேணி…வேணி…”என அழைத்தான்.
“இதோ வந்துட்டேங்…”என கை வேலையை அப்படியே விட்டு விட்டு வேலைக்காரி ஓடி வந்தாள்.
“ஊங்கிட்ட செல் போனிருக்கு?”
“ம்ம்… இருக்கெ”என தன் ஈரக்கைகளை முந்தாணையில் துடைத்தவளாய் “இருங்க எடுத்துட்டு வர்ரேங்”என மின்னலாய் எடுத்து வந்தாள். அதில் மினியின் நம்பரை வினோத் சொடுக்க அதன் பஞ்ச் டயலாக் மினி நம்பரென உறுதிப்படுத்த உற்சாகமனான். நீண்ட நாட்களாய் கவனிக்காது போன அவளது அறையை சுத்தம் செய்து கொண்டிருந்த மினியின் செல்போன் பிரைவேட் நம்பரென கினுகினுத்தது. அது கடனுக்கான தொல்லை அழைப்பென அவள் எடுக்காமல் விட; வினோத் தொடர்ந்து அழைத்தான். ‘நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பாங் ஆனா கைவிட மாட்டாங்… என ரிங் டோன் அவனை சோதித்தது. மறுமுனையில் அவள் எரிச்சலடைந்து போனை எடுக்க பேட்டரி வீக்கென அது தன்னைத் தானே ஸ்விட்ச் ஆப் செய்து கொண்டது. வினோத் வெறுப்படைந்து டீப்பாயில் போனை கிடத்திவிட்டு சோபாவில் தலையை சாய்த்தான். டீப்பாயிலிருந்த செல்போன் உதறலெடுத்து கத்த இது அவள்தானா? என அவனுக்குள் வைப்ரேட் ஆனது
“ம்ம்… சொல்லுப்பா…”என வேணி போனை எடுத்தவளாய் வினோத்திடம் “ஏங் பையங்…”என செய்கை காட்டி பேசிவிட்டு சமையற்கட்டுக்குள் அவள் திரும்ப மீண்டும் ஒரு அழைப்புமணி வினோத் ஆவலாய் சோபாவில் நிமிர்ந்தான். வேணி அதில் யாரிடமோ திரும்ப சிரித்து பேசத் துவங்கினாள். வினோத் பலமுறை நிமிர்ந்தும்; சரிந்துமாய் துவண்டிருக்க மினியிடமிருந்து மட்டும் அழைப்பு வந்ததாக இல்லை. வேணியை அழைத்து செல்ல அவளது மகன் வாசலில் பெரிதாய் ஒரு செல்போனில் ‘Angry Bird’-ஐ அனாயாசமாய் விளையாடி கொண்டிருந்தான். “சாப்பாடு வைக்கவா?”என வேணி புறப்படுவதற்கு ஆயத்தமானாள்.
“இல்ல பசியில்ல”என்றான். அவளின் பார்வை நிதானம் இழந்து தவித்தது. “டேபிள்ள வச்சுட்டுப்போ அப்பறமா சாப்டுக்குறேங்”என அவள் மறுநொடிக்கெல்லாம் டைனிங் டேபிளில் அடுக்கினவளாய்
“நாங் கிளம்புறேங்…”என டீப்பாயில் கிடந்த செல்போனையும் விருட்டென எடுத்துச் சென்றாள். ஏதோ அழுத்ததில் அவன் கண்கள் வீடெங்கும் துழாவின. ஒரு பெண்ணின் ஓவியம் அவன் கண்களில் தட்டுப்பட அதில் V.அனன்யா ‘IIIrd Std’ என சின்ன மகளின் பெயர். அது அவனின் மனநிலையில் ஒத்திருந்தது.