பாவாத்மாக்கள்
கரு முட்டையில் குடி புகுந்து,
கண் கால்கள் வளரப்பெற்று,
உலகத்தோடு ஒட்டி உறவாட
காத்துக்கிடந்தேன்.
வந்தது அந்த நாள்!
இடி சத்தம் போல்,
பட் பட் என்ற வெடி சத்தம்.
லேசாக கண்கள் கூசி,
வெளிச்சம் பட்டு
கிளர்ச்சி கொண்டேன்.
வெடி சத்தம் விடாமல்
கேட்ட படி இருந்தது.
கண்கள் இமை கூட்டை
இம்சிக்காமல் எட்டிப் பார்த்தது.
அன்னை அருகில் இல்லை.
என்னைப் போல் பலரும்
அன்று அவதரித்து இருந்தது,
புரிந்தது.
அவதரித்த அனைவரும்
அனாதைகள் போலும்.
கூச்சலோ கூச்சல்.
யாரோ ஒருவர் எங்களை
வாரிக் கையிலெடுத்து
வேறு இடத்துக்கு கொண்டு செல்கிறார்.
சிறய இடம்,
அதில் இறக்கிவிட்டு தாழிடுகிறார்.
நிற்க முடியாமல் தடுமாறுகிறோம்.
மூச்சு முட்டும் அறை,
ஒருவர் மேல் ஒருவர் சரிந்து
சிதருகிறோம்.
உணவும் நீரும் ஒரே
இடத்திலே!
முண்டி முண்டி உண்டுவிட்டு,
முக்கி முக்கி நீரை குடித்துவிட்டு
மயங்கி கிடப்போம்.
காலையில் இடது காலில்
ஒரு ஊசி இடுவர்,
ஊசி ஏற்றிய மறு நொடி,
கண்கள் எரிச்சல் கட்டும்,
வயிறோ கதறும்,
மூச்சுத் திணறல் அதிகரிக்கும்,
கால்கள் நடுக்கம் கண்டு
மடிந்துவிடும்.
இந்தக் கொடுமை சுமார்
ஆறு மணி நேரம் பிடிக்கும்.
மாலையிலோ இரண்டு
கால்களிலும் துடிக்கவிட்டு
ஊசி தைப்பர்.
இதனால் கிடைக்கும் மரண
வேதனை இரவெல்லாம் நீடிக்கும்.
கொடுமையான வாழ்க்கை
ஏன் என்று புரியாமலே இருந்தது,
எதிர் அறை நண்பன் எடுத்துரைத்தான்.
அதாவது,
நாம் அனைவரும் அடிமைகளாம்.
நம் உடம்பில் வழு கூட்டி,
விற்று விடுவார்களாம் என்றான்.
புரிந்து கொள்ள முடியாமல்,
படைப்பாளியை கூப்பிட்டேன்.
இறைவா, நான் யார்?
ஏன் இந்த நரகம்?
பிறந்த பயன் என்ன?
என்று கேட்டதற்கு,
பதிலளித்தான் இறைவன்...
பிறந்த அனைவரும் மாண்டே தீரவேண்டும்,
சில இனத்தோர் வாழும்போது
பிறருக்கு பயனுள்ளதாய் இருப்பர்,
மற்றினத்தோர் இறந்த பின்பே
பயனளிப்பர்.
நீ இரண்டாம் இனம்.
உன் இனத்திலும் இரு வகைகள் உண்டு,
முதல் வகை - சுகப் பிரசவம் தறித்து,
இயற்கையான சூழலில் வளர்ந்து,
வாழ்ந்து, மடிந்தபின் பிற இனத்தாருக்கு
உணவாய், சக்தி தரும் மூலக் கூறாய்
செயல்படும் புண்ணிய ஆத்துமாக்கள்.
இரண்டாம் வகையோ - குறைப் பிரசவத்தில் பிறந்து,
செயற்கையான சூழலில் சிக்கி,
சின்னாபின்னமாகி, சீக்குப் பிடுத்து,
நரக வேதனையோடு வளர்ந்து,
அல்பாய்ஸில் உயிர் நீத்து,
கெட்ட ஆவியாய் உண்பவர் உடலில்
புகுந்து நாசம் செய்யும் பாவ ஜென்மங்கள்.
நீ போன பிறவியில்
செய்த பல பாவங்களின்
விளைவால் இந்தப் பிறப்
எடுத்திருக்கிறாய் என்றது இறைவன்.
சுருக்கென்று ஊசி குத்து பட்டு,
சுருங்கினேன்.
உடலில் ஆங்காங்கே மாற்றங்கள்,
காலின் ஒரு தொடைப் பகுதி
வீங்குகிறது.
ஒரு மார்பகம் மட்டும்
அசுர வளர்ச்சி அடைகிறது.
வளர்ச்சி! வளர்ச்சி!
உடலெங்கும் வளர்ச்சி!!
இடை கூடக் கூட,
பாரம் தாங்காமல் ஒரு கால்
முறிந்து மடிந்தது.
உடைந்த காலோடு,
ஒரு சில நாட்கள் ஓடியது.
உயிர் போகும் வலி
உடலை உலுக்கியது.
போன ஜென்ம பாவத்தை கழுவ
இந்த ஜென்மத்தில் தயாரானேன்.
என் உயிர் பிரியும் நாளுக்காக
காத்துக் கிடந்தேன்.
அந்த நாளும் வந்தது!
நரகத்தில் விடைபெற்று,
வீரமரணம் அடையப் பெரும்,
சுதந்திர நாள்!
மரண பயம் தொடங்கிற்று,
கனிந்த கண்களோடு ஒரு
சபதம் எடுத்தேன்...!
தலை வெட்டிய மறு நொடி,
ஆவியாய் மாறி,
என்னை அசைபோடும் அனைத்து
அசைவர்களையும் வியாதிக்கு
உட்படுத்தி வீழச் செய்வேன்
என்று.
அதி காலை 3 மணி,
ஒரு சிறிய வேனில் ஏற்றினர்.
நின்றது ஒரு இடத்தில்
ஏதோ பேரம் பேசி,
என்னோடு சேர்த்து இருபது பேரை,
கைமாற்றினர்.
வாங்கியவன் எங்களை
தலை கீழாய் தொங்கவிட்டு
கட்டினான்.
முறிந்த காலில் படு முடிச்சிட்டான்,
வலி தாங்காமல் வாய் பிளந்தேன்.
ரத்த ஓட்டம் கண்களில்
பாய்ந்தது.
சில மணி நேரம் கழித்து,
ஏதோ ஒரு இடத்தில நிறுத்தி,
இறக்கி வைத்தான்.
எங்களைச் சுற்றி தேர் கூட்டம்.
இந்தப் பாவிகளை வாங்கப் போகும்
பாவாத்மாக்கள்!!!