தாரமுமானவள் தாயூமானவள் - கற்பனைக் கவிதை

தாரமுமானவள் தாயூமானவள் - கற்பனைக் கவிதை
==============================================
எங்கோ ஒரு மைதானத்தில்
களிப்புடன் விளையாடிக்கொண்டிருந்த
சிறுகுழந்தை ஒன்று
தாயைக்கண்டதும்
குதூகலிப்பதைப்போல
உன் சேலைக் கொசையின்
வாசம் உணர்ந்ததும்
அத்தனையையும் நிறுத்திவிட்டு
குடுகுடுவென ஓடி ஒட்டிக்கொள்கிறேன்
எதனாலோ ம்ம்
அழிசேட்டையில் கிள்ளிமகிழும்
புசு புசு பொம்மையாய்
நினைத்திடும் போதெல்லாம்
ஆனந்தம் தருகிறாய்
அடம்பிடித்து அழுது உறங்கும் போது
என் உதட்டோரம் கசியும்
உமிழ்நீர்த் துடைத்து
கீழ்த்தாடைகுழியில்
ஒரு செல்லமுத்தம் தாயேன்
என கேட்கத்தோன்றும்
இடக்குநாட்டான்
பேசிப் பேசி சலிக்கலையா என்று
கேட்குந் தருவாயில்
முன்பு பேசியதெல்லாம் மறந்து போகும்
பேசியவற்றை
திரும்பிப் பார்த்தோமானால்
என்ன பேசினோம் என்பதே நினைவிலில்லை
மறுபடியும் ஆரம்பிப்பேன்
வளர்ந்து கெட்டான்
தலச்சம்பிள்ளைக் கணக்காக
நல்லது கெட்டது என
ஒவ்வொன்றாய் சொல்லித்தருகிறாய்
உன் அருகாமையின்போது
குளிர்நாட்களில்
வெதுப்பின் இறுக்கம் தொலைத்த
கன்றுபோலாகிறேன்
பெயரிடாத உறவு
எனக்கும் உனக்குமிடையில் என்பாய்
உன்னிடம் உட்கொள்ளும்
காதலோ காமமோ ம்ம்
அது எதுவாகினும்
உன் மார்பில் சாய்ந்த போதெல்லாம்
தாய்ப்பால் நெடி அறிகிறேன்
இறைவன் என்னிடங் காட்டும்
அதிகப்பட்ச க்ரூரம்
எதை என்பேன் தெரியுமா,,
மாதத்திற்கொருமுறை
உன்னை என்னுடன்
இணையவிடாமல் செய்யும்
அந்த மூன்று நாட்களின் இடைவெளியைத்தான்
அனுசரன்