சீர்காழி என்ற திருப்பூந்தராய் - பாடல் 10

சீர்காழி என்ற திருப்பூந்தராய் ஊரில் விளங்கும் சிவபெருமான் பற்றி திருஞானசம்பந்தர் இயற்றிய பதிகத்தில் பியந்தைக் காந்தாரம் பண்ணில் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாக அமைந்த 10 ஆம் பாடல்.

பாடல் 10 - எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

கொத்தலர் குழலியோடு விசையற்கு
...நல்கு குணமாய வேட விகிர்தன்
மத்தமு மதியுநாக முடிமே
...லணிந்தென் உளமே புகுந்த அதனால்
புத்தரோ டமணைவாதில் அழிவிக்கும்
...அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல வவைநல்ல
...நல்ல அடியா ரவர்க்கு மிகவே

பொழிப்புரை:

பூங்கொத்துக்கள் அணிந்த கூந்தலினளாகிய உமையம்மையாரோடு சென்று குணம் காட்டி அருச்சுனனுக்கு அருள்புரிந்த வேடவடிவம் கொண்ட சிவபிரான் முடிமேல் ஊமத்தை மலர், பிறை, பாம்பு ஆகியவற்றை அணிந்து, என் உளம் புகுந்துள்ள காரணத்தால், புத்தர்களையும் அமணர்களையும் அவ்வண்ணலின் திருநீறு வாதில் தோற்றோடச் செய்யும். நமக்கு வரும் அத்தகைய தீமைகள் நல்லனவற்றையே செய்யும். அடியார்களுக்கும் அவ்வாறே நல்லனவே செய்யும் என்கிறார் திருஞானசம்பந்தர். .

குறிப்புரை:

விசையற்கு – அர்ச்சுனனுக்கு, வேடவிகிர்தன் - வேடனாக மாறியவன், வாதில் - மதுரையில் நடந்த அனற்போர் புனற் போர்களிலும் போதிமங்கைக்கருகில் புத்தருடன் நடந்த போரிலும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Jul-15, 8:41 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 81

சிறந்த கட்டுரைகள்

மேலே