நட்பு உயிரையும் கொடுக்கும்
2011 ல் புதுக் கவிதை
யார் நண்பன்? எப்படித் தோற்றம்!
முகத்தில் தெரியுமா! பழகப் பழகப் புரியுமா!!
வெளித் தோன்றும் சிரிப்பெல்லாம் நட்பாகாது,
வெளியே சிரித்து உள்ளே குழி பறிப்பு.
நல்ல நண்பனைக் கண்டுபிடி,
நெஞ்சத்தின் உள்ளிருந்து வருவதே நட்பு.
பொறாமை உயிரை எடுக்கும்,
நட்பு உயிரையும் கொடுக்கும், நம்பு.
துன்பம் வரும் வேளையிலும் விலகாமல்
உடன் வருவது நட்பு.
இந்தக் கவிதையை மரபுக் கவிதையாக்க முயற்சித்தேன்.
இரண்டிரண்டு வரிகளாக இருந்த 5 பத்திகளை இணைத்து ஐந்து வரிகளாக்கினேன்.
ஒவ்வொரு வரியிலும் ஏழு சீர்கள் இருந்தன. இவற்றை அவலோகிதத்தில் அமைத்துப் பார்த்ததில் 'எந்தவகைப் பாவிலும் பொருந்தவில்லை என்று வந்தது. ஓரளவு எதுகையும் மோனையும் அமைத்துப பார்த்தும் வரவில்லை. எட்டு சீராகவும், 6 சீராகவும் அமைத்தும் பொருந்தவில்லை என்றே வந்தது. ஒரு நாள் முழுவதும் குழப்பத்தில் ஆழ்ந்தேன்.
திடீரென்று மின்னலாகப் பளிச்சிட்டது தவறு. ஐந்து வரிகள் இருந்ததே குழப்பத்துக்குக் காரணம். பாடல்களில் ஒரு வரியை எடுத்து, நான்கு வரியாக்கிய பொழுது 'எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்' என்றும் வந்தன.
2015 ல் மரபுக் கவிதைகள்
நட்பு உயிரையும் கொடுக்கும் - எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
யார்நண்பன்? எப்படித் தோற்றம்! முகத்தில்
..தெரியுமா! பழகப் பழகப் புரிந்திடுமா?
வெளித்தோன்றும் சிரிப்பெல்லாம் வேடமாகும்; நட்பாகா,
..வெளியே சிரித்து உள்ளே குழிபறிப்பு.
நல்லதொரு நண்பனைக் கண்டுபிடி, நாடிவரும்
..நெஞ்சத்தின் உள்ளிருந்து வருவதே நட்பன்றோ .
கொல்லுகின்ற பொறாமை உயிரை எடுக்கும்,
..நம்பு, உயிரையும் கொடுக்கும் நட்பாமே!
நட்பு உயிரையும் கொடுக்கும் - எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பளிச்சென முகத்தில் தெரியுமா, யார்நண்பன்?
...பழகப் பழகப் புரியுமா?
வெளித்தோன் றும்சிரிப்பு வேடமாகும்; வெளியே
...சிரித்து உள்ளே குழிபறிப்பு.
நல்ல நண்பனின் நாடிவரும் நெஞ்சத்தின்
...உள்ளிருந்து வருவதே நட்பு.
கொல்லும் பொறாமை உயிரை எடுக்கும்,
...உயிரையும் கொடுக்கும் நட்பே!
நட்பு உயிரையும் கொடுக்கும் - அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
முகத்தில் தெரியுமா, யார்நண்பன்?
...பழகப் பழகப் புரியுமா?
முகநகச் சிரிப்பு வேடமே;
...வெளிச்சிரிப்பு உள்ளே குழிபறிப்பு.
நல்ல நண்பனின் நெஞ்சத்தின்
...உள்ளிருந்து வருவதே நட்பு.
கொல்லும் பொறாமை உயிரெடுக்கும்,
...உயிரையும் கொடுக்கும் நட்பே!