வாழத் தெரியாதவன்
எனக்கு வாழத் தெரியவில்லை என்றார்கள்.
வாழ்பவர்களை தேடித் போனேன் அவர்கள்
வாய் மொழிக்கும்
வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லை.
போட்டுக் கொண்ட முகமூடியை
கழட்டி வைக்க நேரமில்லாமல்
கஷ்டப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்
காசுக்காக....
வாழ்ந்தவனைத் தேடிப் போனேன்
சகவாசம் பிடிக்காமல்
பரதேசம் போனதாக கேள்வி..
நான் உதவியவர்களை நாடிப் போனேன்
நன்றி சொல்லி கணக்கு முடித்ததை
நன்றாக நினைவு படுத்துகிறார்கள்
எட்டி நின்று பார்த்தால்
என்னோடு வருபவனையே
எனக்கு பிடிக்காமல் போய்விடும் போலுள்ளது.
எதற்கு இந்த ஆராய்ச்சி....
சிரிப்பே வரவில்லை எனினும்
சிலரைப் பார்க்கும் போது சிரித்து வைப்போம்
இல்லையெனில்
சிடுமூஞ்சிக்காரன் என்பார்கள்.
எல்லோரும் உறங்கும் போது
நாமும் உறங்கி விடுவோம்
இல்லையெனில்
வியாதிக்காரன் என்றொரு
விளக்கம் கொடுத்துவிடுவார்கள்
எல்லோரும் வாழ்வதுபோல்
நாமும் வாழ்ந்து விடுவோம்
இருக்கின்ற மனிதர்களும்
இறந்து விடுவதற்குள்.....