அவர்களுக்கு மறைவில்லை - வாசிப்போர் வாசிக்கலாம்
அவர்களுக்கு மறைவில்லை - வாசிப்போர் வாசிக்கலாம்
================================================
ஆடையற்றுறங்கும் அவர்களின் இங்கீதங்களை மறைக்க
கூரையற்றுப்போனதால்
அவர்களுக்கு மறைவில்லை ம்ம்ம்ம்
உன்னைப்போல் பலரும்
அதனை பிழை உரைத்திருக்கலாம்,,,,,,,,,
நீட்டிய கரங்களுக்கு பிச்சை ஏதும் வைக்காமல்
இகழ்ந்துவிட்டு சென்றிருக்கலாம்,
கந்தல்களின் இடுக்குகளிலும் கவர்ச்சி இருக்கின்றதா என்று பார்த்து
கண் பசி தீர்த்திருக்கலாம்
ஒருவரின் விந்தணுவிலிருந்தோ, இல்லை எத்தனைப்பேரின்
விந்தணுக்களிலிருந்தோ
துப்பித் தெறித்த ஆகமப் பாவங்கள் என்று
பழியுரைத்தும் நீ அவர்களை கடந்துசென்றிருக்கலாம்,,,,,,,,,,,,,
வீதிமுனைவிளக்கின் வெளிச்சத்தில்
குப்பைத்தொட்டிகளுக்கும் புழுதிகளுக்குமிடையில்
புழங்கிக்கழித்திருக்கும் தெருநாய்களுடன்
உயிரைப்பணயம் வைத்து
யாராலோ கொட்டப்படும் எச்சிலிலைக்கு வேண்டி
போராட காத்துக்கிடப்பதைக் கண்டும்
ஒரு காலி உயர் ரக குளிர்பான தகரக் குப்பியை
அவர்களின் மேல் மெத்தலாக வீசிவிட்டுப் போயிருக்கலாம் ,,,,,,,,,,
குளியலறை காணாத அவர்களின் வியர்வை
நாற்றத்திற்கு முன்னால்
சில காகித கற்றைகளின் வாசம்
உன் கருணையின் கண்களை கட்டிப்போட்டிருக்கலாம் ,,,,,,,,,,
உன்னாலேயோ இல்லை யாராலேயோ
காலத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டு செய்யும்
எல்லா தவறுகளுக்கும்
கணக்கிட்டுக் கொண்டுபோய்
ஏதோ ஒரு நல்லநாள் பார்த்து
ஏதோ ஒரு கல்லிற்கும்
ஊர்த்திருவிழாக்களுக்கும்
அபிஷேகமும் அணிகலன்களுமாய்
அர்த்தமின்றி இறைத்துவிட்டும்
தலை மயிரை அறுத்துவிட்டும்
அல்ப சந்தோஷத்தில் அமைதிப் பெற்றதாய்
பிதற்றித் திரியலாம்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
இந்த காகிதப்புழக்கம் இல்லாமல் போயிருந்தால்
அவர்களின் உதவி
என்றாவது ஒருநாள் உனக்கு அவசியப்பட்டிருக்கலாம்போல்
அவர்களிடம்
இல்லாமையால் புறம் தெரிந்தாடும் உன்மத்தம்
உன்னிடம் உறங்கிக்கொண்டிருக்கிறது அவ்வளவுதான்,,,,,,,,,,,,,,,,
எல்லாம் உன்னைவிட்டு போன தனிமையில்
ஒருமுறையாவது யோசித்திருப்பாயா
உன்னால்
ஒருநாளும் திறக்கப்படாத
உன் கார் கண்ணாடியின் வெளிப்புறத்தில்
அதிரப்பதிந்த
எத்தனையோ காலி வயிறுகளின்
அலறல் கை ரேகைகளை ம்ம்ம்ம்,,,,,,,,,,,,,,,
ஆதரவின்றி தெருக்காற்றில்
உழன்றுக் கொண்டிருக்கும் அவர்களை விட
காற்றுச் சீரமைப்பி அறையில்
சுவித்துக் கொண்டிருக்கும் நீ
மேல்மர்வி உறைப்பெட்டிக்குள் அடைப்பட்டுக்கிடக்கும்
ஓர் உறைந்த இறைச்சிக்கு சமம்தான்,,,,,,,,,,,,,,
காலனோ கள்ளனோ
யாராவது இருவரில் ஒருவரால்
உன் கற்காரை வீட்டு பின்புறத்தின்
தேக்குமரக்கதவு தகர்க்கப்படும்வரைதான்
உன் தைரியங்கள் நடமாடிக்கொண்டிருக்கும் ,,,,,,,,,,,
சரி,,,யார் எப்படி போனால்தான் என்ன
பரிகாரம் செய்ய கோயில் சம்பிரதாயங்களும்
உன் பாவத்தை பரிந்து பேச
நான்கு பாவப்படிகளும்
உன் பணத்திற்கு தப்பட்டை அடிக்க
கூட இருக்கின்றவரை
யார் எப்படி போனால்தான் என்ன
ஊர்சனங்கள் கூடி
ஆறடிக்குள் உனை இட்டுமூடும்
அந்த அம்மண சடங்கின் அந்நாள் இறுதிவரையும்
இதத்தனையையும் கண்டுவிட்டு
உனக்கென்னவென்று நீ கடந்து போ
என்ற .என்னிலிருந்த புத்தன் வெளியேறி,
கோபமாகி ஏதோவோர் திசைநோக்கி நடக்கலானான் ம்ம்ம்,,,
அனுசரன் (பூக்காரன் கவிதைகள் )