வறுமை
வறுமை....
=========
நெய்த நூலை விட
தைத்த நூல்கள் அதிகம்
எங்களின் ஆடைகளில்...!!
பசிக்காக உண்ட நீரைவிட
பசியினால் அழுத கண்ணீர் அதிகம்...
பல்லாங்குழி ஆடலாம் கண்களில்...!!
நான்கு வேளை
உண்ணும் வசதி படைத்தோர் உலகில்
ஒரு வேளைக்கும் குறை உணவே...!!
ஒட்டிக் கொண்டிருக்கும் வயிற்றில்
உலை வைக்கலாம் பானை ஏற்றி
உணவைக் காணாத வயிறு உஷ்ணத்தில் ...!!
அரை வயிறு கஞ்சியில்லை
நோய் கண்டால் மருந்தேது??
மரணம் சுவீகரித்துக் கொள்கிறது...!!
கோடி என்கிறார்கள் பணத்தை
அதன் அர்த்தம் புரியாதவர்கள் நாங்கள்
நாங்கள் அறிந்ததெல்லாம்
எங்களின் இருப்பிடமான ஊர்க்கோடிதான்..!!
எந்த கோடி யாருக்கு என்று
இறைவன் வகுத்தது போலும்
எங்களது கோடி ஒதுக்குப் புறமாய்...!!
ஆனாலும் இறைவனுக்கு
ஓரவஞ்சனைதான் படைப்பதில்
ஒரு கண்ணில் வெண்ணை....
இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு....!!
சுண்ணாம்புப் பார்வையில்
எங்களின் படைப்பு போலும்
சதையைத் தொலைத்த
எலும்புக் கூடாய் நாங்கள்...!!
எங்களுக்கும் இறைவன் படியளக்கிறான்
என்றாவது ஒருநாளில் ஏக விருந்து
திருமண மண்டப வாசல்களில்....!!
இறைவா...!
அடுத்த பிறவியிலாவது
எங்களுக்கு கருணை காட்டு
உங்களின் வெண்ணைப் பார்வையில்
எங்களின் பிறப்பாகட்டும்...!!
திருமண மண்டபத்தின்
உள்ளேயான விருந்து
எங்களுக்கென்று எப்போது..???