வானமாய் ஒரு காதல்...

கணப்பொழுதினில் மனதினில்
வானமாய் ஒரு காதல்...
என் அந்தப்புரத்தினுள்
ஆதியின் அந்தமாய் நுழைந்தவனே...
என் புன்னகைக்குள் புதையலாய்
புதைந்த புதியவனே....

மேகத்தினுள் நுழைந்திருக்கும்
மழைநீராய் எனக்குள் நீ...!
ஆடும் காற்றுக்கு ஏற்ப
அசையும் இலையாய் - உன்
வழித்தடம் பார்த்து என் பாதமும்...!

கீழே சிதறும் சருகுகளை
கூட்டிச் சேகரித்து
எரிப்பது போல் - உன்
நினைவுச் சிதறல்களை
சேகரிக்கத்தான் முடிகிறது!
எரிக்க ஒருபோதும்
எத்தணிக்கவில்லை!

மரத்தைத் தாங்கும்
ஆணிவேராய் உனக்கான காதல்
எனைத் தாங்கியபடியே...

இதயத்தினுள் பூத்துக் குலுங்கும்
என் காதல் செடியை
வெட்டி எடுத்து வேறோர் இடத்தில்
நட்டால், பட்டுப் போகுமே தவிர
மொட்டு கொடுத்து மெட்டுப் போடாது...

காந்தத்தைத் தொடரும் இரும்பாய்
உனை தொடர்கின்றேன்
என்னைத் தவிர உன்னை யாராலும்
காதலிக்க முடியாது....

என் விழிகள் விவரிக்கமுடியாத
காதலையா
என் வரிகள் விவரிக்கப் போகின்றன!!


நான் எழுதும் காகிதங்கள்
ஒவ்வொன்றும் கவித்துவமாவது
உன் காதலின் தனித்துவத்தால்...

ஊசலாடும் கடிகாரம் போல
ஊசலாடும் கண்களுக்குள் - நீ
பூசிவிட்ட மை கரைந்து
பேசும் மொழி அறியாயோ.....

பிழைகளோடு பிறக்கும்
என் கவிதைகள் - உன்
வாசம் பட்டாவது
பிழைத்துப் போகட்டும்.....

எழுதியவர் : Premi (15-May-11, 11:18 pm)
சேர்த்தது : Premi
பார்வை : 390

மேலே