இந்தியன் என்பவன்
அங்கங்கே சிதறல்களாய்
அடிமைபட்டு கிடந்தநிலை
சங்கங்கள் சிலவற்றின்
சாயாத திருத்தொண்டால்
அங்கங்கள் சேர்ந்திருந்தால்
அழகியநல் உடலமென
சிங்கங்கள் எனக்கிளம்பி
சீர்திருத்தம் கூறியதால்
ஒன்றுபட எண்ணித்தினம்
உருப்படவே முடிவெடுத்து
அன்றெழுந்த அலையினிலே
அடிமைத்தன முடிச்சவிழ்த்தோம்!
கன்றுகளும் கூடிநின்றால்
காளையையும் எதிர்த்திடலாம்
என்றுணர்ந்து இந்நாட்டில்
எழுச்சிபெற முடிவெடுத்தோம்!
இப்படித்தான் தொடங்கியது
இந்தியரின் அடிச்சுவடு
எப்படிதான் ஏறிடினும்
ஏற்றம்பெறும் வெறியோடு
முப்பாட்டன் ஆளவந்த
முதியகதை மறந்துவிட்டு
தப்பாட்டம் தகர்த்தெறிந்த
புதியகதை தொடங்கியது...
சுதந்திரத்தை இந்நாடு
சுமுகமுடன் பெற்றிடவே
மதம்மறந்து இனம்மறந்து
மலேசியர் என்றுமட்டும்
நிதம்நினைந்து கூடியதை
நெஞ்சங்கள் மறக்காது!
கதம்பமென கைகோர்த்த
காட்சிகளுக் கிணையேது?!
அன்றமைந்த தலைவர்கள்
ஆகாகா அற்புதர்கள்
கொன்றெரித்தும் மாறாத
கொள்கைகளின் காவலர்கள்
நின்றிருந்த பிரிவினையை
நிலைதெரியா வகைதொலைத்து
ஒன்றெனவே நமையாக்கி
ஒளிதுலங்க செய்தவர்கள்
அவர்களின்பின் சிலர்வந்தார்
ஆசையிலே மயக்குற்றார்
சுவர்களென சாதிசொல்லி
சுரண்டுவதில் நோட்டமிட்டார்
இவர்களினால் தான்இழிவு
இனத்திற்கே உண்டாச்சு
தவறுகளும் பெருகிடவே
தறிகெட்ட நிலையாச்சு
கங்காணித் தனம்மாய்ந்து
கல்வியிலே முன்னேறி
வெங்காயம் விளக்கெண்ணெய்
வெறும்பேச்சு தான்விலக்கி
மங்காத எதிர்காலம்
மக்கள்எதிர் பார்த்திருக்க
கங்காணி மறுஉருவாய்
கயவரிவர் தோன்றினரே!...
ஆதாயம் மட்டுமிவர்
ஆவலாய் இருந்ததனால்
தோதாக சாதிவெறி
துளிர்விட்ட காரணத்தால்
வாதாடிப் பலவகையில்
வக்கிரத்தீ மூட்டிவிட்டார்
சூதாடும் பகடைகளாய்
சொந்தஇனம் ஆக்கிவைத்தார்!
அந்தகதை இன்றுவரை
அழியவில்லையே தம்பி
வந்தகதை வாழ்ந்தகதை
மாறவில்லையே தம்பி
நொந்தகதை சொந்தகதை
நோக வைக்குமானால்
இந்தகதை மாற்றிடவே
என்கதையைக் கேட்பாய்!
அறிவினிலே தெளிவுடனே
அரசியலை செய்வோர்
செறிவுமிகு சிந்தனையால்
செயல்திறனில் பெரியோர்
முறிவுசிறி தேற்பட்டால்
முந்திவந்து காப்போர்
பரிவுநிலை மாறாத
பண்புநலன் கொண்டோர்
எவரெனினும் அவர்பின்னே
எடுத்துவை உன்அடியை!
தவறிழைக்கும் தலைவரெனில்
தடுத்திடு அவர்வழியை!
நவரசத்தை மேடையிலே
நாடகமாய்க் காட்டும்
அவப்பிறப்போர் அவருறவை
அறுத்திடுதல் மேன்மை!
அடுத்துவரும் சமுதாயம்
உனைமதிக்க வேண்டும்
கெடுத்துவரும் பிரிவினைகள்
நீமிதிக்க வேண்டும்
உடுத்துண்டு வாழ்வதனில்
உயர்வெதுவும் இல்லை!
கொடுத்துண்டு கொடியேற்று!
நெருங்காது தொல்லை!
(முற்றும்)
அ.மு.நௌபள்