கடற்கரைகள் அழகானவை மட்டுமல்ல

மரணத்தை ஒத்திப் போடும்
மனிதர்களின் ஒத்திகையை
வேடிக்கை பார்த்தபடி
விழித்துக் கொள்ளத் துவங்கி இருந்தது
கடற்கரை.

கரை திரும்பிய தோணிகள்
தான் தொலைக்காத
மீன்களுக்காகவும், மனிதர்களுக்காவும்
கடலுக்கு நன்றி சொல்லியபடி
நிம்மதியின் சுவாசத்தில்
உறங்கத் துவங்கியிருந்தன.

புரளும் அலைகளுக்கு
மேலேறும் சூரியனிடம்
பகிர்ந்து கொள்ள
நேற்றைய இரவின் கதைகளில்
ஏதேனும் மிச்சமிருக்கலாம்.

சிலைகளால்
தமிழையும், சுதந்திரத்தையும்
வளர்க்கலாம் என
சென்ற தலைமுறையினருக்கு
யாரோ தவறாகச்
சொல்லிக் கொடுத்திருக்கக் கூடும்.

தலைவனாயும், அறிஞனாயும்
இருந்தவர்களின் தலைகளில்
பறவைகள்
மிச்சத்தை விட்டு விட்டுச் செல்கின்றன.

பாவம்! இந்த அதிகாலை வேளையில்
அவைகளும்தான் எங்கு செல்லும்?
மேலும்...
கழிப்பறைகளுக்கு ஏங்கி நிற்க...
இலவசங்களில் தங்களை
இழந்துவிடும் மனிதர்களா..என்ன?
அந்தச் சுதந்திரப் பறவைகள்.

நேற்றெங்கோ நடந்த கலவரத்தில்...
தன் கண்களை இழந்துவிட்ட ஊர்திகளும்...
இரவு முழுவதும்
பணிமனையில் கிடந்த அசதி கலையாத
தூக்கம் கலைந்த பேருந்துகளும்
வியர்க்க...வியர்க்க
உடற்பயிற்சி செய்தவனைப் போல்
இந்த அதிகாலையில்...
கடற்கரையின் சாலையெங்கும்
பெருமூச்சை எரித்தபடி விரைகின்றன.

இன்றைய எதிரியை
வீழ்த்துவதற்கான வியூகங்களுடன்
கைகளைக் கோணல்...கோணலாய் அசைத்து...
அலைபேசியில் பேசியபடி
நடந்து கொண்டிருந்தவன்

தனக்கான எதிர் வியூகங்களை
எப்படி அறியக்கூடும் எனத் தெரியவில்லை.

அறுகம் புல்லையும்,
கற்றாழையையும் தின்றபடி
ஆயுளைக் கூட்ட நினைப்பவனை
அதை வியாபாரம் செய்பவனின்...
வியாபாரத்திற்கான பிரார்த்தனைகள்
காப்பாற்றக் கூடும்.

"வாய் விட்டு சிரித்தால்
நோய் விட்டுப் போகும்" - என்பது
கடற்கரைகளில்
தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டிருக்கலாம்.

எல்லோரையும்..."அப்பா" என அழைத்து
பிச்சை கேட்ட மூதாட்டிக்கு...
இன்றைக்கு ஒரு சில "அப்பாக்கள்" கிடைத்தார்கள்.

சூரியனைப் போல்
சூடேறத் துவங்கியிருந்த
இன்றைய காலையில்...
புதிய கழிவுகள் சேரத் துவங்க
நேற்றைய கழிவுகள்
செய்தித் தாள்களாகின.

எல்லாம் அறிந்த கடற்கரையோ...
வெறும் அறிவின்
குயுக்தியால் வாழும்
மனிதனை வெறுத்தபடி...
தன் மேல் புரண்ட அலைகளிடம்...
ஒரு சுனாமியின்
கதையைச் சொல்லிக் கொண்டிருந்ததை....


இன்று
நீங்கள் நடந்திருந்தால்....
நீங்களும் கேட்டிருக்கக் கூடும்.

எழுதியவர் : rameshalam (10-Jul-15, 8:56 am)
பார்வை : 92

மேலே