நான் கனவு கண்ட பார்

புளிய மரம் நிழல் கொடுக்கக் காத்திருக்கு
புகை கலவாத் தென்றல் காற்று வீற்றிருக்கு
பூக்களெல்லாம் புன்னகித்துச் சிவந்திருக்கு
பூமியெங்கும் ஆனந்தம் மலர்ந்திருக்கு..

மாட்டுவண்டி பாதையெங்கும் படர்ந்திருக்கு
காட்டு வாசம் காற்றினிலே கலந்திருக்கு
வீட்டு வாசல் பாசத்தில் நிறைந்திருக்கு
பாட்டி கதை உள்ளத்தில் பதிந்திருக்கு..

ஏறு பூட்டி உழுத வயல் செழித்திருக்கு
கூறு போடத் தேவையில்லை நிலமிருக்கு
நூறு பேரு வந்தாலும் உணவிருக்கு
சோறு போடா நல்லதொரு மனமிருக்கு..

ஆடு, மாடு கோழியெல்லாம் வீட்டினிலே
காடு கொண்ட விலங்கெல்லாம் காட்டினிலே
மேடு பள்ளம் இல்லை என்றும் மனதினிலே
பாடு பட்டு உழைத்திடுவோம் பகலினிலே..

ஓசோனில் ஒட்டையிட யாருமில்லை
ஓடியாடிப் பாடிடவும் தடைகலில்லை
ஒட்டையோடு ஓலை வீடு திருடனில்லை
ஓய்வெடுக்க ஓலைப் பாய்போல் ஒன்றுமில்லை..

இயந்திரங்கள் சண்டையிடும் ஓசையில்லை
இனிமையான குயிலோசை பஞ்சமே இல்லை
இயற்கைக்கும் எங்களுக்கும் தூரமில்ல
இனிமையான வாழ்விது ஐயமில்ல..

லஞ்ச, ஊழல் அரசியல்கள் காணவில்லை
பஞ்சம், பசி பட்டினிகள் எங்குமில்லை
கஞ்சியோடு கருவாடு மறக்கவில்லை
மிஞ்ச சோறு வாசனையும் அலுக்கவில்லை..

கடன் கொடுக்கக் காத்திருப்போர் ஆயிரம் பேர்
இடம் இன்றி யாரும் இல்லை. எதுக்குப் போர்?
உடன் பிறப்பு உயிர்போல ஒற்றுமை பார்
உண்மையில், இதுதான் நான் கனவு கண்ட பார்..

எழுதியவர் : JIFF (16-May-11, 1:41 pm)
சேர்த்தது : jiff0777
பார்வை : 485

மேலே