கதவு பற்றி அருமையான கவிதை

🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠

*கதவு*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠

வீட்டுக்குத்தான்
கதவு இருக்கிறது என்று
நினைத்து விடாதீர் ...

மனதின் கதவு
இமைகள்...
பூக்களின் கதவு
அல்லி வட்டம்..
புத்தகத்தின் கதவு
மேல் அட்டை ....
நிலவின் கதவு பகல்...
சூரியனின் கதவு இரவு...
வயிற்றின் கதவு வாய்....
வார்த்தையின் கதவு
உதடுகள்....

கதவு திறப்பதற்கும்
மூடுவதற்கும்
மூடினால் திறக்க வேண்டும்
திறத்தால் மூட வேண்டும்
கழட்டி வைத்து விடலாமா...?

தேக்கு மரத்தில்
செய்தால் என்ன ?
வேப்ப மரத்தில்
செய்தால் என்ன ?
இரும்பில்
செய்தால் என்ன ?
கதவு என்பதில்
மாற்றமில்லை ...!

கதவால்
வீட்டைப் பூட்டுகிறோமா ?
இல்லை
வீட்டால் கதவை
பூட்டுகிறோமா ?

கதவைப்
பாகாக்கப்
பயன்படுத்தியவர்களை விட....
பதுக்கப்
பயன்படுத்துபவர்களே
அதிகம்......

வெளியில் இருந்து
பூட்டும்போது
நல்லது நடந்தாலும்...
உள்ளிருந்து
பூட்டும் போது
கெட்டதும் நடக்கின்றது....

திருடர்களினால்
கதவு உருவானதா?
இல்லை
கதவினால்
திருடர்கள் உருவானார்களா...?

கதவு இல்லாத
பறவைகள் கூட்டில்
ஏதும் இல்லை ......
வீட்டிற்கும்
கதவு இல்லையெனில்
மனிதன்
மனிதனாக வாழ்ந்திருப்பானோ?
கதவு வரமா...?
சாபமா....?

திறந்தப் புத்தகம் போல்
யார் வாழ்ந்த வீடாவது
திறந்தே இருந்ததா?

நாம்
பூட்ட வேண்டியக்
கதவுகளைத்
திறந்து வைக்கிறோம்....
திறந்து வைக்க வேண்டியக்
கதவுகளைப்
பூட்டி வைக்கிறோம்....

*கவிதை ரசிகன்*


🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠

எழுதியவர் : கவிதை ரசிகன் குமரேசன் (5-Oct-24, 9:00 pm)
பார்வை : 23

மேலே