மாலைமாற்று மாலை நூல் - பாடல் 1

1868 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி பிறந்த பெரும்புலவர் அரசஞ்சண்முகனார் மாலைமாற்று மாலை என்ற இந்நூலை, (இன்றைக்கு 128 ஆண்டுகளுக்கு முன்) தனது 19 ஆம் வயதில் (1887) பாடி முடித்தார்.

மாலைமாற்று மாலை என்ற இந்நூலை, 1901 ல் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவிய ஸ்ரீ பாண்டித்துரை தேவர் முன்னிலையில் 1903 ஆம் ஆண்டு அரங்கேற்றினாராம். அக்காலத்தில் புலவர்கள் தங்கள் கல்வியறிவை பலரறியச் செய்ய செய்தற்கரிய சித்திரக் கவிகளாகச் செய்து உரை செய்தலும், உரை மறுத்தல் விவாதங்களும் நடைபெற்றுள்ளன.

அதற்கடுத்து ’ஏகபாத நூற்றந்தாதி’ என்ற நூலை இயற்றி, தன் நண்பரான கந்தசாமிக் கவிராயர் என்பாரின் தகப்பனார் இராமசாமிக் கவிராயரிடம் உரை சொல்லி விளக்கினாராம். காப்புச் செய்யுளாக அமைந்த முதல் பாட்டிற்கு 100 பொருள் சொன்னார் எனப்படுகிறது.

இவர் எழுதிய 'இன்னிசை இருநூறு' என்ற தொகுப்பின் xerox பிரதி கிடைத்துள்ளது. இப்பாடல்கள் இன்றும் எளிதில் புரிந்து கொள்ளுமாறு உள்ளன. சில பாடல்களின் ஆரம்ப எழுத்துகள் பிரதியில் தெளிவாகயில்லை.

மாலைமாற்று மாலை நூல் - பாடல் 1

வெண்பா

வாலகன மானீயா மாவல வேனீத
நீலன நேசாயா நீயல – மாலய
னீயாசா னேநல னீதனீ வேலவ
மாயாநீ மானகல வா.

இப்பாடலை முதலிலிருந்து வாசித்தாலும், கடைசியிலிருந்து வாசித்தாலும் ஒன்றே போல அமையும்.

பதவுரை:

வால் அகன் – தூயமனத்தில் விளங்கும், அம்மான் நீ – ஐயன் நீயே
மாவல – சிறப்புற்ற வல்லவனே, ஏல் நீத – பொருந்திய நீதியை உடையவனே
நீல் அன்னம் நேசா – நீல நிறமுற்ற அன்னம் போன்ற வள்ளியம்மையிடத்து நேசமுடையவனே
யா நீ அல – (நீ அல யா) நீ அல்லாதன யாவை?
மால் அயன் நீ – விஷ்ணுவும், பிரமனும் நீயே
ஆசா னே – குருவே!
நலன் ஈ தனீ – நன்மையாகிய வீடு பேற்றை அருளிகின்ற ஒப்பற்றவனே
வேலவ - வேலவனே
மாயாநீ மான – மாயை நீங்கிய பெருமையையுடையவனே
கல வா - (என்னுட்) கலத்தற்கு வருக

பொருளுரை:

தூயமனத்தில் விளங்கும் ஐயன் நீயே! சிறப்புற்ற வல்லவனே! பொருந்திய நீதியை உடையவனே! நீல நிறமுற்ற அன்னம் போன்ற வள்ளியம்மையிடத்து நேசமுடையவனே! (நீ அல யா) நீ அல்லாதன யாவை?

விஷ்ணுவும், பிரமனும் நீயே! குருவே! நன்மையாகிய வீடுபேற்றை அருளிகின்ற ஒப்பற்றவனே! வேலவனே! மாயை நீங்கிய பெருமையையுடையவனே! (என்னுட்) கலத்தற்கு நீ வருக என்று முருகக் கடவுளை இறைஞ்சுகிறார்.

குறிப்பு:

அகம் நலம் என்னும் மகரத் தொடர் சொல் அகன் நலன் என மயங்கின.

அம்மான், அன்னம் என்பன அமான், அனம் என இடைக்குறைந்தன, நீல் – கடைக்குறை.
மாயா – வடமொழிச் சொல்

வால் அகன் அம்மான் நீ – மலக்கறை தவிர்ந்து தூய்மையடைந்த ஞானிகள் மனத்தில் விளங்கும் முழுமுதற் பொருள் நீயே,

மலநீக்கம் எய்தவில்லை யென்றால் தூய்மையடைதலும், சிவப்பிரகாசமெய்தலும் முடியாது எனப்படும்.

மாவல ஏல் நீத – யாவராலும் தடுத்தற்கரிய பெருவலிமை படைத்தாயாயினும் அவ்வலிமையைக் கருதாது நீதிமுறையையே கருதியுற்றாய்

பெருவலியை – தேவரெல்லாரையும் வாட்டி நின்ற சூரனை வென்றதாலும், நீதிமுறையை அங்கனம் வெல்லும்பொழுது தூது போக்கினமை முதலியவற்றாலும்,

நீல் அனம் – வள்ளியம்மை – இல்பொருள் உவமை

முருகக் கடவுள் தாமே வலிந்து சென்று மணந்தராதலின், நீலன நேசா என்றார் சண்முகனார்.

யா நீ அல – அசேதனப் பொருள்களெல்லாம் நீயே என்றும்,
மால் அயன் நீ – சேதனருள் சிறந்தாரைக் கூறினதால் பசுவர்க்கங்கள் பலவும் நீயே ஏன்றும் பொருள்.

பரமாச்சாராகிய சிவபெருமானுக்கும் உபதேசித்ததனால், ’ஆசானே’ என்று முருகக் கடவுளையே உணர்த்துகிறார்.

நலன் என்பது உறுதிப் பொருள்கள் நான்கிற்கும் பொதுப்பெயராயினும், அவற்றுள் சிறப்புடையது என்பதாலும், ஆசானே என்றதன் பின் கூறப்பட்டதாலும், நலன் என்பதற்கு வீடுபேறெனப் பொருளுரைக்கப்பட்டது. மற்றக் கொடை போல இல்லாமல் வீடு பேற்றைக் கொடுப்பது சிறப்பென்பதைக் குறிப்பதற்கே ’தனீ’ (ஒப்பற்றவனே) என்ற சொல்லை அடுத்து வைத்தார்.

வேல், ஆயுதங்களுள் மிக முக்கியமானதாலும், சக்தி வடிவம் என்பதாலும் மற்ற ஆயுதங்களைக் கூறாமல், அதனையே கூறுவதற்கு ’வேலவ’ என்றார்.

இயல்பாகவே, பாசங்களிலிருந்து நீங்குதலால் மாயா நீ எனவும், இது பதித்தன்மை ஆதலால் மான எனவும் கூறினார்.

கல வா என்றதனால், பாசம் நீங்கவில்லையானால் சிவத்துவம் அடைய முடியாதென்பதால் பாசத்தை விலக்கியருள்க என்றும், அது விலகியதால் வீடுபேறு சித்திப்பதால் வீடுபேற்றை அருளுக என்றும் பொருள்படும்.

மாயா நீ என்பதற்கு என்றும் இறவாத நீ எனவும் பொருள் கொள்ளலாம்.

எழுதியவர் : அரசஞ்சண்முகனார் (11-Jul-15, 2:22 pm)
பார்வை : 104

மேலே