கவிதையை வரையறுக்கிறேன்

தருமி போல் நானும் தவிக்கின்றேன்
தமிழில் வார்த்தையும் வறட்சியோ வாடுகின்றேன்
எங்கெங்கோ நானும்தான் வரிகளை தேடுகின்றேன்
என்னவளை வர்ணித்து ஏதேதோ பாடுகின்றேன்

எதுகையோ மோனையோ எதுவும் தெரியாது
இலக்கண இலக்கியமோ இவனுக்கு புரியாது
அடியோ சீரோ அதுவும் புரியாது
அணியால் அழகூட்ட அதுவும் தெரியாது
வெண்பா விளையாட்டும் விளையாட தெரியாது
வித்தக கவிபடைக்கும் வித்தையும் தெரியாது

கவிமொழி அறியாத கவிஞன் நானோ?
காதலியை வர்ணிக்கும் காதலன் நானோ?
கவிதைதான் என்றே நானும் சொன்னால்
கம்பனே நீயும் மண்ணிப்பாயோ?

அவள் முகிலின் மகளை முடியாய் சூட்டியவள்
அவள் முழுதாய் எனைதான் ஆட்சியும் செய்பவள்
மயில்களும் ஆடும் அவளின் மழைகுழல் காண
மலர்களும் தேடும் மங்கையவள் சூட

நிலவின் பிறையை நெற்றியாய் கொண்டவள்
நிலவின் நிறையை முகமாய் கொண்டவள்
கருப்பு வானவில்லை இரு புருவமாய் வளைத்தவள்
கருவண்டுகள் இரண்டினை விழிச் சிறையினில் அடைத்தவள்

அனுதினம் ஆயிரம் கவிதைகள் பேசிடும்
இருவரிக் கவிதையாய் இதழினை கொண்டவள்
அவள் கன்னம் வரைந்த வெட்கச் சிவப்பினில்
அந்தி வானச் சிவப்பினை அடிமையும் செய்தவள்

வலம்பரிச் சங்கோ இடம்புரிச் சங்கோ தெரியாது
முத்து மாலைச் சூடும் கழுத்தினை- என்
முத்த மாலைச் சூட்ட தருபவள்
மோட்சம் இங்கேயென எனை மூழ்கச் செய்பவள்

இடம்பல தாண்டி இடை வந்து சேர்ந்தேன்
இடையினில் எனை சுமக்க ஆசையும் கொண்டேன்
இக்கணமே குழந்தையாக மாற வரமும் கேட்டேன்
இங்கேயே இருந்துவிட முடிவும் கொண்டேன்

அன்னைப் போல் என்னைதான் மனதினில் சுமப்பவள்
அவளின் மழலை நானென அள்ளியும் கொள்பவள்
அவள் மடியினில் நானும் துயில்கையில்
அன்பெனும் மழையினை அதிகமாய் பொழிபவள்

கண்டம் பல தாண்டி காலடி வந்தேன்
கைகள் இரண்டும் தொழுதே பக்தனாய் நின்றேன்
சுவடெனும் ஓவியம் வரைந்து செல்லும்
தூரிகை இரண்டினை பாதமாய் கொண்டவள்
அவள் பாதங்கள் தொடுகின்ற மண்ணையெல்லாம்
பாவங்கள் போக்கியே செல்பவள்

இன்னுமென்ன மிச்சம்?
ஓ மச்சம் மட்டும் மிச்சம்
அழகை வரைந்த வரைந்த பிரம்மனவன்
சிதறிய தூரிகை துளிகள் அவை
அழகின் படைப்பு அவளோடு முடிந்ததன்
முற்றுப் புள்ளிகளும் அவை

அவள் அன்னைக்கு முன்பே பிரம்மனும் வைத்தானோ
எப்போதும் திருஷ்டி பொட்டாய் முகத்தில் ஒரு மச்சம்
பின்கழுத்தில் ஒரு மச்சம் இன்னும் சில மிச்சம்
அவை நான் காண எனக்கெங்கோ மச்சம்

இத்தனை சொல்லியும் பெயர் சொல்ல மறந்தேனோ
என்னவளின் பெயர் கேட்டால் கவிதையென்று சொல்வேனோ
"கவிதை"தான் அவளின் பெயரானதோ
அவளின் காதல்தான் எனது உயிரானதோ

எழுத்தறியா எனையும்தான் கவிஞனாக்கி சென்றாளவள்
எப்போதும் அவள் நினைவால் கவிபாடச் செய்தாளவள்
இவ்வுலகம் எங்கெங்கும் என் எழுத்தறியச் செய்தாளவள்

எழுதியவர் : மணி அமரன் (13-Jul-15, 12:48 am)
பார்வை : 212

மேலே