மெல்லிசை மன்னர் எம்எஸ்விஸ்வநாதன்

மெல்லிசைச் சக்ரவர்த்தி யே!

காலத்தால் அழியாதது 
உம் இசை பயணம் இன்று 
காற்றோடு அழைத்துக் கொண்டது 
உம் மூச்சை மட்டும்....

நினைத்தாலே இனிக்கும் உம்
இசை கேட்டு நாங்கள் 
ஜகமே தந்திரம் சுகமே மந்திரம் மனிதன் எந்திரம் என்று சொல்ல
சிவசம்போனு பிரிந்துவிட்டாயே...

உம் இசை வெள்ளத் தில்
எனக்கொரு காதலி இருக்கின்றாள்
என இசையே காதலியாய்
எண்ணி ரண்டு பதினாராய்..

ஏழு ஸ்வரங்களில் எத்தனை பாடல்
இசைத்து பாடி நடித்து பன்முகமாய்
எங்களை யும் ஆடவைக்கின்றாய்
எப்பொதும் நீ பிரிந்தாலும்.....

உள்ளத்தில் நல்ல உள்ளம் என்று
இசை படித்து பாடி
உலகை தாலாட்டி
உறங்க வைத்து
எங்கோ சென்று விட்டாய்....

மூன்றெழுத்தில் என் 
மூச்சிருக்கும் என்று
உம்மோடு
கவிஞர் கண்ணதாசன்
கானக் குரல் சவுந்தரராஜன் ஆகிய
தங்க இழைகளில்
முத்துக்கள் கோர்த்தாய்....

சிவாஜி கணேசன் நடித்த
கர்ணனின் உள்ளத்தில் நல்ல உள்ளம் என்று பாடி இசைத்து அழவைத்து
உந்தன் உள்ளம் காண வைத்தாய்...

புதியபறவையில்
சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து
தாழையாம் பூமுடித்து
நெஞ்சம் மறப்பதில்லை
என்று காதல் கீதங்கள் தந்து
எங்களை மயங்க வைத்தாய்....

அமைதியான நதியினிலே
ஓடும் ஓடமாக
இன்று இயற்கை மடியில்
அமைதியாக உறங்கி இசைத்துக் கொண்டிருக்கின்றாய்.....

கவிக் கொடை தந்த
புரட்சிக்கவி பாரதியின் 
சிந்துநதியின் 
மிசை நிலவினிலே என்று
சுதந்திர கீதம் இசைத்து 
எங்களுக்கு உயிர் தந்தாய்....

உமது இசையால் 
கவிஞர்களின் மனதில்
பூத்து
சிரித்து
ரசித்து
அழவைத்து
ஆடவைத்து
தூங்க வைக்கின்றன....

முத்தான முத்தல்லவோ
அத்தை மடி மெத்தையடி என்று
தாலாட்டு பாட்டில் எங்களை தூங்க வைத்து எங்கள் செவிகளில் ஊற்றெடுத்து இன்றும்  இனிமையாய்...

எந்த விருதுக்கும் ஆசைப் படாது
சுயநலமின்றி அன்பாய் குழந்தையாய்
எங்களுக்கு இசை உயிர்தந்து
நீர் பிரிந்தாலும்
எங்களோடு வாழுகின்றாய்...

ஜெனொவா முதல் 
காதல் மன்னன் 
காதலா காதலா வரை
ஆயிரத்து இருநூறு படங்களுக்குமேல்
எல்லா மொழிகளில் 
உம் இசைப் பயணம் எங்களோடு
தொடர்ந்தேயிருக்கும்...

உம்  இழப்பு
எங்கள் உயிர் உள்ள வரை 
என்றும் எப்போதும்
மறந்துவிட முடியாது..

புதிய வானம் 
புதிய பூமி என்று இன்றும்
எங்கள் இதயங்களில்
நீர் எங்கு சென்றாலும் 
உம் விரல்கள் வாசித்துக் கொண்டே இருக்கும் இசையோடு கலந்து...

உம்  இசையெனும் 
சங்கீத மூச்சு நின்றுவிடாது
என்றும் எப்போதும்
எங்களோடு வாழ்ந்து கொண்டேயிருக்கும்..

நீராரும் கடலுடுத்த என்று
தமிழ்த் தாய் 
வாழ்த்துப் பாடலை
பாடும்போதெல்லாம் 
மோகன இராகத்தில்
மெய் மறக்கச் செய்த
இசைச் சக்கரவர்த்தி நீவிர்....

உந்தன் இசை கேட்டு உம்
நினைவால் வாழ்ந்திடுவோம்
உலகம் உள்ளவரை....!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (15-Jul-15, 4:24 am)
பார்வை : 127

மேலே