காதல் ஒன்றே அழகு

.
திக்கு தெரியாக் காட்டினில்
வெளிச்சம் தேடி அலைய விட்டீர்.
குழந்தை கிளிஞ்சல்கள் தேடுவது போலே
வார்த்தைகள் பின்னே ஓடுகிறேன்.
வர்ணிக்க வேண்டி ஒரு விண்ணப்பம்,
அதுவும் உன்னை வர்ணிக்க.
எந்த மொழியில், எந்த புதிய வார்த்தையில்,
தேடித்தேடி நான் தொலைந்தேன்.
நிலா முகம்,கார்மேக கூந்தல்,வானவில் புருவங்கள்,அம்பு பார்வை
தாமரை உதடு,சங்கு கழுத்து,வாழை உடல்,கொடி இடை
இன்னும் மற்றும் பிற...
எல்லாம் எழுதப்பட்டு விட்டன
யார் யாருக்கோ என்பதால்
எதுவும் வேண்டாம் பெண்ணே
உன் பெயரும் பெண்மையுமே
இக்கவிதைக்கு போதும் போதும்.
என் காதலில் நீ அழகு
உன்னுள் உள்ள காதல் அழகு.