மது மயக்கம்

மது மயக்கம்..............
மது....... இந்த வார்த்தையைக் கேட்டாலே ஏனோ ஒருவித மயக்கம் மனதிற்குள். மது என்றால் என்ன? மலருக்குள் இருக்கும் ஒரு சொட்டு தேன்துளி தான் மது. ஆனால் இப்போது மதுவுக்கு தேன்துளி என்ற பொருள் சற்றும் பொருந்தாது. மது என்பது போதைப் பொருள் என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனால் இதை தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல தரமான கனிகளிலிருந்து பிழிந்தெடுக்கப்பட்ட பழச்சாற்றை பக்குவப்படுத்தி பல காலங்கள் பயன் படுத்துவதும் கூட ஒருவகை மதுதான். இப்போது தேன்துளியும் மதுவும் ஒத்துப் போகுமா இந்த விளக்கத்தினால்.
இந்தியா மற்றும் இன்னும் பிற நாடுகளில் பிரிட்டிஷ் காரர்களால் தான் இந்த மது என்ற போதை வஸ்து அறிமுகப் படுத்தப்பட்டது. பெரும்பாலான நாடுகளில் மதுவை அறிமுகப் படுத்திய பெருமை பிரிட்டிஷாரை மட்டுமே சாரும். இந்தியாவில் பிரிட்டிஷாரின் வருகைக்கு முன்பு அபின், கஞ்சா, மற்றும் வட இந்தியாவில் கிடைக்கும் ஒருவகை இலையிலிருந்து எடுக்கப் பட்ட பிசின் போன்றவற்றைப் போதைப் பொருளாகப் பயன்படுத்தினர். தற்போதும் அந்த இலைகள் வடஇந்திய பீடாக்களில் பயன்படுத்தப் படுகிறது. பொதுவாக ஒரு மனிதனுக்கு மது எதற்கு பயன்படுகிறது என்றால் குளிர் நிறைந்த பகுதியில் வாழும் மனிதனின் ரத்தம் உறைந்து போகாமல் இருக்கவே ஒரு மனிதனுக்கு மது பயன் படுகிறது. எந்த காரணத்தினாலும் சூடான பகுதியில் வாழும் மக்களுக்கு மது தேவையில்லாத ஒன்று.
ஆனால் இப்போது மது அருந்தும் பழக்கம் சிறுகுழந்தைகள் முதல் வயதானோர் வரை பாரபட்சமின்றி அனைவரையும் ஆட்படுத்திக் கொண்டு தன்னுடைய ஆளுமைக்குள் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. மது அருந்துவதினால் வரும் தீமைகளை இனியும் விளக்க வேண்டிய அவசியமில்லை. போதும் போதுமென்ற அளவிற்கு அனைவரும் அறிந்த ஒன்றே! காலை பத்து மணிமுதல் இரவு பத்துமணி வரை மதுக்கடைகளிலும் (டாஸ்மாக்) பார்களிலும் கூட்டம் குறைவதே இல்லை . இங்கு படித்தவன் படிக்காதவன் ஏழை பணக்காரன் பாகுபாடே இல்லை. சமஉரிமையுடன் ஒரு மனிதன் உறவாடும் இடமே மதுக்கடை தான். இதில் அதிக லாபம் கொட்டுவதைக் கண்ட அரசாங்கமே இதில் நேரடி விறபனையில் ஈடுபடும் அளவிற்கு மதுக்கடைகளில் வியாபாரம் நடக்கிறதென்றால் சும்மாவா? சந்து போந்து தெருமுனை இப்படி எங்கும் விட்டுவைக்காமல் மதுக்கடைகள் முளைத்திருக்கின்றன இங்கெல்லாம் ஜெகஜோதியாக விற்பனை நடக்கிறதென்றால் நம் குடிமக்களின் ஆர்வம் என்னவென்று யாரும் சொல்லித் தெரியவேண்டியதில்லை.
நூறு ரூபாய் பொருளுக்கு நூற்றிரண்டு ரூபாய்க்கு மேல் வரி (Tax) கட்டும் ஒரே பொருள் மதுதான். காலையில் வேலைக்குச் செல்லவேண்டியது உழைத்த காசை அப்படியே டாஸ்மாக்கில் கொடுக்கவேண்டியது இதுதான் பெரும்பாலான மக்கள் செய்வது. முதலில் சொன்னதுபோல மதுவகைகள் பழச்சாறிலிருந்து தயாரித்தவைகளாக இருந்தால் பரவாயில்லை உடல் ஆரோக்கியமாவது மிஞ்சும் . ஆனால் தற்போதைய நிலைமை என்ன டாஸ்மாக்கில் விற்கப்படும் பொருள் எல்லாமே கள்ளச் சரக்கு என்று சொல்லப்படும் ஆல்ஹகால் மட்டுமே. அதில் உடலுக்கு நன்மை பயக்கும் எந்த மூலக்கூறும் இல்லை. முழுக்க முழுக்க இரசாயனக் கலவை மட்டுமே அதை அருந்திய ஒரு நபரால் இரண்டு நாளைக்கு தெளிவான சிந்தனையுடன் இருக்க முடியாது பைத்தியம் பிடித்தது போல் தான் இருப்பார். தான் என்ன செய்க்கிறோம் என்று புலப்படுவதில்லை என்பது தான் பலரின் கருத்து .உடனே பலரும் அரசாங்கத்தை குறை கூறத்துவங்குவார்கள். அரசிற்கு வருமானம் தேவை எந்த சந்தையில் முதலீடு செய்தால் லாபம் என்பதை சரியாக யோசித்து எடுக்கப்பட்ட முடிவே டாஸ்மாக் எனப்படும் அரசு மதுபானக் கடைகள்.
டாஸ்மாக் விஷயத்தில் பலரும் என்ன, எல்லோரும் குறைகூறுவது அரசாங்கத்தை. ஆனால் அரசாங்கத்தின் மீது குறையில்லை என்று சொல்லிவிட முடியாது. அரசாங்கத்தின் மீது நாம் குறை கூறுவதற்கு முன்பதாக நாம் யோசிக்கவேண்டிய பலவிஷயங்கள் உள்ளன. பலரும் கொடிபிடித்து கோஷம் போடுவது முழு மதுவிலக்கு அமல் படுத்தக் கோரிதான். ஆனால் முழு மதுவிலக்கு என்பது தமிழ் நாட்டில் சாத்தியமா என்பது முதல் கேள்வி இப்போது இன்னொரு கேள்வி எழலாம் ஏன் குஜராத்திலும் அண்டை மாநில கேரளாவிலும் முழு மதுவிலக்கு என்ற முயற்சி வெற்றிபெற வில்லையா என்பது.
குஜராத்தில் முழு மதுவிலக்கு செயல்படுவது மட்டுமே மக்களுக்குத் தெரிந்த உண்மை ஆனால் அதன் பின்னணி எத்தனை பேருக்குத் தெரியும்? இரயிலில் வரும் இராணுவ வீரர்களுக்கும் இரயில் நிலைய வியாபாரிகளுக்கும் தெரியும். குஜராத் மாநிலம் வழியாக வரும் இரயில்களில் பயணம் செய்யும் இராணுவம் சம்மந்தப் பட்ட துறைகளில் வேலைப் பார்ப்போர் கொண்டு வரும் மது பாட்டில்களை இரயிலில் டீ மற்றும் இதர பொருட்கள் விற்கும் வியாபாரிகள் அதிக விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்று லாபம் பார்க்கின்றனர். இதில் பயனைடைவோர் எத்தனை பேர் ? இப்படி சட்டப்படி மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலத்தில் சட்டத்திற்கு புறம்பான ஒரு வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது. இப்படி ஒரு சட்ட மீறுதலுக்கு அரசே வழி வகுத்துக் கொடுத்திருக்கிறது. அடுத்து கேரளா மாநிலம். அங்கு மதுக்கடைகளைத்தான் ஆங்காங்கே மூடுகின்றனர் ஆனால் அதற்குப் பதில் நல்ல நாடன் கள்ளு சரியாக விற்கப் படுகிறது. கள்ளு குடித்துவிட்டு நல்ல தெறியில்(கெட்டவார்த்தை) இரண்டு கூப்பிட்டால் டாஸ்மாக் சரக்கை விட செமையா இருக்குமாம் சொல்லிக் கேட்டது. அதனால் கேரளாவிலும் பூரண மதுவிலக்கு என்பது சாத்தியமில்லை. மேலும் கேரளாவின் எல்லைப்பகுதியான தமிழ்நாட்டை சார்ந்த மதுக்கடைகளில் விற்பனை அமோகமாய் நடக்க கூக்குரல் என்னவோ பூரண மதுவிலக்கை அமுல் படுத்து டாஸ்மாக் கடைகளை மூடு. ஏனெறால் பூரண மதுவிலக்கை அமுல் படுத்தி டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டவுடனே நம் மக்கள் நல்லவர்களாகி மதுமயக்கத்திலிருந்து விடுபட்டுவிடுவர் என்பது பலரின் கணிப்பு....
பூரண மதுவிலக்கு அரசாங்கம் அறிவித்தால் ஆங்காங்கே சட்டவிரோதமாக மக்கள் கள்ளச்சாராயம் வடித்தேனும் தங்களுக்குத் தேவையான போதையை ஏற்படுத்திக் கொள்வார்கள். ஆக இங்கு அரசின் தவறா இல்லை மக்களின் தவறா? நான் சமீபத்தில் ஒரு ஸ்டிக்கர் கமென்ட் கவனித்தேன் அதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசுவது போன்று இருந்தது அதில் குறிப்பிடப் பட்ட வார்த்தைகள் என்னவென்றால் "அரசாங்கம் சாராயம் மட்டுமா விக்குது பூச்சிமருந்தும் தான் விக்குது அத யாராவது வாங்கிக் குடிக்கிறீங்களா?" எனக்கு அது சரியான கேள்வியாகப் பட்டது இதை சிந்தனை திறனுள்ளோர் சிந்தித்துக் கொள்ளுங்கள்.
ஆனால் அரசாங்கம் ஒன்று செய்யமுடியும் மதுவிற்பனையை ஒழுங்கு செய்யமுடியும். ஒரு நபருக்கு அரைக்கிலோ சர்க்கரை என்று ரேஷன் கடைக்கு அளவு குறித்துக் கொடுத்த அரசாங்கம், கண்டிப்பாக மது வேண்டும் என்று கேட்கும் நபருக்கு குறிப்பிட்ட அளவு மதுவை மட்டுமே வழங்க ஒழுங்கு செய்யப்பட்ட கடைகள் மூலம் விற்பனை செய்யலாம் . இங்கும் கள்ளச் சந்தை வரும் அதையும் மிகுந்த கெடுபிடிகளுடன் கண்காணிக்க வேண்டும். ஏனென்றால் மதுவுக்கு அடிமையான மக்களை ஒரேயடியாக மீட்க முடியாது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மீட்க முடியும். அடுத்து பொருளின் விலையை இன்னும் உயர்த்தலாம் சாமானிய மக்களால் வாங்க முடியாத அளவிற்கு. எல்லாவற்றிற்கும் மேலாக பொருளின் தரம் மேம்படுத்தப் பட வேண்டும். லாபம் கிடைக்கிறது என்று சாதாரண ஆல்ஹகால் உடன் கலர் பவுடர் கலந்து விற்பதை விடுத்து இராணுவம் சம்பந்தமான துறைகளில் வழங்கப் படுவதுபோன்று தரமான பொருட்களை விநியோகம் செய்யலாம். மது விற்பனை அங்காடிகளில் இராணுவம் சம்பந்தமான துறைகளில் கடைபிடிக்கும் கெடுபிடிகளை நடை முறைப்படுத்தலாம். அரசாங்கத்திற்கு வருமானமே டாஸ்மாக் மூலமாக என்பது பலரின் கருத்து. பணம் சேர்க்க மக்களின் உயிர்தான் பலிகடா ஆகவேண்டுமா? மற்ற துறைகளில் நல்ல முறைகளில் கவனம் செலுத்தினாலே வருமானம் தான். எவ்வித இழப்பீடுமின்றி நாட்டை வழிநடத்த முடியும் என்பதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
அரசிற்கு மதுக்கடைகள் மூலம் பல வழிகளில் லாபம். டாஸ்மாக் கடைகளில் சரக்கு விற்பது, டாஸ்மாக் பார்கள் ஏலம் விடுவது, குடித்துவிட்டு வண்டி ஓட்டும் நபர்களிடம் பைன் என்ற முறையில் வசூல் செய்வது இன்னும் மறைமுகமாகப் பல பல. ஊரில் பல கொடுமைகளுக்கு மதுவே முக்கிய காரணம். ஒரு நல்ல தாய் தன் பிள்ளைக்கு எப்போதுமே தன் கையால் விஷம் கொடுக்க நினைக்க மாட்டாள் . அதே போல் மது என்ற ஸ்லோ பாயிசனை மக்களுக்கு வழங்கி அவர்களை கொள்ளக் கூடாது என்பதை அரசாங்கம் கருத்தில் கொள்ளவேண்டும் . எல்லாவற்றிற்கும் அரசை குறைசொல்லிப் பழகிய நாம் பலவற்றை யோசிக்க மறந்துவிட்டோம். அரசாங்கம் மதுக்கடைகளை நிறுவியிருக்கிறது ஆனால் யாரையும் வற்புறுத்தவில்லை ஒருவன் மது வாங்கவில்லை எனில் அவனது குடியுரிமை ரத்து செய்யப்படுமென்றோ இல்லை வாக்குரிமை வழங்கப்பட மாட்டாது என்றோ குடும்ப அட்டை ரத்து செய்யப்படுமென்றோ யாரையும் பயமுறுத்தவோ வற்புறுத்தவோ இல்லை. அரசாங்கம் இதை விற்கவில்லை எனில் எங்கோ ஓரிடத்தில் விற்கும் இடம் தேடி கால்கள் பறக்கத்தான் செய்யும். இதை கட்டுப்படுத்த வேண்டியது தனிமனித பொறுப்பு. ஒருவன் மதுவுக்கு அடிமையாவதால் அவன் என்னென்ன இழந்து போகிறான் அவனது அமைதி எப்படி சீர்குலைந்து போகிறது என்பதை அவன் தான் உணர வேண்டும். தன் சந்ததிகள் எப்படி திசை மாறிப் போகிறார்கள் என்பதை சிந்திக்க வேண்டும் அதை விடுத்து ஆடத் தெரியாதவன் தெரு கோணலாய் இருக்கிறது என்று கூறியது போல குறைகளை நம் மீது வைத்து அரசை குற்றம் சொல்வது எவ்விதத்தில் நியாயம்?
ஒரு பொருள் சந்தைப்படுத்தும் பொழுது அப்பொருள் அமோகமாக விற்கிறது என்றால் அதன் உற்பத்தி மற்றும் விலையையும் அதிகப் படுத்தி அதன் விற்பனை நிலையங்களையும் அதிகப்படுத்துவதில்லையா? அதே வேலையைத்தான் அரசும் செய்கிறது அதே சமயம் அப்பொருள் சந்தையில் விலைக்குப் போகவில்லையெனில் அதன் உற்பத்தி நிலையமே மூடப் படுவதில்லையா அந்த நிலை உருவானால் மட்டுமே தமிழகம் மட்டுமல்ல உலகமே முழு மதுவிலக்கு எனும் கட்டுப்பாட்டுக்குள் வரும். அரசாங்கம் முழு மதுமதுவிலக்கை அமுல் படுத்தினால் கள்ளச் சந்தைகளும் கள்ளச் சாராயக் கடைகளும் முளைக்கும் மேலும் இராணுவம் போன்ற துறைகளில் முழு மதுவிலக்கு சாத்தியமாக வேண்டும் இந்தியா முழுவதுமாக ஒட்டுமொத்த மதுவிலக்கு அமல்படுத்தப் பட வேண்டும் அதில் இராணுவ துறைகளும் அடங்க வேண்டும். வெளிநாட்டிலிருந்து மதுவகைகளோ இல்லை போதை வஸ்துக்களோ வருவதை மிகுந்த கெடுபிடிகளுடன் கண்காணித்து கட்டுப்படுத்தினால் மட்டுமே முழு மதுவிலக்கு என்பது சாத்தியப்படும்.
ஆல்ஹகால் என்பது ஒரு மூலக்கூறு அது ஒவ்வொரு மனிதனின் உடலோடு கலந்தது. நாம் பயன்படுத்தும் பெரும்பாலானா பொருட்களில் ஆல்ஹகாலின் பங்கு முக்கியமானது. ஆனால் இது தேவையா இல்லையா என்பதை முடிவு செய்யவேண்டியது ஒவ்வொரு மனிதரின் பொறுப்பு. ஒரு குழந்தை இன்று மது பழக்கத்திற்கோ இல்லை போதைக்கோ அடிமையாகிறது என்றால் அது சார்ந்திருக்கும் இடமும் பெற்றோருமே முழுக் காரணம். பெற்றோர் முதலில் பிள்ளைகள் மதிக்கக் கூடிய இடத்தில் இருக்கவேண்டும். அப்பா என்றவுடன் பயம் வரக்கூடாடாது மரியாதை வரவேண்டும் பல தலைமுறைகள் வணங்கும் விதமாக வாழ்ந்து காட்ட வேண்டும். அதைவிடுத்து வளர வேண்டிய குழந்தைகள் முன்னால் அமர்ந்து மது அருந்தினால் பல குழந்தைகள் அதை கையாள வேண்டுமெற எண்ணத்திற்குத்தான் தள்ளப் படுகிறார்கள். இன்னும் பல பெற்றோர் நாங்கள் போதை பொருள் உட்கொள்ளுவதில்லை ஆனால் என்குழந்தை இப்படி ஆகிவிட்டதே என்று வருந்துவர் குழந்தைகளை நன்கு கண்காணிக்க வேண்டும் அவர்களுடன் பழகும் நபர்களையும் கண்காணிக்கவேண்டும். அவர்களுக்கு நல்ல போதனைகளும் அறிவுரைகளும் வழங்க வேண்டும் அறிவுரைகள் வழங்கும் நாம் அவ்வறிவுரைக்கு எத்தனை சதவிகிதம் பொருத்தமானவர்கள் என்பதையும் யோசித்து நடக்கவேண்டும்.
எனக்குத்தெரிந்த ஒருவர் மது அருந்திக்கொண்டிருந்தாராம் கண்ணாடி டம்ளரில் . அங்கு வந்த மூன்று வயதுக் குழந்தையொன்று மாமா குடிப்பது எனக்கும் வேண்டும் என்று அடம்பிடித்து வெகு நேரம் அழுததாம் உடனே அந்த வீட்டம்மா பிளேக் டீ எனப்படும் பால் இல்லாத டீ தயாரித்து அக்குழந்தைக்கு கொடுத்தார்களாம் ஆனாலும் அக்குழந்தை எனக்கு மாமா குடிப்பது தான் வேண்டுமென்று அடம் பிடித்ததாம் இதை என்னிடம் பெருமையாக சொல்லிக்கொண்டிருந்தார்கள் எழுத்தாளர் மூளை சும்மா இருக்குமா பலவாறு யோசித்தது. நிச்சயமாய் அக்குழந்தை எவ்வளவு வளர்ந்தாலும் மாமா என்ன குடித்தார் அது எப்படி இருக்கும் என்பதை யோசிக்கும் என்றேனும் ஒரு நாள் மது அருந்தினால் மாமா குடித்தது இதுதானா? இது குடிப்பதில் தவறில்லையா? என்று நினைக்கும் மாமாவே குடித்தார் நாம் ஏன் குடிக்கக் கூடாது என்றுதான் யோசிக்கும். இதற்கு வடிகால் வடித்துக் கொடுப்பது யார்? வருங்கால தலைமுறை வீழ்ந்து போவதற்கு வித்திடுவது யார்? நாம் அருந்தும் இருமல் மருந்திலும் கூட ஆல்ஹகால் கலந்துதான் மருந்து தயாரிக்கப் படுகிறது இதைக்குடித்துக் கூட பலக் குழந்தைகள் தங்களை போதைக்கு ஆட்படுத்திக்கொள்கின்றன இவற்றைக் கண்காணிப்பது யார் என்பதை கொஞ்சமேனும் யோசித்தோமா?
ஒரு நாட்டில் மது அடிமைகள் உருவாக யார்காரணம்? அரசா மக்களா என்றால் மக்கள் தான் முதல் காரணம் இது வேண்டாமென்று நாம் முடிவெடுத்தால் எந்த அரசாங்கமும் வாங்கச் சொல்லி வற்புறுத்தாது. ஒவ்வொரு நாளும் மதுக்கடைகள் வழியாக செல்லும் பொழுது அங்கு நிற்கும் வாலிபர்களையும் முதியவர்களையும் பெரும் மதிப்பிற்குரியவர்களையும் பார்க்கும் பொழுது உள்ளத்தில் வேதனை தான் மிஞ்சுகிறது. இதை யார் யோசிப்பது ? மத்திய மாநில அரசுகளே நம் நாடு வல்லரசு ஆக வேண்டாம் வளம் மிக்கதாய் மாற வேண்டாம் வலிமை மிகு மக்கள் சாம்ராஜ்யம் நிறைந்ததாய் மாறினால் போதும் நம் நாட்டு இளைஞர்களுக்கு சிந்திக்க மூளை செயல் பட்டால் போதும் நாடு தானே வல்லரசாகும் வளம் மிக்கதாய் மாறும். அதற்கு தடைக்கல்லாய் நிற்கும் போதை பழக்கத்திற்கு வழிவகுக்கும் போதைப் பொருட்களை கட்டுப்படுத்தினால் போதும். பூரண மதுவிலக்கை ஒரு மாநிலம் செயல்படுத்துவதை விட மொத்த நாட்டிலும் செயல்படுத்துவதே சிறந்த வழி . எல்லாவற்றையும் விட இந்த மதுப்பழக்கம் எனக்குத் தேவையில்லை என்று ஒவ்வொரு குடிமகனும் முடிவெடுப்பது சாலச் சிறந்தது.
உடலோடு கலந்த மதுவை
உணர்வோடு யோசித்து
உயிரோடு விளையாடாமல்
உடமையேதும் வீணாகாமல்
உரிமையோடு துறந்து
உண்மையோடு வாழ்வோம்......
...........யோவ் நாட்டுல குடிகாரன் திருந்திட்டா எதுக்குய்யா சாராயக்கடை?????????????
.................சஹானா தாஸ்