கவிதை யாதென

கவிதை யாதெனக் கேட்டு என் நண்பன் விடுத்த விண்ணப்பத்திற்கான எனது பதில்......

கொச்சகக் கலிப்பா

உள்ளத் துணர்வுகளை
==உள்ளதை உள்ளபடித்
தெள்ளத் தெளிவாகத்
==தென்தமிழில் அழகாக
வெள்ளம் பாய்வதுபோல்
==வேகமுடன் பாய்ச்சுவதே
கொள்ளைக் கவிதையெனக்
==கொண்டிடுவார் தமிழறிந்தார் !

எண்ணத் தசைவுகளை
==எழில்சேர்த்து இதமாகும்
வண்ணங் கோர்த்ததிலே
==வகைவகையாய் உவமைகள்
பண்ணுந் தொழிலினையே
==பாவனையும் கலையென்று
கண்ணிற் காட்டிடுவார்
==கவிதைக்கலை கற்றறிந்தார் !

பார்க்கும் பொருளைஎலாம்
==பாடுபொருள் என்றமைத்து
வார்த்தை அருவியிலே
==வந்துத்தான் தலைகாட்டிக்
கோர்த்துச் சொல்மணிகள்
==கொட்டுவதே கவிதையெனப்
பார்க்குள் எப்பொழுதும்
==பகன்றிடுவர் மொழிபயின்றார் !

இந்தச் சமூகத்தில்
==இருக்கின்ற இன்னல்களை
எந்தத் தருணத்தில்
==எப்பொழுது கண்டாலும்
முந்தி மனதிற்குள்
==மூள்கின்ற தீப்பிழம்பைச்
சிந்துங் கவியென்று
==சிறப்புடையோர் கூறுவரே !

வித்தக இளங்கவி
விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (25-Jul-15, 2:57 pm)
பார்வை : 102

மேலே