தாலாட்டும் நினைவுகள்

என் சிறுபிள்ளை பிராயத்தில் இந்த மரத்தை சுற்றியிருந்த கொஞ்ச இடமே எங்கள் விளையாட்டு மைதானம். கோலி,கில்லி,நொண்டியென ஆட்டம் புழுதி பறக்கும். விடுமுறை நாட்களில் மரமே வீடு....

காளியின் பண்ணிரு கரங்களென பரந்து விரிந்த கிளைகள்....நிழலின் அடர்த்தி சொல்லும் கிளைகளின் அடர்த்தியை...பச்சை குடையென விரிந்திருக்கும் கிளைகள் காலை முதல் அந்தி வரை சூரிய ஒளியை அனுமதிப்பதில்லை.மழை காலமாகட்டும்....வெயில் காலமாகட்டும்...அநேகம் பேருக்கு அது தற்காலிக வீடு. சொல்லப்போனால் அன்பாய் அரவணைக்கும் ஒரு தாயின் அரவணைப்பு அது....

ஒரு சோழப்பேரரசனின் இறுகிய தசைகள் போன்று முண்டும்,முடிச்சுமான தேகம். அதன் உடம்பை எங்கு தொட்டாலும் ஒரு இரும்பின் வலிமை.கட்டிளங்காளையை ஆசையோடு அணைத்துக்கொள்ளும் இளநங்கையை போல அதன்மேல் படர்ந்திருக்கும் கொடிகள்...கொடிகளில் தொங்கும் கோவைப்பழங்களை கொறித்துண்ணும் கிளிகள்... குக்கூவென கூவும் குயில்கள்...துள்ளி விளையாடும் அணில்கள்... இடுக்குகுள்ளிருந்து எட்டிப்பார்க்கும் பாம்பென.... சின்னக்காட்டையே ஊருக்குள் கொண்டுவந்தது போலிருக்கும் அந்த மரம்....

சில காலங்களில் உதிர்க்கும்... சில காலங்களில் துளிர்க்கும்.. இலையுதிர் காலங்களில் நேர்த்திகடன் தீர்த்த குழந்தையென நிற்கும்.... இளவேனில் காலங்களில் தளிர்த்து நிற்கும் ஒரு பூப்படைந்த பெண்ணின் அழகோடு....

தூக்கம் வராத இரவுகளில் நச்சரிப்பதுண்டு தாத்தாவை... புளிய மரத்தின் கதை சொல்ல சொல்லி...அவர் சொல்லும் கதைகளில் மனம் அதிசயிப்பதுண்டு. கட்டப்பொம்மனுக்கு ஒரு கயத்தாறு என்றால் பெயர் தெரியாத எத்தனையோ வீரர்களுக்கு இந்த புளியமரம். எத்தனையெத்தனை பிரச்சினைகள்.... கட்டப்பஞ்சாயத்துக்கள்... நல்லது...கெட்டது....எது நடந்தாலும் அனைவரும் அமர்வதற்கு கீற்று வேயப்படாத பந்தல் இந்த மரம்....

இந்த மரத்தில் காய்க்கும் பழத்தின் சுவையில் சர்க்கரை தோற்றுவிடுமாம்.ஊருக்கு பொதுவாம்...பங்கு பிரிக்கையில் பல வம்பு நடக்குமாம்...தாத்தா சொல்ல சொல்ல கேட்டுக்கொண்டே உறங்கிப்போவதுண்டு...

நிரம்ப வருடங்களுக்கு பிறகு ஊர் திரும்பினேன்.நிறைய மாற்றங்கள்...ஒத்தையடி பாதைகள் காணாமல்போய் தார்ச்சாலை வந்துவிட்டது. புதிதாய் வருபவர்களுக்கு இந்த மரம்தான் கலங்கரை விளக்கம்.ஆவலோடு வந்து பார்த்தேன்....தொல்பொருள் இலாகா தோண்டியெடுத்த எலும்புக்கூடாய்....நின்று கொண்டிருந்தது மரம்.....

இலைகளை காணவில்லை... கிளைகள் மட்டும் செதில் செதிலாய் நீட்டிக்கொண்டு.... ஏகப்பட்ட பொந்துகள்....அன்று இதன் நிர்வாண உடம்பை மறைத்திருந்த கொடிகள்... கொஞ்சி குலாவிய குயில்கள்...கிளிகள்... எதையுமே பார்க்க முடியவில்லை.ஒரேயொரு ஆந்தை உள்ளிருந்து எட்டிப்பார்த்தது.மற்றபடி எல்லாம் சூன்யம்....

நாங்கள்விளையாடி களித்த இடங்களெல்லாம் கருவேல மரங்களால் சிறைபட்டிருந்தது. இன்று விளையாடுவதற்கு கொஞ்ச இடமில்லை.இன்று எனது குழந்தைகள் விளையாட்டைக்கூட கணிப்பொறியிலே முடித்துவிடுகிறார்கள். தங்களது மேனியை ஏ.சி அறையிலே கரைத்துவிடுகிறார்கள்.எனது மேனியில் படிந்த புழுதி வாசத்தை அவர்கள் ஒருநாளும் நுகர்வதில்லை....

இந்த மரம்தான் எத்தனை யுகங்கள்...எத்தனை நிகழ்வுகள்...அத்தனையும் தாண்டி நிற்கிறது.இந்த மரம்தான் எத்தனை நிஜங்களை தன்னுள் புதைத்து வைத்திருக்கிறது. இந்த நவீனயுக குழந்தைகள் கொஞ்சம் பெறுகிறார்கள். நிறைய இழக்கிறார்கள். அம்மாவின் ஆரிராரோ... தாத்தா,பாட்டி கதைகள்... கூடி விளையாடும் விளையாட்டுக்கள்...இப்படி நிறைய சின்ன சின்ன சந்தோஷங்களை இழந்து விடுகிறார்கள்...

நிமிர்ந்து பார்த்தேன்... எத்தனை யுகங்களை கடந்துவிட்டேன்....எத்தனை மக்களை சந்தித்துவிட்டேன்... எத்தனை குழந்தைகளுக்கு விளையாட்டு திடலாக... எத்தனை பேருக்கு நிழல்தரும் பந்தலாக....என் முன்னால்தான் எத்தனை நிகழ்வுகள்...நிஜங்கள்... அத்தனையும் தாண்டி நிற்கிறேன்....என்ற பெருமிதம்...கம்பீரம்....அதன் முகத்தில் எதிரொளிக்கிறது....

பார்த்தேன்....பார்த்துக்கொண்டே இருந்தேன்.மனதுக்குள் ஒரு யுத்தம் மௌனமாய்.... கடந்து போய்விட்ட காலத்தோடு....

என்றென்றும் தாலாட்டும் நினைவுகளோடு.....
பனவை பாலா....

எழுதியவர் : பனவை பாலா (25-Jul-15, 11:03 pm)
சேர்த்தது : பனவை பாலா
பார்வை : 235

சிறந்த கட்டுரைகள்

மேலே