பேசாத வார்த்தைக்காக
மழைத் துளி பட்ட விதையென
முளைத்து விடுகிறாய்.
உனது....
மெல்லிய பூவின் நிறத்தில்...
பனித்துளி ஈரத்தில்...
நீரின் மெல்லிய ஓசையாய்
எழும்பும் குரலில்...
என் இருளை உடைத்து
அமர்கிறாய்.
குலையத் துவங்குகிறது
என் அமைதி.
*************************************************
நதியாய்...
சுழலாய்...
கடக்கிறது உன் புன்னகை.
இணைந்து நீந்தும்
என் விழிகளை நிறைக்கிறது
உப்புக் கடல்.
**************************************************
இலை போல்
உதிர்ந்து விடுகிறது
உன் நேசம்.
உறைந்து சருகாகிறது
எனது நீர் தேங்கிய பிரியங்கள்.
***************************************************
பேசிய பொழுதுகளில்...
மறந்து போகும்
ஏராளமான வார்த்தைகளைப்
பேசிக் கொண்டிருந்தோம்.
பேசாத ஒற்றை வார்த்தை மட்டும்...
மறக்காமல் நினைவில் இருக்கலாம்
உனக்கும் இப்போதும்.
*********************************************************