கலாம்- கண்கள் இழந்தென்ன கனவு
ஐயோ, அய்யா உங்களுக்குமா?
இந்த காலனுக்கு,வேறு வேலையில்லை.
யாரைப் பற்றியும் அறியா மூடன் அவன்.
ஏழைச் சிறுவன், மாணவன்,
விஞ்ஞானி ,ஜனாதிபதி, ஆசிரியர்
அத்தனையிலும்
நீங்கள் கடைபிடித்தவை;
பொறுமை, எளிமை, நேர்மை,
விடாமுயற்சி, பணிவு, பாசம்,
இளையதலைமுறை மேலே
நீங்கள் கொண்ட மாறா நம்பிக்கை.
பறவைகள் பார்த்து,
விண்வெளிமேல் ஆசைபட்டீர்-இன்றோ
அதற்கும் மேல் சென்று விட்டீர்.
தாய்நாட்டின் வல்லமைக்கு
பாடுபட்டீர் - அய்யகோ
மரணத்தின் வலிமையை யாரறிவார்.
பட்டங்கள், உயர்பதவி,
அனைத்தும் பெற்றீர்.
அமரர் என்ற பட்டமும் கடைசியாய்.
குழந்தைகள்மேல் உங்கள் பற்று
தாய்மை போலே - மக்கட்கோ
நீங்கள் ஒரு குழந்தை போலே.
இரண்டும் இழந்தன ஒன்றையொன்று.
இளைய சமுதாயம் எழுந்து நின்றது;
உங்கள் ஊக்கத்தினால்,
இந்தியாவும் இங்கே விண்ணில் பறந்தது.
நீங்கள் வேறெங்கோ பறந்து சென்றீர்.
கனவு காணச் சொன்னீர்கள் - அய்யா
பாதியில் விட்டுவிட்டோம்.
நீங்கள் மறுபடி வந்தால் மட்டும்,
மீதியை நாங்கள் தொடர்வோம்.
உங்களுக்காக ஒரு சபதம்,
2020-ல் வல்லரசாவோம் - ஆனால்
அப்போது நீங்கள் வருவீர்களா.
சிறகுகள் பறந்தது வானின் மேல்,
கடைசியில் கலந்தது அக்னியில்.