பொலிந்து வாழ்க

பகுத்தறிவின் ஒளிமங்கி அறியாமையாம்
பாதாளம் வீழ்கின்ற தோழா கேளாய் !
வகுத்தளித்த ஐயாவின் கொள்கை தன்னை
வாநாளில் புற்றாகப் பற்றிக் கண்ணீர்
உகுக்கின்ற நிலைமாற்றி உய்வாய் ! பாரில்
உயர்ந்திடுவாய் , ஆரியனின் சூழ்ச்சி வென்று !
அகத்தினிலே மனுதர்மம் கொண்டே உன்னை
ஆள்கின்ற வஞ்சகனின் பொய்மை வெல்வாய் !

உன்னுழைப்பில் ஈட்டிட்ட செல்வமெல்லாம்
உள்ளத்தால் கள்ளமுடன் கொள்ளை கொள்ள
தன்னுழைப்பே இல்லாமல் வாழ்வு மோங்க
தாரணியில் சாமியென்று நீயும் போற்ற
கண்ணிழந்த மூடனென ஆக்கி உன்னை
காலடியில் தான்மிதித்து தாழச் செய்ய
விண்ணிருக்கும் பிரம்மாவின் தலை யுதித்தோன்
வேல்விக்கே பிறந்தவனாம் என்னும் ! உன்னை

சூத்திரனாய் ஆக்கிட்ட மனுவினாலே
செல்வத்தில் , நீகொண்ட மேன்மை வாழ்வில் ,
பாத்திரமாய் ஆகிட்ட தொழிலில் , வீழ
பாதையினை சமைக்கின்ற பூணூல் தன்னை
காத்திருந்து அறுத்தெறிந்து கதறி யோட
கனிமொழியை , உன்னினத்தை பண்டைப் போல
நாத்திறந்து மாந்தரினம் பாடச் செய்து
நாயகனாய் துலங்கிடுக ! பொலிந்து வாழ்க !

எழுதியவர் : இராம்பாக்கம்.கவிஞர்.தன.கன (28-Jul-15, 10:06 pm)
சேர்த்தது : தமிழன் விஜய்
பார்வை : 87

மேலே