பண்பைக் காத்தார்

ஈரோடு நகர்தோன்றி ‘ இந்தியாவை
ஏகபோக ஆதிக்கம் செலுத்தி , நாமும்
வேரோடு சாய்ந்திடவே சுரண்டி வாழ்ந்த
வேற்றுவனாம் வெள்ளையனை ‘ விரட்டி யோட்ட
போராடி , காந்தியக் கொள்கைப் பற்றால்
புலையருக்கும் ,தீயருக்கும் , நாடா ருக்கும் ,
ஆறோடும் மலையாள நாட்டில் தந்த
அல்லலினைப் போக்கிட்டார் வைக்கம் வீரர் !

கண்ணீரின் கதைமாய கதர் சுமந்து
கள்ளுக் கடை மறியல் செய்து , சொந்த
தென்னைமரம் பலநூறை வெட்டிச் சாய்த்து
திகழ்ந்திட்டார் கொள்கையினில் வைர நெஞ்சால் !
அன்னியனும் ஆரியனின் புராண
ஆகமமும் , இதிகாச குப்பை யெல்லாம்
மண்ணிடையே தீமூட்டி எரித்தார் ! நம்மின்
மடமைகளும் , சாதிகளும் வீழ தந்தை !

தெய்வமென்ற பேராலே நம்மினத்தை ,
செல்வத்தை எல்லாமும் எத்தி , நல்ல
ஒய்யார வாழ்வுதனை வாழ்கின்ற
உளுத்தரினை உலுக்கிடவே பேச்செ ழுத்தால்
ஐயாவும் கற்சிலையை உடைத்தார் ! மூட
ஆரியனும் அடங்கியோட , நாமுமோங்கி
உய்கின்ற நிலைதந்தார் ! இந்தி நாயை
ஒடுக்கிட்டார் ! நந்தமிழின் சீர்மை யென்னி

எழுத்தினிலே சுருக்கத்தைக் கண்டார் ! பெண்டிர்
எவ்வகையில் தாழ்ந்தவர்கள் என்றே கேள்வி
அழுத்தமுடன் கேட்டிட்டார் ! உரிமை யெல்லாம்
அவர்களுக்கும் உண்டென்றார் ! விதவைப் பெண்டிர்
கழுத்தொளிரும் தாலியின்றி வாடல் கண்டு
கருணையுடன் மறுமணத்தை ஆதரித்தார் !
ஒழுக்கத்தை நாட்டிடவே தாசிப் பட்டம்
ஒழித்திட்டார் ! தமிழ் மண்ணில் பண்பைக் காத்தார் !

எழுதியவர் : இராம்பாக்கம்.கவிஞர்.தன.கன (28-Jul-15, 10:10 pm)
சேர்த்தது : தமிழன் விஜய்
பார்வை : 68

மேலே