பகையை அடித்திடுவாய்
ஓ...! இன்றமிழ் தோழனே ! இளஞைனே ! வீரனே !
உன்றலை மீதவன் நின்று மிதிப்பது ,
அறிகிலையோ ! உணர்வு வரவிலையோ – நிதம்
உண்டலும் , உடுத்தலும் , உறங்கியே கழித்தலும் ,
ஒன்றுதான் பணியென உள்ளமும் நினைப்பது ,
சரியாமோ ? தமிழர் நெறியாமோ ?
கனித்தமிழ் மறவனே ! காளையே ! மேருவே !
இனியவுன் மொழியினை எள்ளி நகைப்பது ,
மடுக்கிலையோ ? வீரம் கொடுக்கலையோ ? அன்னை
மனிதனாய் ஆக்கிட , மேனியின் குருதியை
மகிழநீ அளித்தனன் ! பாலெனக் குடித்தனை ,
பாலிலையோ ! துடிக்கத் தோளிலையோ ?
ஆறடி மேனியை , ஓரடி யாக்கிநீ ,
பாரினில் கூனியே பயந்து நடுங்கவா ,
பிறந்துவந்தாய் ? மண்ணில் திரிந்துவந்தாய் – பகையை
கூறு கூறாக்கிடும் வாளினைப் பெற்றிடா ,
கொத்தடிமையினை வெட்டியே சாய்த்திடா ,
தோளிருந்தேன் ? பயனோ ? நீயிருந்தென் ?
ஆழ்கடல் தாண்டியுன் இனத்தினர் பிறன்முடி
அன்றொரு நாளதை வென்றுமே பறித்ததை ,
எண்ணிடுவாய் ! மண்ணில் மின்னிடுவாய் – மாற்றார்
வாழிட மின்றியெங் கோடியொடிங்கிட ,
வந்தனை செய்தடி வந்து அடங்கிட ,
இடித்திடுவாய் ! பகையை அடித்திடுவாய் !