காலம் கொய்த மலர்க் கொத்து கலாம்

காலம் கொய்த மலர்க் கொத்து கலாம்....

சிந்தனை சிறகடித்து உலகினை
வலம் வந்த சிட்டுகுருவி நீ
துடிக்கவிட்டுப் பிரிந்தாயே
சிட்டுக் குருவி போன்றே நீ
எங்கள் கனவில் தான் இனி...!!

பசுமை இந்தியா உன் கனவுகள்
உன் பார்வை பட்ட இடமெல்லாம்
நடச் சொல்லியும் நட்டு வைத்தும்
கோடானு கோடி மரக் கன்றுகள்
இன்று வளர்ந்து விருட்சமாய்...!!

எங்களின் நிழலுக்கான
விருட்சமே நீதானே
வேரோடு சாய்ந்தாயே...
ஆரோடு சொல்லி அழ
நீ தேரேறி வந்த வீதியெல்லாம்
இன்று கண்ணீரேந்திய ஊர்வலங்கள்...!!

உனக்கீடாய் எவரைச் சொல்ல
இருபதும் இருபத்து ஓராம் நூற்றாண்டிலும்
புனிதனாய் வாழ்ந்த விவேகானந்தன் நீ
மனிதத்துடன் தனித்துவமாய்
வாழ்ந்த மாமேதை நீ..
கலாம் காலம்தான் எங்கள் காலமும்
இறுமாப்பு கொள்கிறோம் மெய்ஞானியே..!!

கல்விக் கூடங்கள் தேடித் தேடியே
உன் பயணங்கள்
உயிர் மூச்சின் கடைசி நிமிடமும்
பயிற்றுவித்தாய் விஞ்ஞான ஞானங்கள்...
மீண்டும் எப்போது வரப்போகிறாய்
விஞ்ஞானப் பாதையை / பாடங்களை
விரிவாக்கம் செய்வதற்கு... !!

எத்தனையோ பேர்கள்
ஜனாதிபதியாய் இருந்திருக்கலாம்
ஜனங்களின் அதிபதி
நீ ஒருவனாக மட்டுமே....
ஜனங்களின் மனங்களை சிறைகொண்டு
மறைந்து போனாயே....

இரக்க மனம் படைத்தவரே
இறக்க மனம் ஏன் கொண்டாய்..??

நாங்கள் நேர்வழிப் பாதையில்
உன்னைத் தொடர்கையில்
நீ மட்டும் பால்வழி வீதிகளுக்கு
பயணம் சென்றது ஏன்.??

நிலவையும் விண்மீனையும்
தொட்டுக் கவிபாட
எங்களையெல்லாம் விட்டுச் சென்றாயோ??

பேக் கரும்பு இடத்தில்
பெட்டிக்குள் கரும்பாய் இன்று
மானுடத்தின் இனிப்பே
உன் இறப்பு எல்லோர்க்கும் கசப்பே..!!

பூமி கண்டெடுத்த புதையல் நீ
கவர்ந்து சென்றவன் காலன் என்றாலும்
நீயிருக்கும் இடம் தேடி
வருவோம் ஓர்நாளில்
பூமிக்கு சொந்தமான புதையலை மீட்டு
பூமிக்கே அளித்து மகிழ...!!

அந்த புனித நாள் வரையில்
உமக்கான எமது கண்ணீர் அஞ்சலிகள்...!! 

எழுதியவர் : சொ.சாந்தி (30-Jul-15, 9:46 am)
பார்வை : 141

மேலே