தென்றல்

திசையெங்கும் பயணம் செய்கிறாள்

புதுப் புது பயணங்கள்

புதுப் புது அனுபவங்கள்



மூங்கிலின் துளை வழியாக

புதிய ராகத்தை பாடியவள்

குயில்களின் பாட்டு வாத்தியார்

பாடலை பாடிக் கொண்டே

கிளைகளின் இலைகள்

உள்ளே நுழைந்தாள்.



தென்றல் தீண்டியதால்

மதிமயங்கிப் போன

கிளைகள் ஆட ஆரம்பித்தன

பார்வையாளராகப் பறவைகள்

கிளைகளின் தோளில் அமர்ந்து

நடனத்தை ரசித்தன.



ஆசை தீர்ந்து

தன் பயணத்தை

மீண்டும் தொடங்கினாள்.

பயணக் களைப்பில்

தாகம் ஏற்பட

தண்ணீர் பருக

குளத்தில் இறங்கினாள்.



தாகம் தீர,

தண்ணீரின் மேல்

தவழ்ந்து விளையாடினாள்

நீர் மேல் தென்பட்ட

சிறு சிறு அலைகளை

கண்ட நாரைகள்

இவ்வளவு மீன்களா

என ஆசை கொண்டு

ஏமாற்றம் அடைந்தன.


கரையேறியவள்

குளிர் மேனியுடன்

கரையோரக் காதலர்களை

சீண்டினாள்.

மயக்கத்தின் காரணமாக

காதலிகள்

காதலர்கள்

மடியில் வீழ்ந்தனர்.



பெண்களின் சேலை விலக்கி

விளையாட்டு செய்தாள்.

மாராப்பு விலகியதால்

மலர்கள் கோபம் கொண்டன.

இடத்தை காலி செய்தாள்

தென்றல்.

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (30-Jul-15, 11:45 am)
Tanglish : thendral
பார்வை : 429

மேலே