அலங்கார அனேகன்
நீர்த்துப்போன தார்சாலையின்
வெப்ப சலனத்தால்
வியர்வை துளிகள்மலர
முகமோ வாடியது !
வெகுநேரமாய்
வெயிலை குடித்த கண்களில்
துளிகூட ஈரமில்லை
தொடர்..., வண்டிகளின் நெரிசலால்
தொடர்பற்று போனது
காற்றும் குளுமையும்
போக்குவரத்து சமிக்கையில்
சிகப்புவிளக்கிற்கு
நாக்கு வறண்டு நான் நிற்க
பச்சையோ கானல் நீரானது !
அலைபேசியில் அளவேயில்லாமல்
அலைகழிக்கபடும் என் அழைப்புகள்
நேற்றிரவே தொற்றிக்கொண்ட
அலுவலக கிலி
பகல்தொடர்ந்தும் பறக்கவேயில்லை
மாதயிறுதியில் மணிக்கணக்காய்
நேரம் ஓடுவதேயில்லை
மேலாளரின்,
மஞ்சுவிரட்டு மாடுகள்போல்
நாளெலாம் ஓடியும்
இலக்கை தொட்டேன் என்று
வலக்கை தூக்கியதேயில்லை
அலைந்து திரிந்தும்
" வேலையில்லை " என்பவர் மத்தியில்
அலைவதே என் வேலை
சுருக்கமாக விளக்கட்டுமா
நானொரு
" விற்பனை பிரதிநிதி "