தொக்கி நிற்கும் தோழமை

துளையான மேனி வளையாகுதே...
கலையான கிள்ளை உறவாகுதே...
தஞ்சமான கிளியும் தியாகி தருவும் தோழனாய்...

கடுங்கதிரோன் கொடுங்கோலனாய் கொந்தளிக்க
நடுங்கிய நெடுந்தருவும் கண்ணீர் தானுதிர்க்க
கலனாய் சேமித்து உணவாய் தரூஉம் கனவானாய் பூமி
காலம் கழிந்து வான்மாரி பொழிகையில்
களித்த பூமாரி கவின் பார் மீது-நன்றியாய்..
ஏமாற்றா தருவும் எதிர்பாரா புவியும் நண்பனாய்...

கிளியும் புவியும் தோழனே...
தன்னலமில்லா தருவாலே...
முறையான தோழமை பகைவனையும் பங்காளியாக்கும்...

மரம் மான மனிதன் மாறின்
வரம் வாங்க தவம் இல்லை...
மனிதம் இங்கே மழையாகும்...
மன்பதை யாவும் மழலையாகும்...

எண்ணிக்கை இதுவென்று
ஏதொன்றும் தடையில்லை – தோழமைக்கு
வண்ணங்கள் இதுதானென்று
வரையறை இங்கில்லை...

தாயின் தவிப்பு தமையன் பாசம்
தகப்பன் தழுவல் தமக்கை தியாகம்
தம்பியின் சேட்டை தங்கையின் சினுங்கல்
பாட்டன் முனகல் மாமனின் மிரட்டல்
பாட்டியின் பதறல் அத்தையின் அதட்டல்

தொகுத்த யாவினும் தொக்கி நிற்பது
வகுத்த இலக்கணமில்லா வாய்மொழி காவியம் – நட்பு

காதலின் கனிச்சுவை யாதென்று யாமறியேன்...
தோழமையின் தேன்சுவை தெவிட்டாமல் நானறிவேன்...

பாலினம் கண்டது காதல்...
பாலினம் கடந்தது நட்பு...

எழுதியவர் : அஞ்சா அரிமா (2-Aug-15, 12:32 am)
பார்வை : 219

மேலே