சொல்லாத உறவென்றாலே நண்பன் தானடா

தாலாட்டி சீராட்டி
தலைதூக்கும் வயதுவரை
சோறூட்டி வளர்த்திடுவாள்
சொந்தங்களைச் சொல்லியவள்
வாராத நிலவினையும்
வானவில்லின் அழகினையும்
உனக்கென்றும் சொந்தமென்று
உறவுகளாய் அவளழைப்பாள்..!
அத்தனையும் அறிமுகமாய்
அன்னைதந்தை வைத்தாலும்
சுற்றிவரும் உறவெல்லாம்
சொற்பமெனும் உலகத்தில்
அற்பமென மறைந்தோடும்
ஆபத்து வரும்போது
அத்தனையும் சுருட்டிக்கொண்டு
அவனருகே இல்லாமால்..!
சொல்லுகின்ற உறவெல்லாம்
சூழ்ச்சிகளாய் மாறிவிட
சொல்லாத உறவொன்று
சூழ்நிலையைத் தாங்குமடா..!
இல்லாத நேரமென்று
இவனென்றும் பார்ப்பதில்லை
இருந்தாலும் தமக்கென்று
இழிவாக நினைப்பதில்லை..!
எல்லாமும் அவனுக்கு
எந்நாளும் கிடைத்திடவே
தும்பிக்கைத் துணைப்போல
நம்பிக்கை அளித்திடுவான்
பாமரனாய் இருந்தாலும்
பண்பென்னும் குணத்தாலே
நட்பென்னும் உறவுக்கு
நாளும்உயிர் கொடுத்திடுவான்..
“நான்தானே நண்பன்” என்று ...!