02-08-15--காளியப்பன் கவியும் Dr கன்னியப்பரின் உரையும் --04

முன் அறிவித்தபடி, இது, கைந்நிலைப பாடல்களைப் படித்தபொழுது நான் உருவாக்கிய வெண்பாக்களில் ஒன்று. இதன் பாடுபொருள்களில் தற்காலச் சூழ்நிலையும், பழங்கால உவமைகளும் பயன்படுத்திக் காட்டப்பட்டுள்ளதை அறிந்து இன்புறலாம்.
இப்படி ஒரு எண்ணம் என்னுள் உருவாகவும், இதற்கு உரைகொடுத்தும் உதவிய நம் தளத்தின் மூத்த கவிஞரும் ,மருத்துவத்துறையில் அனுபவமிருந்தும், தமிழ்ப் பாடல்களின் அமைப்பிலும் ,அழகிலும் தன்னைப் பறிகொடுத்தவருமான Dr.கன்னியப்பருக்கு எனது மனமார்ந்த நன்றிகளைசொல்லி அதனைப் பதிவு செய்வதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்.இனி,

பாசிப் பசுஞ்சுனை பாழ்படப் பக்கம்,சு
தேசித் தொழிற்சாலை தென்படும்!-மாசுறும்
காற்றும் நிலமும் களித்த,எம் வாழ்வுமே!
கூற்றோ குடியரசோ கூறு!
(பசுஞ்சுனை=பசுமை நிரம்பிய நீர்னிலை,ஊருணி;
களித்த=மகிழ்ச்சி நிரம்பிய;)

பதவுரை: (Dr.கன்னியப்பர்)
பாசிப் பசுஞ்சுனை = நீர்ப்பாசிகள் நிறைந்தும்,பசுமையான மரங்கள் இடையிட்ட்தாகவும் உள்ள நீர்நிலை,
பாழ்பட=பாழாகிக் கெட்டழியும்படியும்,
பக்கம்= அவைகளுக்கு அருகிலேயே
சுதேசித் தொழிற்சாலை= நமது பல்வேறு பொருள்களின் உற்பத்திக்கான பணித்தளங்கள்;
தென்படும்= காணப்படும் (அதனால்)
காற்றும், நிலமும்= சுற்றுப்புறச் சூழிலைகளுக்கான சுவாசத்திற்குரிய வாயுவும்,குடியிருப்புக்கும், நிலத்தடி நீருக்கும் ஆதாரமான நிலவளமும்
களித்த எம் வாழ்வுமே=மகிழ்ச்சி கலந்த்தாயிருந்த எம்முடைய வாழ்க்கையும்
மாசுறும்= சீர்கெட்டுப் பாழ்படும்; (இவற்றிற்குக் காரணமான செயல்பாடுகளை ஊக்குவிக்கின்றது)
கூற்றோ?=குடிமக்களின் எமனோ (அல்லது)
குடியரசோ= அம்மக்களின் நலன் நாடும் குடியாட்சி கொண்ட அரசுதானோ?
கூறு: சிந்தித்துச் சொல்லுவாயாக!

கருத்துரை: (Dr.கன்னியப்பர்)

நீர்ப்பாசிகளும், பசுமையான மரங்களும் இடையிட்ட பசுமை நிரம்பிக் காணப்படும் நீர்நிலைகள் பாழாகிக் கெட்டழியும்படி, அந்த நீர்நிலைகளுக்கு அருகிலேயே பல்வேறு பொருள்களின் உற்பத்திக்கான பணித்தளங்கள் உருவாகி இருக்கும். (அதனால்) அவ்விடங்களைச் சுற்றியுள்ள இடங்களும், காற்றும் அத்துடன் மகிழ்ச்சியோடு இன்புற்றிருந்த எங்கள் இனிய வாழ்வும் கெட்டுச் சீரழியும். இத்தகைய அவல நிலைகளுக்கு காரணமாயிருப்பது எங்கள் நலம் நாடும் மக்கள் அரசுதானா அல்லது எங்கள் வாழ்வுக்கு எமனா என்று ஆதங்கப்படுகிறார் இப்பாடலின் கவிஞர் எசேக்கியல்.:
=====+++====

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (2-Aug-15, 8:19 pm)
பார்வை : 58

மேலே