எல்லோரும் சொல்லுவோம்

எல்லோரும் சொல்லுவோம்
=======================================ருத்ரா

ஜாக்ரதம்
ஸ்வப்னம்
ஸுஷுப்தி
துரீயம்

என்று
நம் ஆத்மாவின் வெங்காயத்தோல்
உரித்தவர்கள் நாம்.
உரித்தபின்னே
ஒன்றும் இல்லை என்பதையும்
உணர்ந்து கொண்டவர்கள் நாம்.

இருப்பினும்
குண்டலினி என்று
ஆயிரம் அடுக்கு
இதழ் மண்டலங்களையும்
ஊசியாய் துளைத்து
உச்சியில் ஏறு
என்று சொல்லும் யோகங்கள் கூட‌
மனசு எனும்
பலூனை
ஊதி ஊதி விளையாடுவது தான்.

நம்மிடம்
அப்படியொரு "அட்டமா சித்தி" இருக்கும்போது
ராக்கெட் விஞ்ஞானத்துக்கு
மேலை நாட்டு
மிலேச்ச ஞானங்கள் தானே
"தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி"
கவுண்ட் டவுன் சொல்கின்றன!

ஆயிரம் ஆண்டு பழைமைகளை
வைத்துக்கொண்டு
அந்த‌
"எலக்ட்ரோ மேக்னடிஸத்தின்"
நரம்பு ஓட்டத்தின்
மெல்லிய கீற்றைக் கூட‌
நம் "ஞானத்தால்"
ஏன் ஸ்பரிசிக்க முடியவில்லை?

"போஸ்" எனும்
நம் இந்திய விஞ்ஞானியின்
கண்டுபிடிப்பு தானே
உலகப்புகழ்பெற்ற அந்த "போஸான்" என்பது!
அதற்கு அவர்
வேதங்கள் செழித்த பூமியை விட்டு
வேதங்கள் அற்ற பூமிக்கு அல்லவா
செல்ல வேண்டியிருந்தது.

கேட்டால்
மேக்ஸ்முல்லர் ஆட்கள்
நம் சுவடிகளை திருடிக்கொண்டார்கள்
என்று
ஒரே போடாய் போடுவது தான்
நம்மவர் விஞ்ஞானம்.

நம் அறிவின் கூர்மையை
நாமே மழுங்கடித்துக்கொண்டோம்.
மானுடம் எனும் பெருவெள்ளத்தை
சடங்கு சம்ப்ராதயங்களின்
கொட்டாங்கச்சியில்
பிடித்துக்கொண்டால் போதும்
என்று
கோவில்களில் மட்டுமே
குடியிருந்து விட்டோம்.

அரசனின் வாளுக்கும் ஈட்டிக்கும்
மதங்களை குஞ்சம் கட்டினோம்.
அவன் ஆள
அவன் முதுகு சொறிந்து கொடுத்து
வர்ணம் வர்ணமாய்
சுவர்கள் வைத்துக்கொண்டோம்.

நம் விஞ்ஞானத்தினவுக்கும் தீனியின்றி
கடவுள்களும் அரசன்களும்
விலங்கு பூட்டி வைத்திருந்தனர்.
மனிதன் மேல் மனிதன் சவாரி செய்யும்
கொட்டடியில் இருந்துகொண்டு
நெருப்பு கீதங்கள் பாடி என்ன பயன்?
நெருப்பையே நெய் ஆக்குவதற்குப்பதில்
நெருப்பிலே நெய்யைக்கொட்டி என்ன பயன்?
அறிவு சாவதில்லை.
ஆனால்
நம் நாட்டில் மட்டுமே
அறிவுக்கு அடக்கம் செய்யும்
சாதிகளும் மதங்களும்
கொடியேற்றிக்கொண்டிருக்கின்றன.
போகட்டும்.
எல்லோரும் சொல்கிறார்களே!
நாமும் சொல்லிவிட்டு போவோம்.
"ஜெய்ஹிந்த்"

=======================================================

எழுதியவர் : ருத்ரா (3-Aug-15, 11:24 am)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 76

மேலே