பரிசளிக்கிறேன் என் கண்களை கவிஞர் சி அருள்மதி
பரிசளிக்கிறேன் என் கண்களை !!
வெண் வானில் மிதக்கும்
கரும் பனித்திட்டு.
கருணைக் கதிரோன் வர
உருகி உப்பாகும் உயிர்க்கடல்.
வெண்கடலில் மூழ்காத
கரு முத்து.
மன வீட்டின் இரு கதவு.
இளமையில் குவியமாய்
முதுமையில் குழியமாய்
உருமாறும் ஒளிச்சுடர்.
கூம்புகளும் குச்சிகளும் கொண்டு நெய்த
வண்ணத் திரைச்சீலை
மூடாமல் திறந்திருக்கும் இடமும் வலமும் !
அறுபது வயதான அனுபவக் கண்கள்
அறுவைசிகிச்சைக்குப்பின் 'அ ஆ' படிக்கின்றன
ஐந்து வயதுக் குழந்தையிடம் !
இறந்த பின்பும் ஒளிகொடுக்கும்
விழிச்சூரியன்கள் !
இருட்டுக்குழந்தைகள் இரட்டைபிறவிகளாய்
குருடனின் கண்கள்.
கண்ணீர் சுரப்பி வற்றிப்போன கரு முலைகள்
கஞ்சனின் கண்கள்.
நவரசம் பேசும் இரு ஒளி நாக்குகள்
பரதக்கலைஞனின் கண்கள்.
வண்ணச்சாயம் அழிந்துபோன
கருப்பு வெள்ளை ஓவியங்கள்
நிறக்குருடர்களின் கண்கள்.
அன்புப்பால் சுரக்கும் தாய்முலைகள்
வள்ளலின் கண்கள்.
பார்வையால் கற்பழிக்கும்
இரு வெறி நாய்கள்
காமக் கயவனின் கண்கள்.
அசையும் குளோரோபார்ம் குப்பிகள்
காதலியின் கண்கள்.
கருப்பு வெள்ளை பட்டாம்பூச்சியாய்
சிரிக்கும் மின்மினியாய்
வண்ணப்படம் காட்டும் வசியக் கண்கள்.
சிமிட்டாமல் மூடாமல் முழித்திருக்கும்
மீனின் கண்களாய் காதலனின் கண்கள்
காதலியின் முன்னால் !
கரப்பான்பூச்சியிடம் கடன் கேட்டிருக்கிறேன்
கூட்டுக்கண்களை !
நீ பின்னால் போகும்போது
என் முகத்தை திருப்பாமல்
உன்னழகை ரசிப்பதற்கு !
ஆந்தையிடம் கண்களை இரவல் கேட்டிருக்கிறேன்
உன்னை இரவில் இரசிப்பதற்கு !
தவளையிடம் தானம் கேட்டிருக்கிறேன்
ஒளிபுகும் இமைகளை
உன் காதல் கண்ணாமூச்சி விளையாட்டில்
என் இமைகளும் உன் ஊடல் நாடகத்தைப் பார்ப்பதற்கு !
உறக்கத்திலும் ஒரு கண்ணை திறந்தே இருக்கிறேன்
உன் வீட்டின் வாசலைப் பார்த்து
காதல் டால்பினாய்.
புற ஊதாக்கதிர்களால் அல்ல
உன் புறவேற்றுமை வடிவங்களால்
பாதிப்படைந்த என் கண்கள்.
பசலை நோய் உன் கண்களிலும் படரட்டுமடி !
இறந்த பின்னே என் கண்களை தானம் செய்துவிடுங்கள்
எங்களின் காதலுக்கு சாட்சியமாய்
உயிர்வாழட்டும் பல்லாண்டு !
குறிப்பு :
மீன் , கரப்பான்பூச்சி , ஆந்தை , தவளை மற்றும் டால்பினின் கண்கள் அறிவியல் பூர்வமாக எப்படிப்பட்டவையோ அப்படியே இக்கவிதையில் புனைந்திருக்கிறேன்.