04-08-15 காளியப்பன் கவியும் Dr கன்னியப்பன் உரையும்--05
05
வடித்த மதுக்கடை வாசலில் வீழ்ந்து
கிடக்கும் மணந்த,எம் கேள்வன் – கொடுக்கும்
விலையில் பொருள்போல வீட்டினுள் நாங்கள்
வலையில் விழுமீன்,எம் வாழ்வு!
(மணந்த=மணம்செய்த; கேள்வர்=கணவன்மார்;)
பதவுரை: (Dr.Kanniappan)
வடித்த= நொதிக்க வைத்து வடித்துக் கொண்டுவரப்படும்
மதுக்கடை வாசலில் =சாராயம், வெளினாட்டு மது என்னும்
பலவற்றை விற்கக் கொண்டுவரும்,கடைகளின் வாசல்
படிகளில்
மணந்த என் கேள்வன்= எங்களை மணம் செய்து வந்த வழ்க்கைத்
துணைவர்கள் என்று நினைக்கப்படுபவர்கள்
வீழ்ந்து கிடக்கும் =குடித்து விட்டு மயங்கித் தன்னுணர்விழந்த
நிலையில் படுத்திருப்பர்;
கொடுக்கும்= அவர்களுக்குக் கொடுக்கப்படும்
விலையில் பொருள்போல= அரசு கொடுக்கின்ற விலையில்லா
இலவசப் பொருள்களைப் போலவே
வீட்டினுள் நாங்கள்= எங்கள் வீடுகளுக்குள் நாங்களும்
இருக்கின்றோம்
வலையில் விழுமீன் என் வாழ்வு= எங்கள் வாழ்க்கையோ (அந்த) கலியாணமென்ற வலைகளுக்குள் அகப்பட்டுக்கொண்ட மீன்களே!
கருத்துரை: (Dr.Kanniappan)
எங்களை மணம் செய்து வந்த வழ்க்கைத் துணைவர்கள் என்று நினைக்கப்படுபவர்கள், நொதிக்க வைத்து வடித்துக் கொண்டுவரப்படும் மதுவை அருந்தி, ஆங்காங்கே அமைந்த அரசு மதுக்கடைகளின் வாசலில் தம்மை மறந்து விழுந்து கிடப்பார்கள்.
அரசு அவர்களுக்குக் கொடுக்கும் விலையில்லாத இலவசப் பொருட்கள் போல எந்த வித கரிசனையும், பாதுகாப்புமின்றி வீட்டினுள்ளே நாங்கள் இருக்கிறோம்;
எங்கள் வாழ்வு வலையில் அகப்பட்டு உயிரற்றும், நாதியற்றும் இருப்பதான மீன்களைப் போல என்று வருந்தி பெண்கள் கூறுவதாக பெண்களின் நிலை பற்றி கூறுகிறார் இப்பாடலில் கவிஞர் எசேக்கியல்.
மணந்த எம் கேள்வன் என்பதற்கு சாராய மதுவும், எடுத்த வாந்திகளின் நெடியும் கலந்து வீசும்படி கிடக்கும் எனக்குத் துணையென வந்தவர்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.
விலையில் பொருள்போல என்றதில் அதிகம் போற்றி மதிக்கப்படாத நிலை, பெண்களுடையது என்றும் குறிப்பால் உணர்த்தப் பட்டது.
வலையில் விழுமீன் என் வாழ்வு என்பதன் மூலம் திருமணம் செய்யப்பட்ட பின், இது போன்ற துன்ப வலைகளில் வீழ்த்தப் பட்டுக் கிடக்கும் பெண்கள் தமக்கொரு மீட்பின்றி, இறந்துவிட்ட மீங்களுக்கு ஒப்பாக மதிக்கப்படுகிறார்கள் என்ற குறிப்பிருப்பதையும் நோக்கலாம்.
====== ===========