மொட்டைமாடி- Mano Red

மொட்டைமாடிக்கும்
ஒட்டுக் கேட்கத் தெரியும் என்பதாலே
கிசுகிசுப்புகள் கேட்டதும்
பொறாமையில் கதவை அசைத்து
பயங்காட்டி எச்சரிக்கிறது..!
மொட்டைமாடியில்
பூந்தொட்டிக்கு பின்னால்
கொடுத்த முத்தங்கள் எல்லாம்
இன்னும் பூக்களாகவே அலைகிறது..!!
மொட்டைமாடியில் காயும்
துணிகளுக்கு தெரியும்,
காய்ந்து கிடக்கும் காதலின் ஆசை
எவ்வளவு என்று ..!!
நிர்வாணமாய்
வானம் பார்த்து கிடக்கும்
மொட்டைமாடிகளுக்கும்
மானமுண்டு என்பதற்காகவே
தினமும் காலை சுடுகின்றது..!!
மொட்டைமாடிகளின் வயதை
எந்த முடியை வைத்து சொல்வது..??
சின்ன முடிகள் முதல்
பெரிய முடிகள் வரை
எல்லோருக்கும் பொதுவான தூரத்தில்...!!
நட்சத்திங்கள் எண்ணுகிறோம்
என்ற பொய்க்கணக்கில்
மொட்டைமாடி முழுதும்
திருட்டு முத்தம்
நிரம்பி வழிகிறது..!!
சுற்றுப்புறம் அறியாத
அகத்தின் ஆசைக்காக,
வெயிலடிக்கும்
மொட்டைமாடியும் ஒரு
காதல் நூலகமே..!