இன்னிசை இருநூறு - இரண்டாவது அதிகாரம் – அறம் - பாடல் 1

மெய்யறிவ னூலின் விதித்த விலக்கிய
செய்தலுஞ் செய்யா விடலுந் திகழறன்
மைதீர் மனநாவாற் காயத்தால் வாய்ப்பன
செய்கவெஞ் ஞான்றுந் தெரிந்து. 1

பதவுரை:

மெய்யறிவன் நூலின் – மெய்யறிவனாகிய திருவள்ளுவரின் நூலாம் திருக்குறளில் சொல்லப்பட்டவைகள்

விதித்த விலக்கிய – அறநூல்களில் சொல்லி விதியாக்கப் பட்டுள்ளவைகளை, சொல்லித் தவிர்க்கும்படி விலக்கப்பட்டவைகளை

செய்தலுஞ் செய்யா விடலும் – விதித்தவற்றை செய்பவர்களாகவும், விலக்கப்பட்டவற்றைச் செய்யாதவர்களாகவும்

திகழ் அறன் – நீங்கள் விளங்குவீர்களாயின் அதுவே அறமாகும்; அறவழி நின்றவர்களாகவும் ஆகும்.

மைதீர் – குற்றமில்லாதபடி

மன, நாவால், காயத்தால் – மனத்துள் கொள்ளும் நினைவாலும், சொல்லும் சொற்களாலும், உடலால் ஆற்றும் நற்செயல்களாலும்

வாய்ப்பன – உங்களுக்கு வாய்த்த வழிகளிலெல்லாம்

எஞ் ஞான்றுந் தெரிந்து – எப்பொழுதும் முழுவதுமாக அறிந்து

செய்க – ஆற்றுவீர்களாக

தெளிவுரை:

மெய்யறிவனாகிய திருவள்ளுவரின் நூலாம் திருக்குறளில் சொல்லப்பட்டவைகளையும், அறநூல்களில் சொல்லி விதியாக்கி விதித்தவற்றையும் செய்பவர்களாகவும், சொல்லித் தவிர்க்கும்படி விலக்கப்பட்டவைகளைச் செய்யாதவர்களாகவும் நீங்கள் விளங்குவீர்களாயின் அதுவே அறமாகும்; அறவழி நின்றவர்களாகவும் ஆகும்.

ஆதலால், குற்றமில்லாதபடி மனத்துள் கொள்ளும் நினைவாலும், சொல்லும் சொற்களாலும், உடலால் ஆற்றும் நற்செயல்களாலும் உங்களுக்கு வாய்த்த வழிகளிலெல்லாம் எப்பொழுதும் முழுவதுமாக அறிந்து நற்செயல்களை ஆற்றுவீர்களாக என்கிறார் பெரும்புலவர் அரசஞ் சண்முகனார்.

விளக்க உரை: திரு.கா.எசேக்கியல்

குறிப்பு:

இன்னிசை இருநூறு என்ற இந்நூல் 200 இன்னிசை வெண்பாக்களைக் கொண்டது. இந்நூல் மதுரைத் தமிழ்ச் சங்க வித்வான்களில் ஒருவராகிய சோழவந்தான் திரு.அ.சண்முகம் பிள்ளையவர்கள் இயற்றியது.

இந்நூல் மதுரையில் விவேகபாநுப் பிரஸ் நடத்தி வந்த பத்திராதிபர் திரு. மு.ரா.கந்தசாமிக் கவிராயர் என்பவரால் 01.07.1913 ல் புத்தகமாக வெளியிடப்பட்டது.

இப்பாடல்களுக்கு உரையெழுதும் முயற்சியாக நண்பர் திரு.கா.எசேக்கியல் அவர்களைக் கேட்டுக் கொண்டேன். அதற்கிசைந்து அவர் எனக்களித்த பாடல் 11 ன் உரையை இங்கு சமர்ப்பிக்கிறேன். இத்தளத்திலுள்ள நண்பர்கள் அனைவரும் வாசித்துப் பயன் பெறும்படியும், கருத்தளிக்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Aug-15, 3:12 pm)
பார்வை : 214

மேலே