தமிழை விரும்பும் சீனப் பெண்
தமிழை விரும்பும் சீனப் பெண்
தமிழில் பேசுவதையே பல தமிழர்கள் தரக்குறைவாக நினைக்கும் போது சீன மாணவியான நிலானி, தன் தமிழ் அறிவை மேம்படுத்திக்கொள்வதற்காக இந்தியா வந்திருக்கிறார். சீன வானொலி தமிழ்ப் பிரிவில் அறிவிப்பாளராகப் பணிபுரியும் அவர் தற்போது வந்திருப்பது பேச்சுத் தமிழ் கற்க.
“நான் சீனாவில் தமிழ் மொழியில் படித்துப் பட்டம் பெற்றேன். ஆனால் எனக்கு தமிழ்நாட்டில் புழங்கும் பேச்சுத் தமிழ் அவ்வளவாகத் தெரியவில்லை. கொச்சைத் தமிழில் பேசுவதைக் கேட்கும்போது ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கு” என்று புன்னகைக்கிறார் நிலானி.
சீன வானொலி தமிழ்ப் பிரிவில் கடந்த பத்து ஆண்டுகளாக அறிவிப்பாளராகப் பணிபுரியும் நிலானி, கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் ஆறு மாதத் தமிழ் டிப்ளமோ படிப்பு படித்துவருகிறார். நிலானியில் பேச்சில் தமிழ் மொழி மீது அவருக்கு இருக்கும் தீராத காதல் வெளிப்படுகிறது.
“தமிழ் மொழி அருமையானது. அதன் உச்சரிப்பில் உள்ள இன்பம் உலகில் வேறெங்கும் காண முடியாது. தமிழ் மொழிக்கு எந்நாளும் ஆங்கிலம் மாற்றாகாது. ஆங்கிலத்தை முன்வைத்துத் தமிழை அலட்சியப்படுத்துவதால் ஒரு இனம் அழிவதோடு, உன்னதமான பண்பாடும் கலாச்சாரமும் அழிந்துவிடும்” - தமிழை நாம் போற்றி வளர்க்கவேண்டியதன் அவசியத்தைச் சொல்கிறார் நிலானி.
தமிழ் மீது ஆர்வம்
நிலானிக்கு அவருடைய பெற்றோர் வைத்த பெயர் ஹூ லீ யுவான். சீனா தகவல் தொடர்பாளர் பல்கலைக் கழகத்தில் (Communication University of China) தமிழ் இனத் தொடர்பியல் பட்டம் படிப்புக்கு சேரும்வரை அவருக்குத் தமிழ் தெரியாது. அங்கு சுந்தரம் என்ற பேராசிரியர்தான் தமிழ் கற்க சீனர்களுக்கு காலங்காலமாக வழிகாட்டியாக இருந்துவருகிறார். அவரிடம்தான் நிலானியும் தமிழ் பயின்றார்.
குருவின் வழிகாட்டுதல்
“சுந்தரம் ஆசிரியரும் சீனர்தான். அவர் தமிழ் படித்து, சீனர்களிலேயே பல தமிழ் மாணவர்களை உருவாக்கிவருகிறார். நான் தமிழ் இனத் தொடர்பியல் மற்றும் செய்தி மொழிபெயர்ப்புப் பாடங்களை எடுத்து பல்கலையில் நான்காண்டுகள் படித்து பட்டம் பெற்றேன். என் பெற்றோருக்குத் தமிழ் தெரியாது. நான் தமிழ் படிக்கப்போகிறேன் என்றதும் மகிழ்ச்சியடைந்தார்கள். அவர்கள் கொடுத்த ஊக்கமும் உற்சாகமும் என் தமிழ் ஈடுபாட்டை அதிகரித்தன. படிப்பு முடிந்ததும் சீனா வானொலியில் தமிழ்ப் பிரிவில் எனக்கு அறிவிப்பாளர் பணி கிடைத்தது. அதில் விநாடி-வினா, சீன சமையல் குறிப்புகள் போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவேன். முக்கியமாக அங்கே நிகழ்ச்சி அறிவிப்பாளர் பணிதான் என்னுடையது” என்று பூரிக்கிறார் நிலானி.
நிலானிக்குத் தமிழில் மிகவும் பிடித்தது திருக்குறள். மனிதன் வாழ்வதற்குத் தேவையான அத்தனை அறங்களையும் அதில் சொல்லியிருப்பதாலேயே திருக்குறளைப் பிடிக்கும் என்கிறார். உதாரணத்துக்குச் சில குறள்களையும் மேற்கோள் காட்டிப் பேசுகிறார். தமிழ்நாட்டில் பேசும் கொச்சைத் தமிழை விளங்கிக்கொள்ள நேரமெடுக்கிறது என்று சொல்லும் நிலானிக்கு மூன்று மாத பேச்சுத் தமிழ்ப் பயிற்சி ஓரளவு கைகொடுக்கிறது.
தமிழ் படிப்பதே பெருமை!
சீனாவில் பலர் தமிழைப் படிப்பதைப் பெருமையாக நினைக்கிறார்கள் என்று குறிப்பிடும் நிலானி, பெய்ஜிங், ஹாங்காங் ஆகிய இடங்களில் தமிழ்ச் சங்கங்கள் இருப்பதையும் நினைவுகூர்கிறார்.
“அந்த அளவு சீனாவில் தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் நடத்தும் கூட்டங்களுக்கு நாங்கள் போவோம். அந்த நிகழ்ச்சிகளை சீன வானொலியில் ஒலிபரப்பும் செய்வோம்” என்கிறார் நிலானி.
தமிழில் ர, ற ஆகிய இரண்டு எழுத்துக்களையும் உச்சரிக்க நிறையவே தடுமாறியிருக்கிறார். அவற்றைப் படிக்க மட்டும் நிலானிக்கு ஒரு மாதமானதாம்.
“இப்படியொரு உச்சரிப்பு சீன மொழியில் இல்லை. அதேபோல தமிழ் எழுத்துக்கள் சித்திரம் போல் இருக்கின்றன. அவற்றை எழுதவும் எங்களுக்கு நிறைய பயிற்சி தேவைப்பட்டது” என்று நிலானி சொன்னாலும் அவரது தமிழ் உச்சரிப்பில் பிழையேதும் இல்லை..
நன்றி: சுதா கணேஷ் - முகநூல் - தமிழ்ப் பணி மன்றம் பகுதியில்