அன்று கண்ட அவள்
அன்று கண்ட அவள்
=================
மது விலக்கை
அமல்படுத்திக் கொண்டிருந்தார்கள்...
அப்பொழுதான்
அவளுள் மூழ்கிக் கொண்டிருந்தேன்
கண்ணாமூச்சி ஆட்டத்தில்
கண்களை யாரோ கட்டிக்கொள்ள
ரெடி ஒன் டூ த்ரீ என்று ஓடுகிறாள்
என் ஒளிவிடமும் அவள் பின்னாலேயே ஆகிறது
முத்தம் என்பதை அறியா வயதில்
காமமில்லா முட்டா(த்தா)ய் மாற்றம் செய்திருந்தோம்
அவள் புது துணி வாசம் நுகர்ந்திருப்பேன்
அடுத்தும் யாரோ சிக்கிக் கொள்வார்கள்
அங்கேயேதான் ஒளிந்திருப்போம்
வெள்ளி ஞாயிறுகளில்
தொலைக்காட்சிப் பெட்டி
எங்கள் வீட்டில் மட்டுமே
இருப்பதை எண்ணி கர்வப்பட்டுமிருக்கிறேன்
ஊரே கூடியிருக்க,,
அவளுக்கு மாத்திரமாய்
மெத்தையில்லா கட்டில் மேலே
கோணிப்பையில் இருக்கையிட்டு வைக்கிறேன்
ராதாவின் சுடிதார் மிடியினுள்ளும்
கார்த்திக்கின் சட்டைப்பேண்டினுள்ளும்
அவளையும் என்னையும் உடுத்திக் கொள்வேன்
என் தலையணையின் ஒருப்பக்கம்
அவள் முகத்திற்கு இடமளிக்கும்
எங்கள் தோட்டத்து முள் வேலி
அவளுக்காய் மட்டும் வளைந்திருக்கும்
ஆண்டுகள் பல போனாலும்
நினைவுகள் உள் மாண்டிருக்கும்
விறகு சுமந்த சிலையானாள்
கிளைகளேந்தும் கிளியானாள்
விருந்துக்காரிக்கு உறவானேன்
தொட்டுவிடாத பார்வையினாலே
வாழ்த்துரைத்தேன் புன்னகைத்தாள்
கட்டிக் கொண்டவன் ஒட்டிக்கொண்டதும்
அவள் உலரும் விழியில் உயிரில்லை
அனுசரன்