ஆழ்மனக் கதவு

..........................................................................................................................................................................................

மேகத்திலிருந்து எட்டிப் பார்த்தது கீற்று நிலவு. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடினாள் அவள். சமயங்களில் உருளவும் செய்தாள். தலை முடியில் சிக்கிக் கொண்ட முட்செடி ஓடுகிற வேகத்தில் அசைந்து அவள் முதுகைப் பதம் பார்த்தது.

மரக்கதவே இருபதடி உயரமிருக்கும். திறக்க நாலு ஆள் வேண்டும். தட்டிக் கொண்டிருந்தாள்.. தட்டினாள்... தட்டினாள்..!

மரக் கதவுக்கு அந்தப் பக்கம் ஒரு ஆள் இருந்தான். அவன் கையில் ஒரு பெண் திமிறிக் கொண்டிருந்தாள். மரக்கதவை அவள் திறக்காத வண்ணம் அந்த ஆள் அந்தப் பெண்ணை கூந்தலைப் பற்றி இழுத்து இருட்டில் நழுவினான்.

தட்டிக் கொண்டிருந்த பெண்ணின் மேல் பக்கவாட்டிலிருந்து பிசுபிசுவென்று ஏதோ விழுந்தது. அந்தப் பெண் திரும்பிப் பார்த்தாள்..! அடைக்கலம் கிடைத்த பாதுகாப்பு மனதில் மறைவதற்குள்... எரியும் தீவட்டி அவள் மேல் விழுந்தது. தீப்பிழம்பானாள்..!

“ விட மாட்டேன்..! விட மாட்டேண்டா...”

திடுக்கென்று எழுந்தாள் சௌபர்ணிகா. கனவு ! உடம்பு கிடுகிடுவென்று நடுங்கியது. இத்தோடு இந்தக் கனவு எட்டாவது முறையாக அவளுக்கு வருகிறது. வேகமாக ஓடிச் சென்று டைரியைப் பிரித்தாள். செப்டம்பர் ஏழு இரண்டாயிரத்திப் பதினான்கு ... அன்றுதான் முதன் முதலாக இந்தக் கனவு வந்தது. டைரியில் குறித்து வைத்திருக்கிறாள். இம்முறை நெருப்பின் சூடு கூட கனவில் தெரிந்தது – இதற்கு என்னதான் அர்த்தம்?

அம்மாவிடம் சொன்னால் படுக்கும் இடத்தை மாற்றிப் பார் என்று சொல்லி விபூதி போட்டாள். ஆனால் கனவு விலகின பாடில்லையே?

கொஞ்ச நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தாள். லேசான தலைவலியை உதறினாள். இன்று கல்லூரி
மாணவிகள் சுற்றுலா போகிறார்கள்.

கல்லூரிப் பேருந்து ஆந்திர எல்லையை சமீபித்து இடப்புறமாக திரும்பியது. பழைமை வாய்ந்த சௌடேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கு எதிரில் நின்றது.

“ இறங்குங்க..! ”

சௌபர்ணிகா குதித்துக் கீழிறங்கினாள். கூட அவள் தோழி ராஜேஸ்வரி..!

“ இந்த பக்கம் வா ! ”

“ இந்த பக்கம் வா ! ”

ராஜேஸ்வரி கை பற்றி இழுத்துக் கொண்டு செல்ல, பின்னால் ஓடினாள் சௌபர்ணிகா.

மற்றவர்கள் என்ன ஆனார்கள்?

கோட்டை எது மலை எது என்று தெரியாத வண்ணம் ஐம்பதடி உயர மலைக் கோட்டை..! சுற்றி சுற்றி சுற்றி... ஐயோ! முட்செடி..! இது இப்போது தலையில் சிக்கிக் கொள்ளும்..!

சிக்கிக் கொண்டது..!

இருபதடி உயர மரக்கதவு..!

“ நினைவுக்கு வருகிறதா? நினைவுக்கு வருகிறதா? நினைவுக்கு வருகிறதா இளவரசி? ”

ராஜேஸ்வரியின் குரலா இது? ஆணா பெண்ணா என்று யூகிக்கக் கூடாமல்... அடிவயிற்றுக் குரலாக..!

ஆரஞ்சு சுரிதார் அணிந்த ராஜேஸ்வரி அங்கில்லை. மார்க்கச்சையோடு பித்தளை போர் கவசம் தரித்து கையில் வாளோடு நின்றிருந்தாள்.

சௌபர்ணிகா உடலில் நீலப்பட்டாடையும் பவள நகைகளும் ஜொலித்தன.

“ அவன்தான் இளவரசி..! அவன்தான்..! திட்டிக் கதவைத் திறந்து உங்களை மீட்கும் முயற்சியில் இறங்கிய என்னைத் தடுத்தது அவன்தான். உங்களைத் தீயிலிட்டதும் அவன்தான்.. உங்கள் மெய்க்காப்பாளன்...! அவனுக்கு அதே தீயை இன்றிரவு பரிசளித்து விடுங்கள்..! ”

சட்டென்ற பேருந்து குலுக்கலில் திரும்பவும் கண் விழித்தாள். பவானி மேடம் சௌடேஸ்வரி ஆலயத்தைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். சக மாணவன் நீரஜ் அலைபேசியில் பாகுபலி பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய ஹெட் செட் அவ்வபோது நழுவி வசனங்களை காற்றில் விட்டது.

சௌபர்ணிகாவுக்கு நெஞ்சு திக் திக்கிட்டது. மேடத்தின் வார்த்தையும் பாகுபலியும் கற்பனையில் குளித்து கனவென வந்ததா? ஆனால் ராஜேஸ்வரிதான் இந்த சுற்றுலாவுக்கு வரவில்லையே? உடம்பு சரியில்லை என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாளே?

ஆனால் கனவு அவ்வளவு தத்ரூபமாக இருந்ததே? அந்தப் பட்டாடையின் வழவழப்பு..! தன் கழுத்தில் கிடந்த பவள அட்டிகையை நினைவு கூர்ந்தாள் அவள். டைரியில் வரைந்தாள். செக்கச் செவேலென்ற கல் பதித்த இரு அன்னங்கள் இடையில் தாமரைப் பூவோடு..! இந்த நகையை எங்கோ பார்த்திருக்கிறாளே ?? எங்கு?

மெதுவாக எழுந்தாள்.

பவானி மேடம் கையில் சௌடேஸ்வரி அம்மனின் சித்திரம் இருந்தது. எட்டிப் பார்த்தாள். முதுகுத்தண்டு சில்லிட்டது..! ஏனெனில் சௌடேஸ்வரி அம்மனின் ஒட்டியாணம்..! பவள அன்னங்கள் பளிச்சிட்டன.

“ மேம் ! சௌடேஸ்வரி கோயிலுக்கு நாம எல்லோரும் போறோமா? ”

“ இல்லைம்மா. நான் மட்டும்தான் போறேன்.. என்றார் பவானி. நீங்க கெஸ்ட் ஹவுஸ் போய் தங்கிக்கங்க..! ”

“ நானும் வர்றேனே? ”

பவானி மேடம் சம்மதிக்கவில்லை. . “ கோயில் ஒரு மாதிரி இருக்கும்..! நீ பயந்துடுவே சௌபர்ணிகா...! ”
ப்ப....பயமா? கோயிலுக்குள் என்ன பயம்?

பவானி மேடம் பஸ்ஸிலிருந்து இறங்கினார். பிறர் தடுக்கத் தடுக்க, கத்த கத்த சௌபர்ணிகாவும் ஓடும்
பஸ்ஸிலிருந்து குதித்தாள். சில திட்டுக்களுக்குப் பிறகு பவானி மேடம் அவளை அழைத்துச் செல்ல வேண்டியதாயிற்று.

சுற்றிலும் ஆல மரங்கள்..! நடுவில் கோயில்..!

மேடமும் அவளும் காரில் பயணமாயினர். பேருந்து அவர்களை விட்டு தன் வழி போனது.

“ மேம்.. ஆல மரங்களுக்குள்ளதான் கோயிலா? ”

“ எனக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்து இங்கு சுற்றிலும் ஆல மரங்கள்தான். ஆனா எங்க பாட்டி சொல்வாங்க.. இங்க பெரிய கோட்டை இருந்ததாம்... சூளூர் கோட்டைன்னு பேரு..! கதவு மட்டும் இருபதடி உயரமாம்..! ”

அந்த கடைசி வார்த்தை துணுக்கென்றது.

“ இந்த கோயிலை யார் கட்டினா? ”

“ யாரோ தெலுங்கு ராஜா ..! அவரோட கடைசி பெண் வாரிசு இந்த இடத்தில வச்சே தீக்கிரையானா..! அவளைக் கொன்னது அவளோட மெய்க்காப்பாளனோ, சேடியோ??? ”

மெய்க்காப்பாளன்தான் மேடம்.. மெய்க்காப்பாளன்தான்.. மனதுக்குள் கத்தினாள். கண்கள் நிலை குத்தின. கைகள் துப்பட்டா முனையை இறுகப் பற்றி கிழித்தன.

ஏதோ நடக்கப் போகிறது..! “ சௌபர்ணிகா..! திரும்பிப் போடி..! ”

இப்போது எப்படி திரும்பி எங்கே போவது?

கார் நின்றது. மேடம் இறங்கினார். டிரைவர் ஒரு பூஜைக்கூடையை எடுத்தான். அடுத்து அவன் கையிலிருந்த பொருளை பீதியுடன் கவனித்தாள் சௌபர்ணிகா.

ஒரு கேன் நிறைய மண்ணெண்ணெய்..!

“ இ..இது எதுக்கு? ”

அரை குறை ஒளியில் சௌபர்ணிகா முகத்துக் கலவரம் பிறருக்குத் தெரியவில்லை. ஏகத்துக்கு நடுங்கிய குரல் வீசும் குளிர் காற்றுக்கு சாட்சியாக கொள்ளப்பட்டது.

“ வெளிச்சம் வேணாமா? தீப்பந்தம் ஏத்துறதுக்குத்தான்...! ”

பவானி மேடத்தை அவள் தொடர டிரைவர் பின்னால் நடந்தார்.

“ ஐயையே ” என்றபடி பவானி மேடம் ஓரிடத்தில் நின்று விட்டார். “ என்ன.. என்ன மேடம்? ”

“ என்னத்தையோ மிதிச்சிட்டேன். நான் சுனையில போய் கழுவிட்டு வந்திடறேன். நீயும் டிரைவரும் கோயிலுக்குப் போங்க..! ”

“ இல்ல மேம்.. நா..நானும்.. ” என்பதற்குள் மேடம் சென்று விட்டார்.

“ அவங்க பயப்பட மாட்டாங்க..! நீங்க வாங்க... ! ” டிரைவர் அழைத்தான்.

இந்த... இந்த டிரைவரை நம்பிப் போவதா?

கப்பென இருள் கவிந்தது.

ஏதோ ஒன்றில் கால் தடுக்கியது. பூமியில் புதைந்த நீளமான கட்டை..!

இதுதான் மரக்கதவு இருந்த இடமோ?

“ வீல் ” என்று கதறி விட்டாள் சௌபர்ணிகா.

ஏனெனில் டிரைவர் கேனை முன்னும் பின்னுமாக ஆட்டியதுதான்..! இப்போது அவன் கையில் எரியும் தீக்குச்சி.

சௌபர்ணிகா அருகில் கிடந்த கட்டையை எடுத்து டிரைவரை தாக்க முனைந்தாள்.

சரியாக டிரைவரின் பின் மண்டையை கட்டை பதம் பார்க்க முனைந்தபோது... தீப்பந்தம் எரிந்தது.

“ என்னம்மா? என்ன ஆச்சு? ”

சற்று முன் தன் மேல் நடக்கவிருந்த தாக்குதலை அறியாத டிரைவர் பதறிப் போய் கேட்க, பெருமூச்சு விட்டாள் சௌபர்ணிகா.

தீப்பந்தத்தில் எண்ணெய் விடத்தான் கேனை முன்னும் பின்னும் ஆட்டினானா?

பந்தத்தின் ஒளியில் டிரைவரை பார்த்தாள் சௌபர்ணிகா. முப்பது வயது மதிக்கத் தக்க உருவம். கரணையான கையும், காலும்..!

டிரைவரும் அப்போதுதான் அவ்வளவு அண்மையில் அவளை கவனித்தான். அவள் கழுத்துக்கும் சுரிதாரின் கழுத்துக்கும் இடையில் உள்ள பாகம் கண்ணுக்கு நேரே பட்டதும் பார்வையைத் திருப்பினான்.....!

வெலவெலத்தாள் சௌபர்ணிகா. ஏனோ அவன் மேல் ஒரு வெறுப்பும் பயமும் ஒரு சேரத் தோன்றின.

ஆளில்லாத தனிமை வேறு..! மனிதனைக் கொடூரமாக்கும் சூழ்நிலையின் முதல் காய் நகர்ந்து விட்டதா?

சட்டென்று ஓடத் தொடங்கினாள்.

“ஹலோ... நில்லுங்க..! நில்லுங்க..! ”

யார் மீதோ மோதி, திரும்பவும் எழுந்து ஓடினாள்.

ஓடி ஓடி ஓரிடம் நின்றபோது...

அது... அது யார்?

ஒருவன் ஒரு பெண்ணை இழுத்துக் கொண்டு போவது தெரிந்தது.

டிரைவர்தான் அது..! அது பவானி மேடம்..!

முடியைப் பிடித்தா இழுத்துக் கொண்டு போகிறான்?

சரியாகத் தெரியவில்லை. தீப்பந்தம் டிரைவர் கையில் இல்லை. தரையில் செருகி வைத்திருந்தான். பக்கத்திலேயே கேனும்..!

வேகமாக ஓடினாள். மூளை முழுதும் கனவு ஓடியது.. இப்படித்தான்... இப்படித்தான்... அன்றும் ஓடினாள்.. ! பின்னர் தீக்கிரையானாள்..!

தாமதிக்காதே..! தாமதிக்காதே.. சௌபர்ணிகா தாமதிக்காதே..!

கேனிலிருக்கிற மண்ணெண்ணெய்யை அவன் மேல் வீசி அவனை பஸ்பமாக்க வேண்டியதுதான்..!

கேனைத் தொட்டு எடுத்தபோது..

“ சௌபர்ணிகா..! ” மேடத்தின் குரல்..!

மேடத்தின் குரலில் பதற்றமில்லையே?

“ என்ன சௌபர்ணிகா இது? எதைப் பார்த்து பயந்தே? என்னையே இடிச்சு தள்ளிட்டு ஓடிட்டே? முழங்கால்ல அடி பட்டிடுச்சு. டிரைவர்தான் தாங்கிப் பிடிச்சு கூட்டி வர்றார்..! ”

சௌபர்ணிகாவுக்கு தலை வெடித்து விடும் போல் இருந்தது. இல்லையே? இப்படி இல்லையே? மேடம் அலற வேண்டுமே? டிரைவர் அவளை தாக்கியிருக்க வேண்டுமே???

ஒரு வேளை இனிமேல் தானோ????

இந்த டிரைவர் என் எதிரி இல்லையா? என்னைத் தீக்கிரை ஆக்கியவனாயிற்றே?

இப்போதும் என்னை எரிக்க இங்கு வந்திருக்கிறான்...! ! ! !

“ மேம்..மேம்...! அவன் என்னை எரிச்சுடுவான்..! அவனுக்கு முன்னாடி நான் அவனை எரிக்கணும்..! ”

கேனிலிருந்த திரவத்தை அவன் மேல் வீசி, தீப்பந்தத்தை தூக்கிப் போட்டாள்....!

“ சௌபர்ணிகா..! சௌபர்ணிகா..! ” யாரோ கன்னத்தை தட்டி அழைக்கும் சப்தம்..!

சௌபர்ணிகா வீட்டிலிருந்தாள். அவள் பெற்றோரும் தங்கையும் பக்கத்திலிருந்தனர்.

“ சௌடேஸ்வரி கோயில் போற வழியில மயங்கி விழுந்திட்டியாம்..! பவானி மேடமும் அவங்க டிரைவரும் உன்னை பத்திரமா தூக்கிட்டு வந்திருக்காங்க..! அந்த டிரைவர் மேல தண்ணியை வீசியிருக்கே... தீப்பந்தத்தை தூக்கிப் போட்டிருக்கே..! கெரசின் கேனா இருந்தா என்ன ஆகியிருக்கும்? ஏம்மா, பவானி மேடம்தான் படிச்சு படிச்சு சொன்னாங்களாமே, அந்த கோயிலுக்கு வர வேண்டாம்னு? நீ ஏன் பிடிவாதம் பிடிச்சி போனே? ” அப்பா கேட்டார்.

அன்றிலிருந்து ஏனோ அந்தக் கனவு வருவதே இல்லை..!

................................................................................................................................................................................................

பின்குறிப்பு: சௌபர்ணிகாவுக்கு ஒரு மூன்று வயதிருக்கும்..! அவளை அழைத்துக் கொண்டு அவள் குடும்பம் நாடகம் பார்க்கப் போயிருந்தது. அவள் தன் பெரியப்பா மடியில் உட்கார்ந்திருந்தாள். சரித்திர நாடகம்..! சூளூர் கோட்டை கமல நாச்சி நாடகம்தான். மேடை திரைச் சீலையில் மரக்கதவுடன் அந்த கோட்டை வரையப்பட்டிருந்தது. நாடகம் முடிந்ததும் கமலநாச்சியாக நடித்த பெண் அதே நகை நட்டோடும் நீலப் பட்டாடையோடும் பெரியப்பாவிடம் பேசி விட்டுப் போனாள். நாடகத்தில் கமல நாச்சி ஓடிக் கொண்டிருந்த சமயம் பெரியப்பாவின் கை, குழந்தை சௌபர்ணிகாவின் மார்பிலும் தொடை இடுக்கிலும் நாராசமாக ஊறியது. அந்த அதிர்ச்சியும் பயமும் நாடகத்தோடு சம்பந்தப்பட்டு ஆழ்மனதில் பதிந்து விட்டது... அதுதான் கனவாக அவ்வபோது வெளிப்பட்டு அவளை அலைக்கழித்தது. சமீபத்தில் கிட்டதட்ட அதே சூழ்நிலையில் டிரைவரின் கண்ணியமான அணுகுமுறை அதை சமன் செய்து விட்டதால் கனவு வருவது நின்று விட்டது..!
..................................................................................................................................................................................................

நீதி: குழந்தைப் பருவம் நாசுக்கானது. அப்போது ஏற்படுகிற வக்கிரமும் வன்முறையும் சில சமயம்
கற்பனைக்கெட்டாத விளைவுகளை ஏற்படுத்தும்..!


முற்றும்

.................................................................................................................................................................................................

எழுதியவர் : அருணை ஜெயசீலி (5-Aug-15, 9:30 pm)
பார்வை : 1820

மேலே