புன்னகைப் பார்வை
![](https://eluthu.com/images/loading.gif)
அன்பரசு - பெயருக்கேற்றாற்போல் அனைவரிடமும் அன்பை மட்டுமே வெளிப்படுத்துபவன். வாழ்க்கையில் ஏதேதோ இலட்சியங்களை அடைய வேண்டும் என எண்ணி தன் பருவக்காலத்தில் வேட்கைக்கொண்டிருந்தான். இஞ்சினியரிங் படிக்க வேண்டும், மிகைச் சிறந்த கட்டிட நிபுணராக வேண்டும் என்று ஏகப்பட்ட இலட்சியங்கள். அவன் பன்னிரண்டாவது படித்துக் கொண்டிருக்கும்போது அவனது தந்தை திடீரென ஒரு விபத்தில் இறந்து விடவே, தாய் மற்றும் தங்கையை உள்ளடக்கிய அவனது குடும்பத்தை வேலை செய்து காப்பாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டான். பள்ளியில் படித்துக் கொண்டிருந்தே பகுதி நேர வேலைக்கு சென்று இயன்ற அளவு வருமானத்தை வீட்டுக்குக் கொடுத்தான். பன்னிரண்டாம் வகுப்பில் ஆயிரத்து நூறு மதிப்பெண் பெற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக இஞ்சினியரிங் படிப்பில் சேர முடியவில்லை. பி.எஸ்.ஸி மேக்ஸ் மட்டுமே அவனால் சேர முடிந்தது.இதன் மூலம் அவனால் பிற்பகல் நான்கு மணிக்கு மேல் ஒரு மருத்துவமனையில் வார்டு பாய்'யாக வேலை பார்க்க முடிந்தது. படிப்பை நல்லபடியாக முடித்தான். பின் ஒரு டி.வி உற்பத்தி செய்யும் கம்பெனி'யில் மார்க்கெட்டிங் பிரிவில் வேலைக்குச் சேர்ந்து அங்கு படிப்படியாக முன்னேறினான். தனது தங்கைக்கு கல்யாணம் முடித்து தானும் பத்மாவை திருமணம் செய்து கொண்டான். வாழ்க்கை நல்ல படியாக சென்று கொண்டிருந்தது.
காலங்கள் கடந்தன. அன்பரசுவிற்கு வயது நாற்பத்தி ஐந்தை தொட்டு விட்டது. அவனது ஒரே மகன் சுந்தர் பன்னிரண்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். அன்பரசு இப்போது வேறு ஒரு டி.வி உற்பத்தி செய்யும் கம்பெனி'யில் பிராந்திய மேலாளராக பணி புரிந்தான். நல்ல வருமானம். குடும்பத்தில் அமைதி. நிம்மதியுடன் வாழ்ந்து வந்தான். ஆனால் எதோ ஒரு ஏக்கம். தான் இஞ்சினியரிங் படிக்க ஆசைப்பட்டது நிராசையகப்போனதை அவனால் இப்பொழுதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவ்வப்போது இந்த உணர்வு அவனைக் காயப்படுத்தியது.அனால் சுந்தரை எப்படியாவது சிவில் இஞ்சினியரிங் படிக்க வைத்து கொஞ்சம் திருப்தி கொள்ளலாம் என்று நினைத்து வந்தான். ஆனால் சுந்தருக்கோ இஞ்சினியரிங் படிப்பில் நாட்டம் இல்லை.அனைவரும் படிக்கிறார்கள் என்பதற்காக எல்லாம் என்னால் இஞ்சினியரிங் படிக்க முடியாது என்று எண்ணி வந்தான். பி.எஸ்.ஸி கெமிஸ்ட்ரி படிக்க வேண்டும் என்பதே அவனது விருப்பம். கொஞ்சம் படிப்பு. கொஞ்சம் நண்பர்களுடன் ஆனந்தமாய் ஊர் சுற்றலாம் என்பது அவனுடைய எண்ணம். அவனுக்கு இறுதித் தேர்வு நெருங்கியது. ஒரு நாள் சுந்தரிடம் பேச்சு கொடுத்த அன்பரசு, அவனை சிவில் இஞ்சினியரிங் படிப்பில் சேருமாறு வலியுறுத்தினான். சுந்தர் தனக்கு அதில் விருப்பம் இல்லை என்பதை நன்கு தெளிவு படுத்தினான். அனால், அன்பரசு, சுந்தரை விட்ட பாடாய் இல்லை. அன்பரசு அன்பு கலந்த நிர்ப்பந்தத்தை சுந்தர் மீது திணிக்க முயன்றான். சுந்தரும் தனது தந்தையின் சொல்லை மீற மனம் இன்றி இருந்தியில் சிவில் இஞ்சினியரிங் படிப்பில் சேர சம்மதம் தெரிவித்தான். சுந்தரின் விருப்பம் இல்லாவிட்டாலும் அவன் சம்மதம் தெரிவித்தது அன்பரசுவிற்கு மகிழ்ச்சியைத் தந்தது. சுந்தர் விருப்பம் பற்றி அவன் சிறிது சட்டை செய்யவில்லை.
ஒரு வாரம் ஓடியது. அன்பரசு வேலை பார்த்து வந்த கம்பென்யில் அவனுக்கும் கம்பெனியின் நிர்வாக இயக்குனர் மதனுக்கும் ஒருநாள் பேச்சு வார்த்தை நடந்து. அதில், அன்பரசுவினால் அமெரிக்காவில் உள்ள தனது சக கம்பெனி ஊழியர்களிடம் திறம்பட பேச முடியவில்லை என்ற நிலையை அவனுக்கு மதன் உணர்த்த முயற்சித்தார். இத்தனை வருடங்களில் அவனுக்கு அமெரிக்க ஊழியர்களிடம் பேச வாய்ப்பு அமையவில்லை. சில நாட்களுக்கு முன்பு தான் அவன் அவர்களிடம் பேச சந்தர்ப்பம் அமைந்தது. அன்பரசு தன்னால் அமெரிக்கர்களின் உச்சரிப்பை புரிந்து கொள்ள முடியவில்லை இதுவே பிரச்சனை என்றான். மதனோ அமெரிக்க உச்சரிப்பை பயில ஒரு பயிற்சி நிறுவனத்தை அணுகுமாறு அன்பரசுவிற்கு அறிவுறுத்தினார்.
அனால் அன்பரசுவிற்கோ அதில் உடன்பாடில்லை. கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து வருடங்கள் அனுபவம் உள்ள என்னால் பயிற்சிக்காக எங்கும் செல்ல முடியாது என்று தனக்குள்ளே கோபித்துக்கொண்டான். மதனிடம் எதையும் காட்டிக்கொள்ளவில்லை. மேலும் சில நாட்கள் அவர்களுடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தாலே உச்சரிப்பு பழகிவிடும் என்று மதனிடம் தெரிவித்தான். அதிக நாட்கள் பிடிக்கும் என்பதால் இந்த யோசனையை மதன் நிராகரித்தார். கட்டாயம் பயிற்சிக்கு செல்லுமாறு கட்டளையிட்டு இடத்தை காலி செய்தார்.
மாலை வேலை முடிந்ததும் கடுங்கோபத்துடன் வீட்டுக்குச் சென்றான் அன்பரசு. அவன் மீதுள்ள மாற்றத்தைக் கண்டு என்ன ஏது என்று வினவினாள் பத்மா. அவளிடம் எரிச்சலை மட்டும் காட்டிக்கொண்டு, தொடர்ந்து அவள் மீது கோபத்தை கொட்டிக்கொண்டிருந்தான். அருகில் உள்ள அறையில் அமர்ந்திருந்த சுந்தர் அமைதியாய் என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக்கொண்டிருந்தான். பத்மா மீது தொடர்ந்து அவன் கோபத்தைக் காட்டிகொண்டிருந்த போதிலும் அவள் பொறுமை இழக்காமல் அமைதியாய் என்ன ஏது என்று அன்புடன் கேட்டு வந்தாள். இதனைக் கண்டு கோபத்தை சற்று இழந்த அன்பரசு, அலுவலகத்தில் மதனுடன் நடந்த உரையாடலை விவரித்தான். ஒவ்வொருவரும் அவர்களுக்கு என்ன வேண்டும் என்பதை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். நான் சரிவர வேலை செய்யவில்ல எனில் என்னை வேலையில் இருந்து அனுப்புவதற்கு மதனுக்கு உரிமை உண்டு. பயிற்சிக்கு இங்குபோ அங்குபோ என்று வற்புறுத்த அவருக்கு உரிமை இல்லை. ஏன் யாருக்கும் இல்லை என்று புலம்பினான். உடனே, அன்பரசுவை நோக்கி வந்த சுந்தர் "என்ன சொன்னீங்க?" என்று வினவி புன்னகைப் பார்வையிட்டான்...