மங்கையராய்ப் பிறப்பதற்கு

மங்கையராய்ப் பிறப்பதற்கு
மாதவம் செய்திட வேண்டும் என்றாயே,
ஊர் உலகில் எம் நிலைமை
உரைக்கும் தரமாமோ ..

உன்னளவில் என் நிலைமை
உணர்வாயோ தோழனே. ?

உன்
வீட்டுக்கு விளக்கேற்ற
நான் லட்சுமியாய் வரணும்
உன் பாதத்தில் எரியும்
கற்பின் புனித கற்பூரம் ஆகணும்.

உன் கண்ணுக்கு மட்டும்
அழகு குறையாத
மகாலட்சுமியாய் இருக்கணும்.
அந்நிய ஆண்களின்
பார்வை படாமல்
நெருப்பைக் கக்கும் எரிமலை ஆகணும்.

தாயினும் சாலப்பரிந்து
நான் அமுதூட்டணும்
உன் எச்சிலின் மிச்சம்
எனக்கு அமுதம் ஆகணும்.

உன் விருந்தினர் வந்தால்
என் முகம் எப்போதும்
பிளாஸ்டிக் பூவாய்
மலர்ந்தே இருக்கணும்.

நீ கொஞ்ச நினைக்கையில்
நான் குழந்தை ஆகணும்
உன் விளையாட்டுக்கெல்லாம்
ஒரு பொம்மை ஆகணும்.

நீ அழைக்கும் போதெல்லாம்
நான் அவிழ்ந்து கிடக்கணும்
உன் படுக்கையில் நான் ஒரு
தாசியாகணும்.

உன்
ஆசை நாயகிகளின் அக்கா ஆகணும்

காமச்சூட்டில் உன் மூளை உருகி
அறிவு மழுங்கும் போதெல்லாம்
ஆலோசனைகளை அடுக்கும்
அமைச்சராகணும்

உன் முதுகு சொறிந்திட
என் பவள நகங்கள்
மண்வெட்டி ஆகணும்

உன்
கால்களை பிடிக்கையில்
என் காந்தள் விரல்கள்
எந்திரம் ஆகணும்.

நீ நோயில் படுத்தால்
என் கமலக் கரங்கள்
கழிப்பறை ஆகணும்.

உன் சோகங்கள் தாங்க
நான் சுமைதாங்கி ஆகணும்.

நீ நெஞ்சில் நினைப்பதை
உடனே முடித்திடும்
அடிமையாக நான்
அவதாரம் எடுக்கணும்

நீ உதைத்திடும் போதும்
கால்களை நக்கும்
நாயாய்க் குழையணும்

நீ மிதித்தாலும் கிழித்தாலும்
பொறுமையில் நான்
பூமியாய் இருக்கணும்

உனக்காக நான்
இன்னும் என்னவெல்லாமோ ஆகணும்
நீ செத்தாலும் உன்னுடன்
நானும் வேகணும்.

ஆம்
மங்கையராய்ப் பிறப்பதற்கு
மாதவம் செய்திடத்தான் வேண்டும்.

எழுதியவர் : எழில்வேந்தன் (7-Aug-15, 11:45 am)
பார்வை : 589

மேலே