கடைசி வாக்கியம்
காலப் பறவை
எனது வானத்தை
வரைந்து திரிகிறது.
எனது சிறகுகளோ...
அடையும் கூடுகளுக்கானவை.
வாழ்வின் மின்னல்
சிறு பூவென அதிர....
சூரியனின் கோடை தாங்காத
எனது நட்சத்திரங்கள்
இரவைச் சுமந்து திரிகின்றன.
என்னோடு திரிந்த மழையை...
நான் எனது
தூக்கத்தின் நாட்குறிப்புகளில்
ஒளித்து வைத்திருக்கிறேன்.
எனது காலத்தை
ஒளித்து வைத்திருக்கும்
என் கடிகாரத்தின் விளிம்புகள்
கண் சிமிட்டியபடி இருக்க...
தரையில்
தாழப் பறக்கிறது
எனதென நினைக்கப்படும்
நாட்கள்.
யாரும் அறியாத
கடவுளின் மூச்சில்...
தண்ணீர் சிற்பமென
கலைகிறது பூமி.
சதா நகரும் பூமியிலோ
எனது வாழ்வின்
சுற்றுச் சுவர்கள்...
நடுங்கிக் குதிக்கின்றன.
என்னைச் சுற்றித்
திரியும் வெளிச்சங்கள்
எனக்கு வேறானவைதான்....
என்றாலும்
உங்களின் மனச்சுனையில்
தெறிக்கும் மழையில் தெரியலாம்
அவரவரும் அறியாத
அவரவரின் கடைசி வாக்கியம்.