கவியவளின் கன்னத்தோடு - தேன்மொழியன்

கவியவளின் கன்னத்தோடு
~~~~~~~~~~~~~~~~~~~~~

இருநூறடி இடைவெளியெனினும்...உன்
வீட்டு உச்சியில் முகம் தேடுமெந்தன்
ஏக்கம் நிறைந்த நிழலையும் ..நீ
ஓரப் பார்வைக்குள் ஒதுக்கி ஒளிவதேனோ ? ...

இடைமேலேந்திய எப்பொருளோடும்...நீ ..
வாசலில் வதனமென வருகையில்
இமைவிரித்து எனையிழந்த நொடிகளை
உடைக்குள் உனதாக்கி எனையுறுஞ்சுவதேனோ ..?

நெற்றிமேல் விரல் பதித்து .. நீ
கொட்டிய கோவில் பூவெடுக்கையில்
தீர்க்கமாய் திரளும் என்விழி தீபத்தை
வெட்கம் வீசி...அணைப்பதும் நீயோ ..?

நெல்லிக் கடித்ததும் ..துள்ளும் வேகத்தில்
வலப்புறமாய் நீ இதழ் சுழிக்கையில்
உறங்கிப் போன என் உணர்வையெல்லாம்
கிறங்க வைத்தது ...உன் சுவை ரசிப்போ.. ?

- தேன்மொழியன்

எழுதியவர் : தேன்மொழியன் (இராஜ்குமார் ) (9-Aug-15, 7:52 am)
பார்வை : 172

மேலே