வேட்கையின் விளிம்பில்
நிறைவேறாத வேட்கையின்
சலிப்பில்
நுரை சுழிக்கிறது
கோபம்.
அலையும்
அமைதியற்ற பார்வையின்
கொதிப்பில்...
கல்லெறிந்து
கலைகிறது மௌனம்.
வீசும் சொற்கள்
மதுக் கோப்பையில்
பற்றிய பொறியாக...
உங்களுக்கும் கேட்கலாம்...
இதயப் பறையின்
கருகும் சப்தம்.
வெப்பத்தில்
பெருகும் வியர்வை...
நினைவுகளின்
அமில நதியாக
இருத்தலின்
மதகு உடைந்து
உச்சத்தில் வட்டங்களாகி...
விளிம்பில் தெறிக்கிறது
உடல்.