என் குட்டிப் பயலே
ஞாயிற்றுக் கிழமை
என்பது
மறந்து போய் விட்டது எனக்கு.
வழக்கம் போலவே....
உன்னுடைய
"ஐ யாம் கோயிங் டு ஸ்கூல்...பை"...
கேட்கப் போன் செய்கிறேன்.
சிரித்த படியே...
"லூசு மாமா...
இன்னிக்கு ஞாயிற்றுக் கிழமை"
என்கிறாய்.
நான்
லூசாய் ஆனதில்
அத்தனை சந்தோஷம் எனக்கு.
***************************************************************
பிள்ளையாருக்கான
நைவேத்தியக் கொழுக்கட்டையை...
நைவேத்தியத்திற்கு முன்னால்
உனக்கு எடுத்துத் தருகிறேன்.
"தேங்க்ஸ்" சொல்லிவிட்டு
ஒளிந்து கொண்டு சாப்பிடுகிறாய்.
உன் அம்மாவுக்குத் தெரியவர
என்னைத் திட்டுகிறாள் கண்டபடி.
உன் அம்மா
அந்தப் பக்கம் திரும்பும் போது
இன்னும் இரண்டு கொழுக்கட்டைகள்
திருடுகிறேன்...உனக்காக,
உன் குட்டி "தேங்க்ஸ்"-க்காக
எத்தனை முறை வேண்டுமானாலும்
திருடுவேனடா...
என் குட்டிப் பயலே.
************************************************************