நதிக்கரை ஞாபகங்கள்

நதிகள் அழகானவை
எனில்
நதிகளை நான் பாடவில்லை
நதிக்கரைகளைப் பாடுகிறேன்
என் வசீகர இளமையில்
வால்கா நதிக்கரை
சிவப்பு ரோஜாக்களின்
நினைவுகளைத் தழுவிப்பார்க்கிறேன்
கார்க்கியின் " தாய்" க்கு
நானுமொரு மகனாகிறேன்
நைல் நதியின்
நனைந்த கரைகளில்
நீக்ரோவின் கனவுகளை
நினைத்துப் பார்க்கிறேன்
**கறுப்புச் சூரியனுக்கு**
கவிதைவிழா எடுக்கிறேன்
என் வெள்ளைக்கனவை
சிந்துவின் கரைகளில்
விதைக்கிறேன்
அங்கே
ஆயுதம் தரிக்காத
பாகிஸ்தானியர்கள் முளைக்கிறார்கள்
என் தேசீயத்தை
தஞ்சாவூர் தோட்டங்களில்
தேடுகிறேன்
காவிரிப்படுகையில் ஓடும்
மாநில வெறியில்
என் தேசம்
தெளிவாகத் தெரிகிறது
புண்ணிய நீராடி
பாவங்கள் கரையேறும்
கங்கைக் கரைகளில் - நான்
தெய்வங்களை சபிக்கிறேன்
நதிகள் அழகானவை
எனில்
நதிகளை நான் பாடவில்லை
நதிக்கரைகளைப் பாடுகிறேன்….!
___________________________________________
குறிப்பு :
** (முன்னோடி தமிழ்க் கவிகள் பலரும் பங்கேற்ற கவிதை நூல் கறுப்புச் சூரியன். 1991 ல் நான் தொகுத்து வெளியிட்டது. ஆப்பிரிக்க கறுப்பின மக்களின் தேவ தூதன் நெல்சன் மண்டேலாவுக்காக எடுத்த கவிதை விழா அது.)